நாடளாவிய ரீதியில் தரம் ஐந்து புலமைப்புப் பரிசில் பரீட்சை இன்று நடைபெற்றுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.
இதன்படி, யாழ். மாவட்டத்தில் எட்டாயிரத்து 410 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதுடன் 94 பரீட்சை நிலையங்கள் மற்றும் 22 இணைப்பு நிலையங்களில் பரீட்சை நடைபெற்றது.
யாழ். மாவட்டத்தில் 2020 புலமைப் பரிசில் பரீட்சையில் தீவகம், யாழ்ப்பாணம், தென்மராட்சி வலயத்தில் மூவாயிரத்து 540 மாணவர்களும் வடமராட்சி மற்றும் வலிகாமம் வலயத்தில் நான்காயிரத்து 870 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
சுகாதார நடைமுறைக்கு அமைவாக பரீட்சை மண்டபங்கள் தயார்ப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 18 ஆயிரத்து 387 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்ததோடு 212 பரீட்சை மண்டபங்களில் பரீட்சை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் வவுனியா தெற்கு வலயத்தில் மூவாயிரத்து இரண்டு மாணவர்கள் தோற்றியதுடன் அவர்களுக்காக 34 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வடக்கு வலயத்தில் 576 மாணவர்கள் தோற்றியுள்ளதுடன் அவர்களுக்காக14 நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இம்முறை கொரோனா தாக்கத்தினை கருத்திற்கொண்டு பரீட்சை மண்டபங்களில் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக பேணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை. கிளிநொச்சியிலும் புலமைப் பரிசில் பரீட்சைகள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றன.
மேலும், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து ஏழு மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமைக்கு மத்தியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் நடைபெற்றது.
இதன்போது, உடல் வெப்ப நிலை அளவீடு செய்யப்பட்டு கை சுத்தம் செய்யப்பட்ட பின்னரே மாணவர்கள் பாடசாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, கல்வி மற்றும் சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைய சுகாதார நடைமுறையின் கீழ் பரீட்சை நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பில் மட்டக்களப்பு மத்தி , கல்குடா, பட்டிருப்பு, மண்முனை மேற்கு ஆகிய ஐந்து வலயங்களில் 103 பரீட்சை நிலையங்கள் மற்றும் 13 இணைப்பு பரீட்சை நிலையங்களில் ஒன்பதாயிரத்து 748 மாணாவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.
இதனைவிட, கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கொட்டும் மழைக்கு மத்தியில் மலையக மாணவர்களும் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்கு்த தோற்றியுள்ளனர்.
அந்தவகையில், ஹற்றன் கல்வி வலயத்தில் 43 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்ட நிலையில் அதில் மூவாயிரத்து 788 மாணவர்கள் பரீட்சை எழுதியுள்ளனர்.
அத்தோடு, நுவரெலியா கல்வி வலயத்தில் 36 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதில் நான்காயிரத்து 150 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதுடன் தமிழ் மொழி மூலம் மூவாயிரத்து 300 மாணவர்களும், சிங்கள மொழியில் 850 மாணவர்களும் பரீட்சை எழுத அனுமதி பெற்றனர்.
இதேவேளை, சுகாதார வைத்திய அதிகாரிகளின் சுகாதார பாதுகாப்பு நடைமுறையின் கீழ் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு இன்று நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்து 936 பரீட்சை நிலையங்களில் மூன்று இலட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.