நாட்டில் கொவிட் தொற்று இரண்டாம் அலை உருவானதன் பின்னர் கம்பஹா மாவட்டம் அபாயமுடையதாக காணப்பட்ட நிலையில் தற்போது அங்கு அபாயநிலை குறைவடைந்து, கொழும்பு அதிஅபாயம் மிக்க வலயமாக மாறியுள்ளது. இந்த எச்சரிக்கைக்கு மத்தியில் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தரம் 6 தொடக்கம் 13 வரையான வகுப்புக்களுக்கு மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

எனினும் கண்டி மற்றும் காலி மாவட்டத்தில் பாடசாலைகள் மாணவர்கள் மத்தியில் கொவிட் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அதற்கமை நாளைமுதல் டிசம்பர் 4 ஆம் திகதி வரை கண்டி மாவத்தில் 45 பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு இன்றைய தினம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு காலி மாவட்டத்தில் அம்பலாங்கொடை பிரதேசத்தில் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு முன்னர் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளின் பின்னர் நாட்டில் பல கிளை கொத்தணிகள் உருவாகின. அதற்கமைய பொலிஸ் மற்றும் சிறைச்சாலை கொத்தணிகள் உருவாகின. இந்நிலையில் மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் 

இந்நிலையில் இன்று புதன்கிழமை இரவு 10.30 மணி வரை  502 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். அதற்கமைய மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 938 ஆக உயர்வடைந்துள்ளது. அத்தோடு நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 469 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 15 447 பேர் குணமடைந்துள்ளதோடு , 5720 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்தோடு மரணங்களின் எண்ணிக்கையும் 94 ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டில் இனங்காணப்பட்ட 21 469 மொத்த தொற்றாளர்களில் 17 436 பேர் இரண்டாம் அலையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களாவர்.

இன்று இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 96 ஆக உயர்வடைந்துள்ளது.

கண்டி மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டது!

கண்டி மாவட்டத்திலுள்ள 45 பாடசாலைகள் நாளை வியாழக்கிழமை முதல் டிசம்பர் 4 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக மத்திய மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று  செவ்வாய்கிழமை மத்திய மாகாணத்தில் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்திருந்த நிலையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

பாடசாலைகளில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகி இன்றுடன் மூன்று தினங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் , மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் காலி மாவட்டத்தில் அம்பலாங்கொடை பிரதேசத்தில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ள பெற்றோரின் பிள்ளைகள் இருவர் பாடசாலைக்குச் சென்றுள்ளமை அப்பகுதியில் பதற்ற நிலைமையை ஏற்பட்டுத்தியுள்ளது.

இதன் காரணமாக இன்று புதன்கிழமை கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பாடசாலை நிர்வாகம் தயாராகவிருந்த நிலையிலும் ஒரு பாடசாலைக்கு மாணவர்கள் எவரும் பாடசாலைக்கு சமூகமளித்திருக்கவில்லை. மற்றொரு பாடசாலையில் 7 மாணவர்கள் மாத்திரமே வருகை தந்துள்ளனர்.

குறித்த பிள்ளைகள் இருவரும் இருவேறு பாடசாலைகளுக்குச் சென்றுள்ளதால் அந்த பாடசாலைகளில் சில மாணவர்களும் ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அம்பலாங்கொடையிலுள்ள பாடசாலை இரு தடவைகள் கிருமி நீக்கப்பட்டுள்ளதால் மாணவர்களை அச்சமின்றி வந்து கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் தமது வருமான வீழ்ச்சியை கருத்திற் கொண்டு மாணவர்களதும் மாணவர்களின் பெற்றோர்களதும் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை இன்றிலிருந்து சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கு இலங்கை மாகாணங்களுக்கிடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவைகள் சங்கம் அறிவித்துள்ளது.

ஷானி அபேசேகரவுக்கு தொற்றுறுதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் மஹர சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். தொற்றுறுதி செய்யப்பட்டதன் பின்னர் , வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு மஹர சிறைச்சாலையில் குறித்த பிரிவில் இதற்கு முன்னர் தொற்றாளர்கள் எவரும் இனங்காணப்பட்டிருக்காத நிலையில் , ஷானி அபேசேகரவிற்கு தொற்று ஏற்பட்டதன் மூலம் குறித்து விசாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு செல்வோருக்கு எழுமாறான பரிசோதனை  

அதே வேளை தற்போது அபாயமுடைய பகுதியாகவுள்ள கொழும்பிற்கு பாணந்துரையிலிருந்து தினமும் தொழிலுக்காக புகையிரதம் மூலம் வருகை தருபவர்களுக்கு இன்றைய தினம் எழுமாறான பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. பாணந்துரை புகையிரத நிலையத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இன்று தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்

ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த பண்டாரகம பொலிஸ் பிரிவின் கிரிமன்துடாவ கிராம சேவகர் பிரிவு இன்று புதன்கிழமை மாலை முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதே வேளை நேற்று மாலை முதல் பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டலுகம கிழக்கு கிராம சேவகர் பிரிவு, எப்பிட்டிமுல்ல கிராம சேவகர் பிரிவு, கொலமெதிரிய கிராம சேகவர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை கண்டி மாவட்டத்தில் அலவத்துகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட (அக்குரணை பிரதேச செயலகப் பிரிவில்) புதுகஹதென்ன கிராமசேவகர் பிரிவு மற்றும் தெலம்புகஹவத்த கிராம சேவகர் பிரிவு என்பனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version