பத்து வயது சிறுமியை ஏமாற்றி தனது வாகனத்தில் ஏற்றிச் சென்று   காட்டுப் பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு  உட்படுத்தியதாக  கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் குறித்த சிறுமியை தனது பட்டா ரக வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்வதை அவதானித்த பக்கத்து வீட்டுச் சிறுவன் ஒருவன் இதனை அச்சிறுமியின் சகோதரியிடம் கூறியுள்ளதையடுத்து சிறுமியின் சகோதரியும், தாயும் குறித்த வாகனம் சென்ற திசையில் சென்றபோது கற்குழி ஒன்றின் பாழடைந்த காட்டுப் பகுதிக்கு அருகில் வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததனை அவதானித்துள்ளனர்.

பின்னர் வாகனத்துக்கு அருகில் குறித்த சிறுமியின்   தாயும் சகோதரியும் வருவதை அவதானித்த சந்தேக நபர் வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

எனினும் சிறுமியின் தாய் வாகனத்தின் பின்னால் தொங்கிக் கொண்டு சென்றுள்ளதை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பன்னல பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர் குறிப்பிட்ட காலம் விளக்கமறியலில் இருந்துள்ளதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு  அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்ததையடுத்து  பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை தலா இரண்டு இலட்சம் ரூபா  கொண்ட இருவரின் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட குளியாபிட்டி நீதவான் திருமதி ஜனனி சசிகலா விஜேதுங்க, பிணையாளிகள் சந்தேக நபரின் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்றும், அவர்கள் குளியாபிட்டி நீதிமன்ற எல்லைக்குள் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.

போபிட்டி, மெல்லவலானை பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவராவார்.

பன்னல பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினராலேயே இந்நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version