இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது. உலகில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் வைரஸ் பரவல் மிக அதிகமாக இருப்பதை இது காட்டுகிறது.

இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு சமீபத்தில் கண்டறியப்பட்டது.

சமீபத்திய தரவுகளின்படி இந்தியாவில் வைரஸால் பாதிக்கப்பட்ட ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை, 9.95 லட்சத்தை கடந்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் இடைநிறுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனை நிலையிலான தடுப்பூசி மருந்து தயாரிப்பு பணிகளை மீண்டும் தொடங்க புணேவில் உள்ள சீரம் நிறுவனத்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை இயக்குநர் அனுமதி அளித்துள்ளார்.

முன்னதாக, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி பரிசோதனை மருந்தை இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த நிலையில், லண்டில் தன்னார்வலர்களில் ஒருவருக்கு பரிசோதனை மருந்து ஏற்படுத்தியிருந்த பக்க விளைவு காரணமாக, இந்தியாவில் சீரம் நிறுவனம் அதன் பரிசோதனை நிலையிலான தயாரிப்புப் பணியை நிறுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்.

வைரஸ் பரிசோதனையை இடைநிறுத்த, அவர் பிறப்பித்த உத்தரவில், பரிசோதனையின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டத்துக்காக புதிய தன்னார்வலர்கள் சேர்க்கப்படுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், பிரிட்டனின் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு பிறகு பரிசோதனை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் சீரம் நிறுவன பரிசோதனை மருந்து தயாரிப்பை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு தலைமை இயக்குநர் பிறப்பித்த புதிய உத்தரவில், தன்னார்வலர்களுக்கு நடத்தப்படும் பரிசோதனை, அவர்களின் உடல்நிலை கண்காணிப்பு ஆகியவை நேரடியாக சீரம் நிறுவனத்தால் மிகவும் நெருக்கமான வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரஸ் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்து 20 ஆயிரத்து 359 ஆக உள்ளது. இதுவரை 82 ஆயிரத்து 66 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

உலக அளவில் வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் புதன்கிழமை இந்திய நேரம் மாலை 4 மணி நிலவரப்படி 66 லட்சத்து 6 ஆயிரத்து 562 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.

அந்த வகையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வைரஸ் பரவல் எண்ணிக்கை வேறுபாடு 15 லட்சத்து 86 ஆயிரத்து 203 ஆக உள்ளது.

சில வாரங்களுக்கு முன்புவரை இந்தியாவில் வைரஸ் பரவல் எண்ணிக்கை 46 லட்சத்தை மட்டுமே கடந்திருந்தது. இந்த நிலையில், தற்போது நான்காம் கட்ட பொது முடக்க தளர்வை இந்தியா முழுவதும் அரசு அமல்படுத்தியிருக்கும் நிலையில், முந்தைய கட்டுப்பாடுகள் பல நீக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ஒரு சில ஆயிரக்கணக்கில் இருந்த வைரஸ் பரவல், கடந்த வாரத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த ஒரு மாதத்தில் அமெரிக்கா தற்போதிருக்கும் பாதிப்பு அளவை இந்தியா எட்டலாம் என்று கருதப்படுகிறது.

இந்தியாவுக்கு தடுப்பு மருந்தை வழங்க ரஷ்யா விருப்பம்

இதற்கிடையே, இந்தியாவின் ரெட்டி லெபாரட்டரீஸ் நிறுவனத்துக்கு தங்களின் ஸ்பூட்னிக் வைரஸ் தடுப்பு மருந்தை விநியோகிக்க தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஸ்பூட்னிக் வைரஸ் தடுப்பூசியை பயன்படுத்த சட்டப்பூர்வ அனுமதி கிடைத்ததும் 10 கோடி டோஸ்கள் மருந்து வழங்கப்படும் என்றும் இதற்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனை நிலையிலான முழு ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் விளக்கிய சுகாதார அமைச்சர்

இதற்கிடையே, இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக மாநிலங்களவையில் இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசும்போது, இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று வெகு விரைவில் முடிவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்தை மேம்படுத்தும் பரிசோதனைகள், 30 இடங்களில் நடப்பதாகவும் அதில் குறைந்தபட்சம் நான்கு இடங்களில் நடக்கும் பரிசோதனைகள், மேம்பட்ட பரிசோதனை கட்டத்தை எட்டியுள்ளதாகவும் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

மறுதொற்று ஏற்படுமா?

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா, மிக அரிதாகவே வைரஸில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும் என்று கூறினார். எனவே, இது மிகப்பெரிய கவலை தரும் விஷயம் அல்ல என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இந்தியாவில் தெலங்கானா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட சிலருக்கு மீண்டும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, வைரஸ் மறுதொற்று தொடர்பான சந்தேகம் வலுவடைந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version