இலங்கையின் பல இடங்களில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், ஒருவரிலிருந்து 522 பேருக்கு தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து நாட்டு மக்களுக்கு கருத்து வெளியிடும்போதே இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மினுவாங்கொடை கொவிட் கொத்தணியின் முதலாவது முதல் இரண்டாவது தொற்றாளர் வரையில் பரவிய விதம் தொடர்பில் கண்காணிக்கப்பட்டது.

முதலாவது கொரோனா தொற்றாளர் தொடர்பில் இதுவரையில் இனங்காணப்படவில்லை. தற்போதைய தகவல்களுக்கு அமைய கடந்த மாதம் 21ஆம் திகதி முதல் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் இருந்து சிலர் சுகவீனமுற்று இருந்ததாக தெரியவந்துள்ளது

நேற்றை தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் 26 பேர் மினுவாங்கொடை பகுதியையும் 23 பேர் கம்பஹா பகுதியையும் மற்றும் 22 பேர் திவுலுபிட்டிய பகுதியையும் சேர்ந்தவர்கள்.

அத்துடன் கொழும்பில் இருவர், மாத்தளையில் ஒருவர், பொலன்னறுவையில் இருவர் மற்றும் பாணந்துறையில் ஒருவர் என பல்வேறு பகுதிகளில் இருந்து குறைந்தது ஒருவரேனும் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

அத்தோடு, ஒருவரிலிருந்து 522 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம். வைரஸ் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் உறுதியாக கூற முடியாது. மக்கள் நடந்துகொள்ளும் விதத்திலேயே வைரஸ் சமூகமயப்படுவது தங்கியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version