1998 முதல் 2009 வரை இலங்கையில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட சமாதான முன்னெடுப்புகள் குறித்து இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம் தொடர்பாகவும் சமாதான முன்னெடுப்புகள் குறித்து மார்க் சால்டர் எழுதிய நூலை டுவிட்டரில் பகிர்ந்து, ஜெயான் ஜெயதிலக்க மற்றும் மார்க் சால்டருக்கும் இடையிலான இந்த விவாதம் கற்றுக்கொண்ட பாடங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவின் கீழ் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை மற்றும் வெள்ளைக் கொடி சம்பவத்திற்கு என்ன நடந்தது என்பது பற்றிய முழு வெளிப்பாடு தேவை என்றும் சமாதான முன்னெடுப்புகள் பற்றிய ஒவ்வொரு பதிவும் பொதுமக்களுக்கு வெளியிடப்பட வேண்டும் என்றும் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த எரிக் சொல்ஹெய்ம், இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைக்கான விடுதலைப்புலிகளின் திட்டம் மற்றும் “வெள்ளைக் கொடி” விவகாரம் ஆகிய இரண்டின் உண்மைகளும் மார்க் சால்ட்டரின் “ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர” என்ற புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது எனக் கூறினார்.

மேலும் இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற இனத்தவர்களுக்கு முறையான சுய ஆட்சி மற்றும் சிறுபான்மை உரிமைகளை நிறுவ இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்றும் வன்முறை இல்லாமல், போராட நிறைய இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு கடந்த காலத்தில் செய்த அதே தவறுகளை வரலாற்றில் மீண்டும் மீண்டும் செய்வதைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும் என்றும் எரிக் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.


யுத்தம் இடம்பெற்றபோது அமைதியாக அதை பார்த்துக்கொண்டு தாங்கள் இருக்கவில்லை என்றும் 2009 ஆம் ஆண்டில் விடுதலை புலிகள் மற்றும் அரசாங்கத்துடன் தாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது இந்திய மற்றும் அமெரிக்க ஆதரவுடன் அனைத்து தமிழ் பொதுமக்கள், விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகள் மற்றும் பணியாளர்களை வெளியேற்ற முன்வந்தபோதும் பிரபாகரன் அதை தடுத்துவிட்டார் என்றும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

அத்தோடு ஏப்ரல் 2009 இல் பிரபாகரன், தமிழ் மக்கள் மற்றும் விடுதலை புலி வீரர்கள் மற்றும் பணியாளர்களை வெளியேற்றுவது உள்ளிட்ட போருக்கு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முடிவை மறுத்துவிட்டார்.

இன்னொன்று மே மாதம் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பாலசிங்கம் நடேசன் மற்றும் புலிதேவன் ஆகியோர் சரணடைய ஒப்புக்கொண்டபோதும் “வெள்ளைக் கொடி” சம்பவத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர் என்றும் இந்த இரண்டு உண்மைகளும் மறுக்க முடியாதவை என்றும் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் போரை முடிவுக்கு கொண்டுவர பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்றும் இது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மற்றும் விடுதலை புலி உறுப்பினர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கும் என்றும் எரிக் சொல்ஹெய்ம் கூறினார்.

அந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, இந்தியா அனைத்தும் ஆயுதங்கள் இல்லாமல் அனைவரையும் வெளியேற்ற எங்களுக்கு உதவ தயாராக இருந்தன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share.
Leave A Reply

Exit mobile version