கர்நாடகாவில் பசு வதை தடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அம்மாநில சட்டமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி கர்நாடகாவில் இனி பசுக்களை சட்டவிரோதமாக விற்பதோ, வேறு இடத்துக்கு கொண்டு செல்வதோ, கொலை செய்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஒருவேளை ஒரு பசுவுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு அது மற்ற பசுக்களுக்கு பரவும் என தெரிய வந்தால், அந்த கட்டத்தில் மட்டுமே அது வெட்டப்படலாம் என்று புதிய சட்டம் கூறுகிறது.

இந்த புதிய சட்ட மசோதாவின் பிரிவு (1)(2) ஆகியவற்றில் கால்நடை என்பது பசு, பசுக்கன்று என்று கூறப்பட்டுள்ளது.

பசுவதை அல்லது பசு கொல்லப்படுவதாக தெரிய வந்தால், உதவி ஆய்வாளர் அல்லது அதற்கு மேல் பதவியில் உள்ள அதிகாரி எந்தவொரு இடத்திலும் சோதனை நடத்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

குற்றம் செய்யும் நபருக்கு 3 முதல் 5 ஆண்டுகளுக்கு தண்டனை விதிக்கப்படும். சிறைக்காவலுடன் 50 ஆயிரம் முதல் 5 லட்சம்வரை அபராதம் விதிக்கப்படும்.

இதேவேளை, புதிய சட்டத்தில் கால்நடை இறைச்சி என்பது மாட்டிறைச்சி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது எருமை மாட்டை வெட்டி இறைச்சித் தேவைக்கு பயன்படுத்த சட்ட தடங்கல் கிடையாது என்று அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரபு செளஹான் தெரிவித்தார்.

கர்நாடகா சட்டமன்றத்தில் இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றும் நடைமுறைகளை அம்மாநில சட்ட அமைச்சர் மதுசுவாமி புதன்கிழமை தொடங்கியபோது, அதன் நகல்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா குரல் எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து பேரவையில் அமளி ஏற்பட்டபோதும், பலத்த கூச்சல், குழப்பத்துக்கு இடையே இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

கர்நாடகாவில் ஏற்கெனவே பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளபோதும், அதில் குற்றம் செய்வோருக்கு தண்டனை, அபராதம் உள்ளிட்டவை போதுமானதாக இல்லை.

இதனாலேயே புதிய வடிவத்தில் தண்டனை நடவடிக்கையை கடுமையாக்கும் வகையில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

பழைய சட்டப்படி பசுவதை குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆறு மாத சிறையும் அபராதமாக ரூ. 1000 மட்டுமே இருந்தது.

எருது, காளைகள், எருமை மாடு ஆகியவற்றை கொல்ல புதிய சட்டம் தடை விதிக்காதபோதும், 12 வயதுக்கு மேற்பட்ட எருமைகள் அல்லது இனப்பெருக்கத்துக்கோ பால் சுரக்கவோ தகுதியற்றதாக கால்நடை மருத்துவரால் சான்றளிக்கப்பட்ட எருமைகள் மட்டுமே வெட்டப்படலாம் என்று புதிய சட்டம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தியாவில் 24 மாநிலங்களில் பசுவதைக்கு சட்ட ரீதியாகவும் கால்நடை பராமரிப்பு விதிகள் மூலமாகவும் தடை உள்ளது.

அருணாசல பிரதேசம், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் பசுவதைக்கு என தனி சட்டம் இல்லை.

Share.
Leave A Reply

Exit mobile version