இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதேவேளை மரணங்களின் எண்ணிக்கையும் 150 ஐ அண்மிக்கிறது. எனினும் கொழும்பு மாவட்டம் தொடர்ந்தும் அவதானமுடைய பகுதியாகவே சுகாதார தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அன்டிஜன் பரிசோதனைகளை அதிகரித்த தீர்மானித்துள்ளதாக பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை மாலை 10 மணி வரை 703 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இவர்களில் 466 தொற்றாளர்கள் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடனும் ஏனைய 237 பேர் சிறைச்சாலை கொத்தணியுடனும் தொடர்புடையவர்கள் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 28 580 ஆக உயர்வடைந்துள்ளது. எனினும் இவர்களில் 20 804 பேர் குணமடைந்துள்ளனர்.

7634 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை 491 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பதிவான மரணங்கள்

நேற்று ஞாயிற்றுக்கிழமை 3 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. அதற்கமைய நாட்டில் கொரோனா மரணங்கள் 140 ஆக உயர்வடைந்துள்ளது.

கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 98 வயதான ஆணொருவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அங்கு கடந்த 06 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்று நிமோனியா நிலையாகும்.

காஹதுட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான ஆணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கடந்த 05 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் சிறுநீரக செயலிழப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கோன பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான ஆணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கடந்த் 05 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்று நிமோனியா நிலை ஆகும்.

</

Share.
Leave A Reply

Exit mobile version