தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை நீக்குமாறு தமது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு இந்த ஆண்டின் துவக்கத்தில் தாம் கடிதம் எழுதியதாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார்.
தாம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிக்கவில்லை என்றாலும், தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து அந்த இயக்கத்தை நீக்குவது மலேசியாவுக்கு நல்லது என்றும் புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் தெளிவுபடுத்தினார்.
அதேசமயம் பிற நாடுகளைப் போல் மலேசியாவும் எந்தவொரு குழுவையும் ‘தீவிரவாதிகள்’ என்று சுலபமாக முத்திரை குத்திவிடக் கூடாது என்று வலியுறுத்திய அவர், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தை உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.
“நான் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லை. அவர்களுடைய பிரச்சனை இலங்கையில் நடந்த ஒன்று. மலேசியாவுக்கு அதில் தொடர்பில்லை. மேலும் மலேசியாவில் அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடாதபோது அந்த இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் நமக்கு எழவில்லை,” என்று மகாதீர் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் இயக்கம் ஒருவேளை மலேசியாவில் நிதி திரட்டியிருக்கக் கூடும் என்று குறிப்பிட்ட அவர், முன்பே கூட அந்த இயக்கம் நிதி வசூலித்ததாக சுட்டிக் காட்டினார். விடுதலைப்புலிகள் இயக்கத்தை இலங்கை அரசே தீவிரவாத இயக்கம் என்று பட்டியலிடவில்லை என்றும் சுட்டிக்காட்டிய மகாதீர், இலங்கையே அவ்வாறு செய்யாதபோது மலேசியா ஏன் அந்த இயக்கத்தைத் தீவிரவாத பட்டியலில் வைத்திருக்க வேண்டும்? எனக் கேள்வி எழுப்பினார்.
இன்றைய மலேசிய பிரதமரும் அண்மையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவரை உள்துறை அமைச்சராக இருந்தவருமான மொகிதீன் யாசினுக்கு எழுதிய கடிதத்தில், புலிகள் இயக்கத்தை இன்னமும் தீவிரவாத பட்டியலில் வைத்திருப்பதற்கான காரணம் ஏதும் இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை எனவும் தாம் குறிப்பிட்டிருந்ததாக செய்தியாளர்கள் கூட்டத்தில் மகாதீர் தெரிவித்தார்.
“ஹமாஸ் இயக்கத்தை நான் தீவிரவாத இயக்கம் என தனிப்பட்ட முறையில் கருதுவதாக பொருள் கொள்ள வேண்டாம். ஹமாஸ் தீவிரவாத இயக்கம் என்று அமெரிக்காதான் பட்டியலிட்டுள்ளது. உலகமும் அவ்வாறு கூறுகிறது.
ஆனால், ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியே என்னுடைய நண்பர் என்ற வகையிலேயே அவர் மலேசியாவுக்கு வந்தபோது சந்தித்தேன். எனவே அவரை தீவிரவாதி என்று என்னால் குறிப்பிட இயலாது. விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்குவதுதான் நல்லது,” என்று மகாதீர் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருவர் உட்பட 12 பேரை மலேசிய போலிசார் கடந்தாண்டு கைது செய்தனர்.
ஆனால் அந்த இயக்கத்தின் தலைவரான பிரபாகரன் கடந்த 2009ஆம் ஆண்டு இறந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், அதன் செயல்பாடுகள் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் அந்த இயக்கத்துடன் தொடர்பிருப்பதாக மலேசியாவில் உள்ள தமிழர்கள் கைது செய்யப்பட்டது சர்ச்சையானது. எனினும் பின்னர் 12 பேர் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை நீக்குவது தொடர்பான வழக்கு விசாரணை 17ஆம் தேதி மலேசிய நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.