உலகில் உள்ள பழமையான வழிபாட்டுத் தலங்களில் பெரும்பாலானவை, மிகச் சிறப்பான, வியக்கத்தக்க கட்டுமான அமைப்பைக் கொண்டவை. இந்தியாவிலும் இப்படி வழிபாட்டுத் தலங்கள் உண்டு என்றாலும், தமிழ்நாட்டில் உள்ள பெருங்கோயில்கள் தனித்துவம் மிக்கவை. தமிழர் கட்டடக் கலை வளர்ச்சியின் உச்சத்தைக் காட்டுபவை.

ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒரு கோவில் கட்டடக் கலை மரபு உண்டு. அதேபோல தமிழகத்திற்கும் இதுபோன்ற மரபு உண்டு. இந்தியாவில் கிடைக்கக்கூடிய 80 விழுக்காடு கல்வெட்டுகள் தமிழக கோயில்களில்தான் கிடைத்திருக்கின்றன. ஒருவகையில் இவை இறைவனை வழிபடும் இடங்கள் மட்டும் அல்ல. அந்தக்கால அருங்காட்சியங்களும்கூட.

தமிழ் மக்களின் கலாசாரம், பண்பாடு, வாழ்கை முறை ஆகியவற்றை தமிழகக் கோயில்களில் தொடர்ந்து பிரதிபலித்து வந்திருக்கின்றன. தமிழில் சங்க காலப் பாடல்களிலேயே கோயில்களைப் பற்றிய குறிப்புகள் உண்டு.

“நூலறி புலவர் நுண்ணிதில் கயிறிட்டுத்

தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்

பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து”

என நெடுநல் வாடையில் கோவில் குறித்து குறிப்பிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் பல்லவ மன்னனான மகேந்திர வர்ம பல்லவனின் காலத்திற்குப் பின்பு கட்டப்பட்ட கோவில்களே தற்போது கிடைக்கின்றன என்றாலும் அவரது காலத்திற்கு முன்பும் கோயில்கள் உண்டு.

அவை அழியக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டதால் காலத்தால் அழிந்து போயின. காவிரி பூம்பட்டினத்தில் இருந்த பல்லவனீச்வரம் என்ற கோயில் இம்மாதிரி செங்கலால் கட்டப்பட்டு அழிந்த கோவில் என சுட்டிக்காட்டுகிறார் மயிலை சீனி. வேங்கடசாமி.

மகேந்திரவர்மப் பல்லவனின் காலத்தில்தான் கருங்கற்களைக் குடைந்து கோவில்களை அமைப்பது துவங்கியது. மகேந்திரவர்மன் இம்மாதிரி குகைக்கோவில்களைத் தவிர பிற கோவில்களை அமைத்திருந்தாலும் அவை பிற்காலத்தில் அழிந்துபோயின. அவன் அமைத்த குடவரைக் கோயில்கள் மட்டுமே எஞ்சி நின்றன.

மகேந்திரவர்ம பல்லவன் மட்டுமல்லாது அவனுக்குப் பின்னால் வந்த பல மன்னர்களும் குடவரைக் கோயில்களை உருவாக்கினர். தமிழ்நாட்டில் இதுபோல 45க்கும் மேற்பட்ட குடைவரைக் கோயில்கள் இப்போதும் உள்ளன. மகேந்திரவர்மப் பல்லவனைப் பொருத்தவரை அவனுடைய கோயில்களில் விமானங்கள் போன்றவை கிடையாது.

அவனுடைய மகனான நரசிம்மவர்மனே கருவறை, முன் மண்டபம், விமானம் ஆகியவற்றுடன் கூடிய குடைவரைக் கோயில்களை உருவாக்க ஆரம்பித்தான். இதற்குப் பிறகு ராஜசிம்மன் காலத்தில்தான் கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அமைத்து கட்டும் ‘கற்றளி’ என்ற வகையிலான கோவில்கள் தமிழகத்தில் கட்டப்பட ஆரம்பித்தன.

“கோயில் கட்டடக் கலைகளில் நாகரம்,வேசரம், திராவிடம் மூன்று விதங்கள் உண்டு. வட இந்தியாவிலும் மத்திய இந்தியப் பகுதியிலும் தற்போது உள்ள கோவில்கள் நாகரம் என்ற பாணியில் கட்டப்பட்டவை. திராவிட கட்டடக் கலையின் அடிப்படையில் அமைந்த கோயில்கள், பெரும்பாலும் தமிழகத்தில் அமைந்துள்ளன. இந்தத் திராவிட கோயில் கட்டடக் கலையில் ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது. அதாவது, ‘எங்கே நீ கோயிலைக் கட்டுகிறாயோ அதற்கேற்றபடி மூலப்பொருளையும் கட்டுமானங்களையும் மாற்றிக்கொள்’ என்பதுதான் இதன் அடிப்படை” என்கிறார் மாமல்லபுரம் அரசு கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியின் முதல்வரான டாக்டர் ஜே. ராஜேந்திரன்.

நம்முடைய பழங்காலக் கோயில்கள் மிகுந்த நுண்ணுணர்வுடன், நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கட்டப்பட்டவை. பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கியவை. “தமிழக கோயில்களில் அகச்சுவருக்கும் புறச்சுவருக்கும் இடையே இடைவெளி விட்டு கட்டும் தொழில்நுட்பம் இருந்தது. இந்தத் தொழில்நுட்பம்தான் எகிப்தில் பிரமிடுகளைக் கட்டுவதிலும் பயன்பட்டது. கீழடியிலும் இதுபோல கட்டமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது, கைலாசநாதர் கோயிலும் இதுபோலத்தான் சுவர்கள் இருக்கின்றன. இதனால், கர்ப்பகிரகத்தின் வெப்ப நிலை மாறாமல் இருக்கும்” என்று சுட்டிக்காட்டுகிறார் ராஜேந்திரன்.

இந்திய கோயில்களில் தமிழ்நாட்டு கோயில்களை வேறுபடுத்திக் காட்டுபவைகளில் மிகவும் முக்கியமானவை அதன் கோபுரங்கள். கோபுரங்களைப் பொருத்தவரை, ஊரில் எங்கிருந்து பார்த்தாலும் கோயில் தெரிய வேண்டும் என்பதற்காக உயரமாகக் கட்டப்பட்டன. பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் கட்டப்பட்ட கோயில்களில் கோபுரங்கள் உயரமானவையாக அமைக்கப்படவில்லை. மாறாக, கர்ப்பகிரகங்களுக்கு மேல் அமைக்கப்படும் விமானங்கள்தான் உயரமாக அமைக்கப்பட்டன. மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம் போன்றவற்றில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருப்பவை கோபுரங்கள் அல்ல; விமானங்கள்தான்.

பிற்கால பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில்தான் விமானங்களை உயரமாக அமைப்பது குறைந்து கோபுரங்களை உயரமாக கட்டி எழுப்புவது துவங்கியது. இதற்குக் காரணம் இருக்கிறது என்கிறார் ராஜேந்திரன்.

“மூலவர் அமைந்துள்ள கருவறையைக் கட்டி, அதற்கு மேல் விமானமும் அமைக்கப்பட்டுவிட்டால், அதில் மாற்றங்கள் ஏதும் செய்ய முடியாது. ஆகவே பின்னால் வந்த அரசர்கள், மூலவரின் சன்னிதியைச் சுற்றி பிரகாரங்களைக் கட்டி, அவற்றில் கோபுரங்களைக் கட்ட ஆரம்பித்தார்கள். அப்படித்தான் கோபுரங்களை பெரிதாக கட்டும் பழக்கம் உருவானது” என்கிறார் அவர்.

தமிழ்நாட்டில் திருவரங்கம், மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் பல கோபுரங்கள் உண்டு. இருக்கும் கோபுரத்திலேயே பெரிய கோபுரம் ராஜகோபுரம் என்று அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய கோபுரமாக அமைந்திருப்பது திருவரங்கத்தின் ராஜகோபுரம்தான்.

13 நிலைகளுடன் அமைக்கப்பட்ட இந்தக் கோபுரம், தமிழ் கோபுரக் கட்டுமானக் கலையின் உச்சத்தைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் இருப்பதிலேயே பழமையான கோபுரம் காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில் கோபுரம். ஒரே ஒரு நிலையைக் கொண்ட மிகச் சிறிய கோபுரம் இது.

பல்லவர் காலத்தில் துவக்கம் பெற்ற கோயில் கலை, சோழர் காலத்தில் அதன் உச்சத்தை அடைந்தது. பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இந்தக் கோயில்கள் கம்பீரத் தோற்றத்தைப் பெற்றன.

இதற்குப் பின்வந்த நாயக்க மன்னர்களின் காலத்தில் கோயில்கள் அளவில் பெரிதாக விரிவடையத் துவங்கின. ஏற்கனவே உள்ள பழைய கோயில்களில் புதிய திருச்சுற்றுகள் சேர்க்கப்பட்டன. புதிய மண்டபங்கள் கட்டப்பட்டன. பிறகு, இவற்றை உள்ளடக்கி புதிய மதில் சுவர்கள் கட்டப்பட்டு கோயில் விரிவாக்கப்பட்டது.

இதற்குப் பிறகு தமிழ்நாட்டில் கோயில் கலையில் பெரிய வளர்ச்சி ஏதும் இல்லை. பல்லவர் காலத்தில் துவங்கிய கோவில் கலை இப்படியாக நாயக்கர் காலத்தில் ஒரு தேக்கத்தை வந்தடைந்தது.

ஆனால், தமிழ்நாட்டில் கோயில்கள் என்பவை வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல; அவை அந்தந்த பகுதிகளின் கலைக்கூடங்கள். பண்பாட்டுச் சின்னங்கள். அப்பகுதி மக்களின் மனநிலையை ஒருங்கிணைக்கும் தொன்மங்கள்.

(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் பத்தாவது கட்டுரை.)

Share.
Leave A Reply

Exit mobile version