அமிர் அல்லது அமுதர் என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட நன்கு பிரபல்யம் வாய்ந்த இலங்கை தமிழ் அரசியல் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 93ஆவது பிறந்த தினம் அண்மையில் (ஆகஸ்ட் 26) வந்துபோனது.

நான்கு தசாப்த காலம் நீடித்த சிறப்பு மிகு அரசியல் வாழ்வில் அமிர்தலிங்கம் 20வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

சமஷ்டி கட்சி என்று அறியப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியினதும் தமிழ் ஐக்கிய விடுதலை கூட்டணியினதும் முக்கியமான தலைவர் அவர்.

1956 – 1970வரை வட்டுக்கோட்டை தொகுதியில் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினராகவும் 1977 – 1983 வரை காங்கேசன்துறை தொகுதியின் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் அவர் இருந்தார்.

1977 – 1983 வரை இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவிவகித்த அமிர்தலிங்கம் 1989 ஜுலை 13 விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டபோது அவர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார்.

அமிர்தலிங்கமும் மங்கையர்க்கரசியும்

அமிர்தலிங்கமும் அவரது துணைவியார் மங்கையர்க்கரசியும் தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் பிரிக்க முடியாத இணையராக விளங்கினர்.

மங்கையர்க்கரசியின் வாழ்வு அவரது கணவரின் அரசியல் வாழ்வுடன் என்றுமே விடுவிக்க முடியாத பிணைப்பாக இருந்தது. அவரை பற்றிக் குறிப்பிடாமல் அமிர்தலிங்கத்தை பற்றி எழுத முடியாது. சிவபெருமானும் பார்வதியும்போல அமிர்தலிங்கம் சிவமாகவும் மங்கையர்க்கரசி சக்தியாகவும் வாழ்ந்தனர்.

இலட்சிய வேட்கை கொண்ட ஆயிரக்கணக்காக தமிழ் இளைஞர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்களாக இந்த அரசியல் தம்பதியர் விளங்கிய ஒரு காலம் இருந்தது.

அந்த இணையருக்கு அமிர்தலிங்கம் அமிர் அண்ணா மங்கையர்க்கரசி மங்கை அக்கா. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் பிரபலமான ஒரு பேச்சாளராகவும் பாடகியாகவும் தன்சொந்த திறமையினாலேயே ஒரு தமிழ்த் தலைவியாக விளங்கியவர்.

அரசியல் மேடைகளில் அவர் தமிழ்த் தேசியவாத கீதங்களை இசைத்ததை மக்கள் கூட்டம் வெகுவாக வரவேற்று ரசித்தது. கணவர் செல்லுமிடமெல்லாம் அவர் கூடவே செல்வார்.

திரு திருமதி அமிர்தலிங்கம்

1983இல் அமிர்தலிங்கமும் மங்கையர்க்கரசியும் பிரான்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்தபோது தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை நினைவுகூர விரும்புகிறேன்.

பாரிஸில் தமிழர்கள் நிறைந்து வாழ்கின்ற லா சப்பலில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின்போது தமிழ் இளைஞர் ஒருவர் அமிர்தலிங்கத்தை நோக்கி ‘நீங்கள் செல்லுமிடமெங்கும் உங்களது மனைவியையும் ஏன் கூட்டிக்கொண்டு திரிகிறீர்கள்? பாரிஸ{க்கு உங்களுடன் ஏன் கூட வந்திருக்கிறார்?’ என்று கேட்டார்.

அமிர்தலிங்கம் எந்தவிதமான குழப்பமும் அடையாமல் சிரித்த வண்ணம் ‘எனது சொந்த மனைவியுடன் கூடத் திரிவதில் என்ன தவறு இருக்கிறது? எனது மனைவியை தவிர வேறொரு பெண்ணுடன் சென்றால் மாத்திரமே அது தவறாகும்.

அதுமட்டுமல்ல, பாரிஸ் போன்ற இடங்களுக்கு மாத்திரமல்ல, பனாகொட இராணுவ முகாமுக்கும் என்னுடன் எனது மனைவி கூட வந்தவர். நாம் இருவரும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தோம்’ என்று பதிலளித்தார்.

அமிர்தலிங்கத்தின் அந்த பதில் சபையிலிருந்தோரை வாயடைக்கச் செய்தது. கேள்வி கேட்ட இளைஞன் மௌனமானார்.

1961ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியில் 74சத்தியாக்கிரகிகள் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தினால் ஆறு மாதங்களாக பனாகொட இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்ட நேரத்தை பற்றியே அமிர்தலிங்கம் அவ்வாறு குறிப்பிட்டார். தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் மங்கையர்க்கரசி மாத்திரமே ஒரேயொரு பெண்மணி.

அமிர்தலிங்கத்தினதும் மங்கையர்க்கரசியினதும் பெயர்கள் சிறுபராயத்திலிருந்தே எனக்கு பரிச்சயமாகியிருந்தன.

அமிர்தலிங்கம் சட்டக் கல்லூரியில் எனது தந்தையின் சமகாலத்தவர். எமது வீட்டில் தமிழர் அரசியலைப் பற்றி கலந்துரையாடிய சந்தர்ப்பங்களிலெல்லாம் அமிர்தலிங்கத்தையும் மற்றும் அவரது மனைவியையும் பற்றி குறிப்பிடப்படும்.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் நான் கல்விப் பொதுதராதர உயர்தர வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது அமிர்தலிங்கம் தம்பதியினருடனான எனது தனிப்பட்ட ஊடாட்டம் தொடங்கியது.

யாழ்ப்பாணக் கல்லூரியின் ஹவ்லான்ட் விடுதியில் நான் தங்கியிருந்தேன். அமிர்தலிங்கம் அப்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அல்ல.

1970 பொதுத் தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் ஆ. தியாகராஜாவினால் தோற்கடிக்கப்பட்டிருந்தார்.

வட்டுக்கோட்டை சந்தி பஸ் நிலையத்தில் யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்களை அமிர்தலிங்கம் காணும்போது தனது வாகனத்தில் இடமிருந்தால் அவர்களையும் எப்போதும் ஏற்றிக்கொண்டு செல்வார்.

அந்தவேளையில், அமிர்தலிங்கத்தின் மகன்களான காண்டீபனும் பகீரதனும் யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள்.

அந்தக் கல்லூரியின் சில மாணவர்கள் அரசியல் நிலைவரங்கள் குறித்து கதைப்பதற்கு மூளாய் பகுதியிலுள்ள அவர்களது வீட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.

திருமதி அமிர்தலிங்கம் அந்த நாட்களில் விருந்தோம்பும் பண்புடைய அன்புள்ள ஒரு குடும்பத்தலைவியாக நடந்துக்கொள்வார்.

குறிப்பாக என்னைப்போன்ற கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் தாய்மார்கள் சமைத்த உணவு கிடைக்காமல் விடுதியில் சாப்பிடுவார்கள் என்பதற்காக அவர்களை மிகுந்த பரிவுடனும் பெருந்தன்மையுடனும் நோக்குவார்.

காண்டீபனும் பகீரதனும் கல்லூரியில் எனக்கு இளையவர்கள் என்றாலும் அவர்களுடன் நான் மிகுந்த சிநேகம் கொண்டிருந்தேன்.

பின்னரான வருடங்களில் நான் பத்திரிகைத்துறையில் பிரவேசித்தபோது தொழில்சார் தேவையின் நிமித்தம் அமிர்தலிங்கத்துடன் பழகத் தொடங்கினேன்.

வீரகேசரி, த ஐலண்ட் மற்றும் த இந்து போன்ற செய்திப் பத்திரிகைகளுக்காக நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது முக்கியமான ஒரு அரசியல் தொடர்பாக அமிர்தலிங்கத்துடன் உறவுகளை வளர்த்துக் கொண்டேன்.

அவரை நான் பாராளுமன்றத்திலும் சிராவஸ்திக்கு அண்மையாக அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலும் சந்திப்பது வழக்கம்.

யாழ்ப்பாணத்தில் நான் இருந்தவேளைகளிலெல்லாம் மூளாயிலுள்ள அவரது வீட்டுக்கு சென்று சந்திப்பேன். 1983 ஜூலை இன வன்முறையையடுத்து தமிழ்நாட்டுக்கு சென்ற பிறகு அவர் தங்கியிருந்த சென்னை சேப்பாக்கத்திலுள்ள அரசு விருந்தினர் விடுதியிலும் அவரை சந்தித்து பேட்டிகளை எடுத்தேன்.

அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தைகளுக்காக அமிர்தலிங்கம் கொழும்பு வந்தபோது எம்பிரஸ் ஹோட்டலிலும் பழைய தப்ரபேன் ஹோட்டலிலும் (கிரேண்ட் ஒரியன்ட் ஹோட்டல்) அவரை சந்திப்பதும் வழக்கம்.

பிறகு 1989 ஜூலையில் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டபோது நான் கனடாவில் இருந்தேன். இலங்கையிலிருந்து 1988ஆம் ஆண்டு நான் கனடா சென்று விட்டேன்.

இந்த பின்புலத்தில் தான் நான் அமிர்தலிங்கத்தை பற்றி (ஏற்கனவே நான் எழுதியிருந்த கட்டுரைகளில் உள்ள தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு) எழுதுகிறேன்.

இலங்கை தமிழரசுக் கட்சி

அமிர்தலிங்கம் மலேசியாவில் பிரிட்டிஷ் ரயில்வேயில் ஒரு ஸ்டேசன் மாஸ்டராக பணியாற்றிய அப்பாப்பிள்ளையின் மகனாவார். 1927 ஆகஸ்ட் 26 பிறந்த அமிர்தலிங்கம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் ஒரு விவேகமான மாணவன்.

அந்தக் கல்லூரியிலிருந்து முதன்முதலாக பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவரும் அவரேயாவார். கலைமாணி படிப்பை முடித்துக்கொண்ட அமிர்தலிங்கம் பிறகு சட்டக் கல்லூரியில் சேர்ந்து ஒரு வழக்கறிஞராக வெளியேறினார்.

தனது இளமை காலத்தில் அமிர்தலிங்கம் பிரபலமான ரொட்ஸ்கியாவாதியான கலாநிதி என்.எம். பெரேராவின் ஆர்வமிக்க சீடனாக விளங்கினார்.

நாட்டின் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் சர்வரோக நிவாரணியாக விஞ்ஞான சோஷலிச கோட்பாட்டில் உறுதியான நம்பிக்கை கொண்டவராக விளங்கினார்.

பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் சமஷ்டி கோரிக்கையை நியாயப்படுத்தி சுதந்திரன் பத்திரிகையில் கட்டுரைகளை அமிர்தலிங்கம் எழுதியபோது அவர் தமிழ்த் தலைவர் எஸ்.ஜே.பி.செல்வநாயகத்தினால் கவரப்பட்டார்.

அந்த நேரத்தில் மிகுந்த செல்வாக்கு கொண்ட தமிழ் அரசியல் கட்சியாக விளங்கிய ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸிலிருந்து 1949 டிசம்பரில் பிரிந்து சென்ற செல்வநாயகம் சமஷ்டி கட்சி என்று அறியப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார்.

அமிர்தலிங்கத்துக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதிய செல்வநாயகம் புதிய கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்று அமிர்தலிங்கம் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினராக வந்தார்.

அமிர்தலிங்கம் தமிழரசுக் கட்சியின் அரசியலில் ஆர்வ சுறுசுறுப்புடன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் நாவன்மை கொண்ட அவர், நாவலர் என்ற புனைப்பெயருடனும் அழைக்கப்பட்டார். டெய்லி மிரர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான ரெஜி மைக்கல் அமிர்தலிங்கத்தை பற்றி ஒருதடவை நகைச்சுவையாக ‘மக்கள் கூட்டத்தை நெகிழ வைக்கவும் மக்கள் கூட்டத்தினால் நெகிழ்ந்து போகவும் கூடிய ஒரு மனிதர்’(A man who could both move crowds as well as be moved by crowds) என்று வர்ணித்து எழுதினார்.

பார்கின்ஸன் நோயினால் பீடிக்கப்பட்டிருந்த செல்வநாயகம் சுறுசுறுப்பாக செயற்பட முடியாதவராக தன்னை உணர்ந்துகொண்டதும் கட்சிக்காக சளைக்காமல் உழைக்க வேண்டியது இளம் அமிர்தலிங்கத்தின் பொறுப்பாகியது.

இதன் காரணமாக அவர் தளபதி என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் பழைய தலைவர்கள் மறைந்துபோக செல்வநாயகத்தின் அரசியல் வாரிசாக மாறிய அமிர்தலிங்கம் நாளடைவில் தலைமைத்துவப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

வெவ்வேறு காலகட்டங்களில் தமிழரசுக் கட்சியில் செயலாளராகவும் தலைவராகவும் இருந்த அவர் கட்சியின்; பல பதவிகளை வகித்தார்.

1978ஆம் ஆண்டில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகமாக வந்த அவர் 1989இல் மரணமடையும் வரை அதே பதவியை தொடர்ந்தார்.

துணிச்சலான செயற்பாட்டாளர்

தனது அரசியல் வாழ்வின் ஆரம்ப நாட்களிலிருந்தே துணிச்சலான ஒரு செயற்பாட்டாளராக விளங்கிய அமிர்தலிங்கம் அஹிம்சை மார்க்கத்திலான பல போராட்டங்களில் பங்கேற்று தலைமை தாங்கினார்.

இவற்றில் கறுப்புக்கொடி போராட்டம், ஆர்ப்பாட்ட போராட்டம், சத்தியாக்கிரகங்கள், உண்ணாவிரதங்கள், ஒத்துழையாமை நடவடிக்கைகள் பலவாகும். பல சந்தர்ப்பங்களில் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

பனாகொடை இராணுவ முகாமில் அவர் மனைவி மங்கையர்க்கரசியுடன் 1961இல் தடுத்துவைக்கப்பட்ட சம்பவம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். வடக்கு, கிழக்கில் சகல அரசாங்க நடவடிக்கைகளையும் ஸ்தம்பிக்க வைத்த மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு பிறகே இது நடந்தது.

இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது ஒத்துழையாமை இயக்கத்தின் ஓர் அங்கமாக ‘சட்டவிரோத தபால் சேவைக்காக’ அன்றைய தமிழ்க் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சிவசிதம்பரம் அமிர்தலிங்கத்துடன் கூடவே தபால் சேவகர்களாக பணியாற்றியது மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

1956ஆம் ஆண்டில் சிங்களத்தை நாட்டின் ஒரே உத்தியோகபூர்வ மொழியாக கொண்டுவரும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

கொழும்பு கோட்டையில் பழைய பாராளுமன்றத்துக்கு முன்பாக காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை தமிழரசுக் கட்சி நடத்தியது. அமைதியான முறையில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சமூக விரோத கும்பல்களினால் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

அதேவேளை, அதில் தலையிட்டு தடுக்க வேண்டாம் என்று பொலிஸார் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அமிர்தலிங்கம் உட்பட நூற்றுக்கணக்கான தமிழர்கள் தாக்கப்பட்டார்கள், கல்வீச்சுக்கு இழக்கானார்கள்.

அந்த தினத்தில் (ஜூலை 5) தலையிலிருந்து இரத்தம் வழிந்தோடிய நிலையில் பென்டேஜுடன் அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக ஒரு நாடகபாணி உணர்ச்சி ஆர்வத்துடன் பிரவேசித்தார்.

‘போரின் காயங்களே’ (Wounds of war) என்று கூறி பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அமிரை கேலி செய்தார். அடங்கா தமிழரான சி.சுந்தரலிங்கம் உடனே திருப்பி ‘போரின் கௌரவ காயங்களே’ (Honourable Wounds of war) என்று கூறினார்.

1952 பாராளுமன்றத் தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் அமிர்தலிங்கம் முதல் தடவையாக போட்டியிட்டார்.

அப்போது சமஷ்டி கோரிக்கைக்கு பெரும் ஆதரவு இருக்கவில்லை. அமிர்தலிங்கம் தோல்வி கண்டார். தெற்கில் எழுச்சிபெற்ற சிங்கள தேசியவாத அலை அதற்கு பிரதிபலிப்பாக தமிழ்ப் பகுதிகளில் தமிழ்த் தேசியவாத அலையை ஏற்படுத்தியது.

1956இல் முதன்மையான தமிழ்க் கட்சியாக வந்த தமிழரசுக் கட்சி தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி அமைக்கப்படும் வரை (1976) அவ்வாறே தொடர்ந்து விளங்கியது.

1956, 1960(மார்ச்சிலும் ஜூலையிலும்) மற்றும் 1965இலும் வட்டுக்கோட்டை தொகுதியிலும் அமிர்தலிங்கம் வெற்றிப் பெற்றார். 1970 பொதுத் தேர்தலில் குழப்பகரமான ஒரு முடிவில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் ஆ. தியாகராஜாவினால் அவர் தோற்கடிக்கப்பட்டார்.

இந்த தோல்வி தமிழ் தேசியவாதத்துக்கு பெரிய நன்மையாக போய்விட்டது. அந்த பொதுத் தேர்தலில் தனது கோட்டையாக விளங்கிய உடுப்பிட்டி தொகுதியில் தமிழ்க் காங்கிரஸின் எம்.சிதம்பரமும் தோல்விகண்ட நிலையில், அவரும் அமிர்தலிங்கமும் 1970 – 1977 காலகட்டத்தில் தமிழரின் ஐக்கியத்துக்காக கடுமையாக பாடுபட்டனர்.

1972ஆம் ஆண்டில் தமிழர் ஐக்கிய கூட்டணி அமைக்கப்பட்டது. 1976ஆம் ஆண்டில் அது தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியாக மாறியது. தமிழர்களின் அரசியல் கோரிக்கை சமஷ்டியிலிருந்து பிரிவினைக்கு மாறியது.

பிரிவினைக்கு ஆதரவாக பிரசாரம் செய்தமைக்காக அமிர்தலிங்கமும் வேறு மூன்று தமிழ்த் தலைவர்களும் கைதுசெய்யப்பட்டனர். ஜூரர்கள் இன்றி மூன்று நீதிபதிகளின் அமர்வில் ட்ரயல் அட்பார் விசாரணைகளின் கீழ் அந்த நால்வருக்கு எதிராக குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அமிர்தலிங்கம் அதில் முதலாவது பிரதிவாதி. அந்த விசாரணை அரசியல் மற்றும் சட்டத்துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. ஆறு இராணி வழக்கறிஞர்கள் (கிவ்.சி); உட்பட 67 வழக்கறிஞர்கள் அமிர்தலிங்கத்துக்காக ஆஜரான அதேவேளை, அரசின் சார்பில் சட்டமா அதிபர் சிவா பசுபதி வழக்கை நடத்தினார்.

புகழ்பெற்ற வழக்கறிஞர் ஜி.ஜி.பொன்னம்பலம் எந்த சட்ட ஏற்பாடுகளின் கீழ் அமிர்தலிங்கம் குற்றம் சாட்டப்பட்டாரோ அந்த ஏற்பாடுகள் அரசியலமைப்பை மீறுவதாக இருந்தன என்று வாதாடி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை பெற்றுக் கொடுத்தார்.

இன்னொரு தலைசிறந்த வழக்கறிஞரான முருகேசன் திருச்செல்வம் தமிழர்களின் இறையாண்மையையும் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்தும் அறிவாழம் மிக்க வாதங்களை முன்வைப்பதற்காக அந்த ட்ரயல் அட்பார் விசாரணையை பயன்படுத்தினார்.

முதல் தமிழ் எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியதாக சுயாதிபத்தியம் கொண்ட மதசார்பற்ற தமிழீழ அரசொன்றை அஹிம்சை வழியில் அமைப்பதற்கான ஆணையை தமிழ் மக்களிடம் கேட்டு தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி 1977 பொதுத் தேர்தலில் போட்டியிட்டது.

வடக்கில் மகத்தான வெற்றி பெற்ற கூட்டணி கிழக்கில் அதைவிட சற்று குறைவான ஆசனங்களை கைப்பற்றியது.

தமிழர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட 19 தொகுதிகளில் 18 தொகுதிகளை அது வென்றபோதிலும் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட எந்தவொரு தொகுதியிலும் வெற்றிப்பெற தவறியது.

செல்வநாயகம் தேர்தலுக்கு முன்னரே காலமாகிவிட்டதால் தனது சொந்த வட்டுக்கோட்டை தொகுதிக்கு பதிலாக அரசியல் ஆசானின் கோட்டையாக விளங்கிய காங்கேசன் துறை தொகுதியில் அமிர்தலிங்கம் போட்டியிட்டார்.

அந்த தொகுதியில் 31ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 26ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றியை அமிர்தலிங்கம் பெற்றார்.

அந்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை படுமோசமாக தோற்கடித்த ஐக்கிய தேசியக் கட்சி 168 பாராளுமன்ற ஆசனங்களில் 141ஆசனங்களை கைப்பற்றியது. சுதந்திரக் கட்சிக்கு வெறுமனே 8ஆசனங்கள் மாத்திரமே கிடைத்தன. அதனால், பாராளுமன்றத்தில் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக 18ஆசனங்களுடன் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி விளங்கியதால் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவராக அமிர்தலிங்கம் வந்தார்.

இது ஒரு தனித்துவமான இணையற்ற தோற்றப்பாடாக இருந்தது. ஏனென்றால், வழமையான சூழ்நிலைகளில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக வருபவர் மாற்று அரசாங்கத்தின் தலைவராகவே கருதப்படுவார்.

ஆனால், இங்கு அமிர்தலிங்கத்தின் விடயத்தை பொறுத்தவரை நாட்டு பிரிவினையை விரும்புகின்ற கட்சியின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக வந்தார். என்றாலும், அமிர்தலிங்கம் தமிழர்களின் இலட்சியத்தை மேம்படுத்தி சர்வதேச மயப்படுத்துவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பயன்படுத்தினார்.

இது பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்து விவாதித்தார்கள்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் தமிழர்களுக்கு எதிரான படுமோசமான இனவெறியரான சிறில் மத்தியூ கன்னியமான பண்புகள் என்று சொல்லக்கூடியவை சகலவற்றையும் மீறி அமிர்தலிங்கத்துக்கு எதிராக தனிப்பட்ட முறையில் கடுமையான பேச்சொன்றை நிகழ்த்தியதன் மூலம் பாராளுமன்றத்தின் நடத்தைகளில் என்றுமே இல்லாத கீழ்நிலைக்கு சென்றார்.

ஆனால், அமிர் அந்த பாராளுமன்றத்தில் தனது முத்திரையை பதிக்க தவறவில்லை. 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பை விமர்சித்து அமிர்தலிங்கம் ஆற்றிய உரையை கேட்டுக்கொண்டிருந்த அன்றைய சபாநாயகர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ், அத்தகைய தலைசிறந்த உரையை கேட்பதற்கு தான் கொடுத்து வைத்தவன் என்று கூறி ஒரு குறிப்பை அவருக்கு அனுப்பினார்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் முன்னாள் பிரதமர் திருமதி சிறிமா பண்டாரநாயக்காவின் குடியியல் உரிமைகளை பாராளுமன்றம் பறித்த தினத்தில் அவரை சூழ்ந்து ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்கள் வசைமாறி பொழிந்து துன்புறுத்த முயன்று கொண்டிருந்தவேளையில், சபையை விட்டு துணிச்சலுடன் ஒய்யாரமாக அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமுமே அம்மையாரை அழைத்துச் சென்றனர்.

இந்தியாவின் நண்பன்

பெரும்பாலான இலங்கை மிதவாத தமிழ்த் தலைவர்களை போன்று அமிர்தலிங்கமும் இந்தியாவின் ஒரு உறுதியான நண்பன். தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அவர்களில் பலர் இந்தியாவின் உதவிக்காக அவா கொண்டிருந்தனர்.

1972ஆம் ஆண்டில் 70 வயதுகளில் இருந்த செல்வநாயகத்துடன் அமிர்தலிங்கமும் துணைவியார் மங்கையர்க்கரசியும் இந்தியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டனர். அந்த விஜயம் அனுதாபத்தை பெற்ற போதிலும் தமிழர் இலட்சியத்துக்காக இந்திய தலைவர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை.

தேசிய மட்டத்திலும் தமிழ்நாடு மாநில மட்டத்திலும் இந்திய தலைவர்களுடன் அமிர்தலிங்கம் நல்லுறவுகளை பேணி வந்தார். இது தேவைப்பட்ட சந்தர்ப்பங்களில் தனது மனதிலுள்ளதை வெளிப்படையாக அமிர்தலிங்கம் கூறுவதை தடுக்கவில்லை.

1978ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய், தமிழர் பிரச்சினை குறித்து அலட்சியம் காட்டினார். அமிர்தலிங்கம் இதனால் சோர்ந்துபோகவில்லை. உணர்வுபூர்வமாக ஆனால் அதேவேளை, இசைவிணக்கமான தொனியில் பதிலளித்தார். அதையடுத்து தேசாயின் நிலைப்பாடு கனிசமான அளவுக்கு தளர்ச்சி கண்டது.

இந்திய பிரதமர் இந்திரா காந்தி அம்மையாருயுடன்

1981ஆம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் பழித்துரைத்து பேசினார். அமிர்தலிங்கம் மரியாதையை பேணிய வண்ணமே அவருடன் முரண்பட்டு எம்.ஜி.ஆரின் பெரும்பாலான வாதங்களை மறுதலித்தார். புவிசார் அரசியல் யதார்த்த நிலைகளையும் புரிந்துகொண்டவரான அமிர்தலிங்கம், திருகோணமலை இந்தியாவுக்கு அச்சுறுத்தலை தோற்றுவிக்கக்கூடிய முறையில் வேறு சக்திகளிடம் விழுவதை தமிழர்கள் அனுமதிக்கப்போவதில்லை என்று பல தடவைகள் கூறினார்.

தமிழர்களுக்கு எதிராக நாடு பூராகவும் கட்டவிழ்த்துவிடப்பட்ட 1983 ஜூலை இனவன்முறைகளையடுத்து பிரிவினை கோருவதை சட்டவிரோதமானதாக்கும் அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட காரணத்தினால் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி பாராளுமன்றத்தை பகிஷ்கரிக்க வேண்டியேற்பட்டது.

அதன் விளைவாக கூட்டணியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிகளை துறந்தனர். ஜே.ஆர்.ஜெயவர்தனா அரசாங்கம் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியுடன் நேரடியாக பேசுவதற்கு மறுத்ததால் இணக்க தீர்வு ஒன்றை காண்பதற்கு மத்தியஸ்தம் செய்வதற்கு இந்தியா அதன் நல்லெண்ணத்தை பயன்படுத்த முன்வந்தது.

அந்த நேரத்தில் அமிர்தலிங்கம் உட்பட பல கூட்டணி தலைவர்கள் இந்தியாவிலேயே வசித்து வந்தார்கள். அரசியல் விவரத்துடனான அணுகுமுறைக்காக அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடமிருந்து அமிர்தலிங்கம் பெரும் பாராட்டுகளை பெற்றார்.

ஆகஸ்ட் 15ஆம் திகதி டெல்லியில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின வரவேற்பு உபசாரத்துக்காக இந்திரா காந்தியினால் அழைக்கப்பட்டதை பற்றி நினைவுபடுத்தி சொல்வதில் அமிர்தலிங்கம் எப்போதும் பெரும் விருப்பு கொண்டவர். அந்த வரவேற்பு உபசாரத்துக்கு 20நிமிடங்கள் தாமதித்து வருமாறு அமிர்தலிங்கத்திடம் இந்திரா காந்தி வேண்டிக் கொண்டார்.

வழமையாக எந்தவொரு வைபவத்துக்கும் நேரம் தவறாமல் செல்கின்ற வழக்கத்தை கொண்ட அமிர்தலிங்கம் இந்திரா காந்தியின் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

அமிர் பிரவேசித்தபோது அந்த மண்டபத்துக்கு குறுக்காக நடந்துசென்று இந்திரா காந்தி அவரை வரவேற்றது அங்கிருந்த எல்லோரையும் கவரும் விதத்தில் பெரும் காட்சியாக அமைந்தது. அதற்கு பிறகு அவர் அங்கு வருகைத்தந்திருந்த முக்கியமான விருந்தினர்களுக்கு அமிர்தலிங்கத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழர்களின் பிரச்சினை மீது கூடுதல்பட்ச கவனத்தை திருப்பக்கூடியதாகவே அமிர்தலிங்கத்தின் வருகையை இந்திரா காந்தி திட்டமிட்டு அவ்வாறு ஏற்பாடு செய்திருந்தார். அந்த சம்பவத்தை அமிருக்கு இந்திரா காந்தியே பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருக்கிறார்.

மக்கள திலகம் எம்.ஜி.ஆர் உடன்

1983 – 1989 வரையான வருடங்களில் சென்னை சேம்பாக்கம் அரச விருந்தினர் விடுதியில் தங்கியிருந்து அமிர்தலிங்கம், தமிழ்நாடு அரசு விருந்தோம்பலில் வசித்து வந்தார். அந்தக் காலகட்டத்தை அவர் வெவ்வேறு அபிப்பிராயங்களையும் கொள்கைகளையும் பிரதிபலிக்கின்ற அரசியல் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள், கருத்துருவாக்கிகளுடன் தொடர்புகளை வளர்த்துக் கொள்வதற்கு பயன்படுத்தினார். அமிர்தலிங்கத்துடனான ஊடாட்டங்கள் காரணமாக தமிழ்த்தேசியவாதம் குறித்து தனது அபிப்பிராயம் மாறியதாக இந்தியாவின் முன்னணி பத்திரிகை ஒன்றில் ஆசிரியர் என்னிடம் கூறினார்.

அந்த ஆசிரியர் தமிழ்நாட்டில் திராவிட கோட்பாடுகளை பேசுகின்ற அரசியல்வாதிகளினால் பெரு ஏமாற்றமும் விரக்தியும் அடைந்து தமிழ்த் தேசியவாதத்துக்காக குரல்கொடுப்பவர்களைப் பற்றி எதிர்மறையான விம்பம் ஒன்றையே தனது மனதில் வளர்த்துக் கொண்டதாக அவர் கூறினார். ‘அமிர்தலிங்கத்துடனான சந்திப்புக்கு மாத்திரமே தமிழ்த் தேசியவாதிகள் நியாயபூர்வமானவர்களாகவும் நல்லறிவும் நேர்மையும் கொண்டவர்களாகவும் இருக்க முடியும் என்று உணர்ந்துகொண்டேன்’ என்றும் அவர் சொன்னார்.

அமிர்தலிங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியினரும் இலங்கை இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக இந்திய முயற்சிகளுக்கு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கினார்கள். அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு கிடைக்கக்கூடிய எந்த சந்தர்ப்பத்தையும் இலங்கையிலுள்ள தமிழ்த் தலைவர்கள் வெறுத்து ஒதுக்கவில்லை என்பதால் இது ஒன்றும் புதிதல்ல.

அரசியல் கோரிக்கைகளும் அதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களும் உச்சபட்ச தீர்வை வேண்டி நின்றவையாக இருந்தபோதிலும் தங்களது அடிப்படை கோரிக்கைகளுக்கு குறைவானதாகவும் அமையக்கூடிய விட்டுக்கொடுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு ஜனநாயக தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் தயக்கம் காட்டியதில்லை.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் கீழான பிராந்திய சபைகளும் டட்லி சேனாநாயக்காவின் கீழான மாவட்ட சபைகளும் ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் கீழான மாவட்ட அபிவிருத்தி சபைகளும் இதற்கு பெறுமதியான உதாரணங்களாக இருக்கின்றன.

அத்தகைய இணக்கப்பாடுகளையும் ஏற்பாடுகளையும் அடுத்தடுத்து பதவிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் மதித்து நடக்க தவறி வந்திருக்கின்றன என்பது கடந்த காலத்தில் (இன்றும் கூட) தமிழர்களின் முக்கியமான கவலையாக இருந்து வந்தது.

இணக்க தீர்வொன்றுக்கு மத்தியஸ்தம் செய்து உத்தரவாதம் அளிக்கவும் இந்தியா தயாராக இருந்த நிலையில், அமிர்தலிங்கம் போன்ற தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தலைவர்கள் மகிழ்ச்சியடைந்து சகதியிலிருந்து வெளியே வருவதற்கு வழியொன்றை கண்டார்கள்.

அதனால் அமிர்தலிங்கத்தின் கீழ் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி இந்திரா காந்தியுடனும் ராஜீவ் காந்தியுடனும் ஜி.பார்த்தசாரதி, ரொமேஸ் பண்டாரி, பி.சிதம்பரம், கே.நட்வாட்சிங், ஜே.என். தீக் ஷித் போன்ற பல்வேறு பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றது.

அவர்கள் சர்வகட்சி மாநாடுகளிலும் அரசாங்கத்துடனான நேரடி பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொள்வதற்கு இலங்கைக்கு பல தடவைகள் விஜயங்களையும் மேற்கொண்டார்கள்.

1985இல் திம்பு பேச்சுவார்த்தைகளின்போது ஐந்து ஏனைய தமிழ் தீவிரவாதக் குழுக்களுடன் பொதுவான நிலைப்பாட்டையும் கூட்டணி கடைபிடித்தது.

1987இல் இலங்கை – இந்திய சமாதான உடன்படிக்கையை சிலவகை ஐயப்பாடுகளுடன் என்றாலும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி வரவேற்றது.

தந்தை செல்வா, கலைஞர் மு.கருணாநிதி உடன்

எவ்வாறெனினும், உடன்படிக்கையை வெற்றிப்பெறச் செய்வதற்கு தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி இந்தியாவுடன் முழுமையாக ஒத்துழைக்க தீர்மானித்தது.

கூட்டணி 1989 பெப்ரவரி பொதுத் தேர்தலில் ஏனைய தீவிரவாதக் குழுக்களுடன் சேர்ந்து அதன் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டது.

அமிர்தலிங்கம் யாழ்ப்பாண மாவட்டத்தை விட்டு கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார்.

ஆனால், விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் தோல்வி கண்டார். ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி மொத்தமாக பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியலின் கீழ் ஒரு ஆசனத்தை மேலதிகமாக பெற்றது.

அந்த ஆசனத்துக்கு நியமிக்கப்பட்ட அமிர்தலிங்கம் ஆறு வருடங்களுக்கு பிறகு பாராளுமன்றத்தில் மீண்டும் பிரவேசித்தார்.

படுகொலை

ஆனால், அவரது அந்த பாராளுமன்ற வாழ்க்கை குறுகியதாகவே இருந்தது. அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் முன்னாள் யாழ் மாவட்ட உறுப்பினர் யோகேஸ்வரனை கொழும்பு புல்லஸ் ஒழுங்கையிலுள்ள அவர்களது வாசஸ்தலத்தில் சந்திக்க விசு, அலோசியஸ், அன்பு என்ற மூன்று விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் வந்தார்கள்.

தமிழர்களின் ஐக்கியம் குறித்து ஆராய்வதே நோக்கம் என்று அவர்கள் காட்டிக்கொண்டார்கள். யோகேஸ்வரனின் அறிவுறுத்தலின்பேரில் அந்த மூவரும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் சோதனைக்குட்படுத்தப்படவில்லை.

தங்களை சோதனைக்கு உட்படுத்துவது அவமதிப்பாக இருப்பதாக அவர்கள் கூறியதையடுத்தே பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு யோகேஸ்வரன் அத்தகைய உத்தரவை விடுத்திருந்தார். தேநீரும் பிஸ்கட்டும் அவர்களுக்கு பரிமாறப்பட்டன.

அதற்கு பிறகு அவர்கள் அமிர்தலிங்கத்தையும் யோகேஸ்வரனையும் நேருக்கு நேரே பிஸ்டலால் சுட்டார்கள். தோலில் ஒரு காயத்துடன் சிவசிதம்பரம் உயிர் தப்பினார். கொலையாளிகள் மூவரும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அத்துடன் தனது மக்களின் மேம்பாட்டுக்காக ஜனநாயக வழிமுறைகளின் மூலமாக இடையறாது போராடிய ஒரு மனிதனின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

அமிர்தலிங்கத்தின் ஆற்றலையும் துணிச்சலையும் வெறுத்த சிங்கள இன வெறியர்களால் அவர் கொல்லப்படவில்லை.

ஆனால் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாக உரிமைகொண்ட இயக்கத்தை சேர்ந்த தனது சொந்த இனத்தவர்களாலேயே அவருக்கு மரணம் நேர்ந்தது பெரும் கவலைக்குரியதாகும்.

அமிர்தலிங்கத்தின் மரணத்துக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் பற்றி கேள்விப்பட்ட சிறிமாவோ பண்டாரநாயக்கா அந்த அவலத்தை மணிச்சுருக்கமாக கூறினார்.

அதாவது அவரின் கொலை பற்றி அவருக்கு, முன்னாள் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க அறிவித்தபோது ‘கடவுளே… சிங்களவர் அமிர்தலிங்கத்தை கொல்லவில்லை’ என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

அமிர்தலிங்கம் மறைந்து மூன்று தசாப்தத்துக்கு அதிகமான காலம் கடந்து விட்டது. அவரது ஆளுமையும் பலமும் அவர் வகித்த ஆக்கப்பூர்வமான பாத்திரத்தின் முக்கியத்துவமும் அவரை தெரிந்து கொள்வதற்கும் நெருங்கி பழகுவதற்கும் பெரும் பேறை பெற்றவர்களின் மனதில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும்.

அவரின் கொலையினால் ஏற்படுத்தப்பட்டிருந்த வெற்றிடம் இன்னமும் நிரப்பப்படவில்லை. அத்தகையது அவரது ஆளுமையும் உயர்த்தியும்.

தனது மக்களை நேசித்ததுடன் அவர்களுக்கு சேவை செய்வதற்காக பலவகையான இடர்பாடுகளுக்கு முகம்கொடுத்த ‘தவறை’ மாத்திரமே செய்த அந்த மனிதனின் நினைவாக நான் எனது மரியாதையை செலுத்திக் கொள்கிறேன்.

ஆங்கில மூலம் : டெய்லி FT
தமிழ் மொழி பெயர்ப்பு – வீ. தனபாலசிங்கம்
நன்றி – வீரகேசரி

(This is the Tamil Version of the English Article “Life and Times of Dynamic Tamil Leader Appapillai Amirthalingam” by D.B.S.Jeyaraj in the “Political Pulse” Column of the “Daily FT” on August 26th 2020)

Share.
Leave A Reply

Exit mobile version