வீடொன்றுக்குள் புகுந்த நபர் ஒருவர் வீட்டுக்குள் இருந்த பெண்ணை கத்தியால் வெட்டியதில் அந்த பெண்ணின் ஒரு கை துண்டாகியுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று புத்தளம், கருவலகஸ்வெவ நெலுகம என்ற பிரதேசத்தில் நடந்துள்ளது. 37 வயதான பெண்ணே வெட்டுக் காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அயல் வீட்டில் வசித்து வரும் சந்தேக நபர் இன்று காலை பெண்ணின் வீட்டுக்குள் புகுந்துள்ளார். அப்போது ஒரு சம்பவம் தொடர்பாக இரண்டு பேருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதை அடுத்து சந்தேக நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணை வெட்டியுள்ளார். இதனையடுத்து பெண் வீட்டுக்குள் ஓடி சென்று உயிரை காப்பாற்றிக்கொண்டுள்ளார்.
எனினும் அவரது கை ஒன்று துண்டாகியுள்ளது. சம்பவத்தை அடுத்து சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார். பெண்ணின் சத்தத்தை கேட்ட அயலவர்களை அவரை ஆனமடுவை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
ஆபத்தான நிலையில் இருந்த பெண் அங்கிருந்து புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அந்த வைத்தியசாலையில் இருந்த இந்த பெண் துண்டான கையுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.