கடந்த சனிக்கிழமை தங்கள் நாட்டின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் 19 சீன விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், தைவானை ஆக்கிரமிப்பதற்கான ஒத்திகைத்தான் இந்த நடவடிக்கைகள் என எச்சரித்துள்ளது.

எனவே இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் எல்லைக்குள் நுழைய சீன விமானங்கள் முயல்வதாக இரண்டாவது முறையாக தைவான் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையும் இதே போன்ற அத்துமீறல் நடந்ததாக தைவான் தெரிவித்திருந்தது.

சீனாவின், பன்னிரெண்டு J-16 போர் விமானங்களும், இரண்டு J-10 போர் விமானங்களும், இரண்டு H-6 குண்டு வீசும் விமானங்களும், ஒரு Y-8 ரக நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் விமானமும் இந்த அத்துமீறலில் ஈடுபட்டதாக தைவான் கூறுகிறது.

ஒரே சீனா கொள்கையின் கீழ் தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக கருதும் சீனா, தைவானுடன் வேறு எந்த நாடும் ராஜீய தொடர்புகள் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. இருந்தபோதும் அமெரிக்கா தைவானுடன் நெருக்கமாக இருந்து வருகிறது. சமீபத்தில் கூட அமெரிக்காவின் சுகாதாரத்துறை அமைச்சர் அலெக்ஸ், அசார் தைவானுக்கு பயணம் மேற்கொண்டார்.

இது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த 40 ஆண்டுகளில், தைவானுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் உயர் அதிகாரி அலெக்ஸ்தான்.

இதன் காரணமாக அமெரிக்கா சீனாவுக்கு இடையிலான உரசலை ஆழமாக்கியது. அலெக்ஸின் பயணத்தை விமர்சித்த சீனா, இதற்கான பின்விளைவுகள் மோசமானதாக இருக்கும் என எச்சரித்தது.

அதே சமயம், இந்த ஆண்டில் பல முறை சீன விமானங்கள் தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் அதனை வழிமறிக்க தங்கள் F-16 விமானங்களை அனுப்ப வேண்டி இருந்ததாகவும் தைவான் புகார் தெரிவித்திருந்தது.

சீனாவின் அச்சுறுத்தல் குறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சீனா மோதலை தூண்டும் செயல்களில் தொடர்ந்து செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சீன அரசு ஊடகமான தி குளோபல் டைம்ஸில் வெளியாகியுள்ள செய்தியில், தைவானை ஆக்கிரமிப்பதற்கான ஒத்திகைதான் சனிக்கிழமை நடத்தப்பட்ட பயிற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அமெரிக்காவும் தைவானும் சூழ்நிலையை குறைத்து மதிப்பிடக் கூடாது. மேலும் இந்த நடவடிக்கைகள் புரளி எனவும் நினைக்க வேண்டாம்.

எங்களை தொடர்ந்து அவர்கள் கோபமூட்டினால், அது கண்டிப்பாக போரில்தான் முடியும்,” என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவானின் எதிர்கட்சித் தலைவரான ஜானி ச்சியாங், பேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவில்,“ இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தையை தொடங்கினால் போர் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

யாரால் பேச்சுவார்த்தை மூலம் நிலைமையை சீராக்க முடியுமே அவர்கள் புறப்பணிக்கப்படுகிறார்கள்.

ஆனால் போரை நோக்கி அழைத்துச் செல்பவர்கள் ஹீரோக்களாக பார்க்கப்படுகிறார்கள். பிராந்தியத்தில் அமைதியையும், தைவானின் வளர்ச்சிக்கும் இது போன்ற சூழல் நல்லதல்ல“ என தெரிவித்துள்ளார்.

எனினும் தைவானில் எந்தவித சலசலப்பும் காணப்படவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்கிறது. சீனாவின் இதுபோன்ற அச்சமூட்டும் நடவடிக்கைகள் தைவானுக்கு பழக்கமான ஒன்று என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

Share.
Leave A Reply

Exit mobile version