வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணி எப்படி அமையும் என்ற கேள்விக்கு, விஜயகாந்த், கமலஹாசன் ஆகியோரது கட்சிகளின் நிலைப்பாடு இரண்டு வெவ்வேறு நிகழ்ச்சிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அக்கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க வரி வசூலிப்பதை கைவிடக் கோரியிருக்கிறார்கள்.

புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயப் பெருமக்களுக்கு 40,000 கோடி ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும், மக்கள் மற்றும் வியாபாரிகள் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல் & டீசல் போன்ற எரிபொருளின் விலை உயர்வை மத்திய அரசு உடனே குறைக்க வேண்டும் எனவும் தேமுதிக மாவட்ட செயலலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.

மேலும் சட்டமன்றத் தேர்தலில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் எந்தக் கட்சி உடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல், தமிழகத்தின் முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் தேமுதிக கட்சி யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்பது குறித்து, கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஜனவரி 2021-ல் அறிவிப்பார் என, அவரது மனைவி மற்றும் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தேர்தலில் கட்சிக்காக, விஜயகாந்த் களத்தில் இறங்கிப் பிரசாரம் செய்வார் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

கடந்த சில வருடங்களாகவே விஜயகாந்த் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அதோடு சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கும் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

கூட்டணி பற்றி கமல் என்ன சொன்னார்?

சட்டமன்றத் தேர்தலுக்காக சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சித் தலைவர் கமல் ஹாசன் தமது முதல் கட்ட பிரச்சாரத்தை மதுரை மற்றும் நெல்லை பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 16 வரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

அதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்த கமலஹாசன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது போலீசார் தங்கள் பிரசாரத்துக்கு கடைசி நேரத்தில் தடை விதித்திருப்பதாகத் கமல் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையம் அருகே கமல் ஹாசன்.

மேலும் அது பற்றிக் கூறிய அவர், “எங்களுக்கு தடைகள் புதிது இல்லை. தடைகள் குறித்து அனுபவம் இருக்கிறது.

அதற்கான ஒத்திகையும் பார்த்து விட்டோம். பதற்றமின்றி மக்களை சென்று சேர்வோம்” என்று தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் எதற்கு என்று கேட்டு அவர் ட்வீட் செய்தபோது ஏன் பிரதமர் நரேந்திர மோதிக்கு டேக் செய்யவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

“தற்போது செய்து விடலாம்” என்று அதற்கு கமல் பதில் சொன்னார். கடந்த முறை தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சையான கருத்தைப் பேசியதால் பிரச்சாரம் தடை செய்யப்பட்டது குறித்து கேட்டபோது, “கருத்து யாருக்கு குத்தலாக இருக்குமோ அவர்கள் தடைகளை செய்வார்கள், அதனை மீறியும் பிரசாரம் தொடரும்” என்று அவர் தெரிவித்தார்.

கட்சிகள் பிளவுபடவும், கூடவும் வாய்ப்பு…

மக்கள் நீதி மய்யம் மற்றும் ஆன்மிக அரசியல் ஒன்று சேருமா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், “கட்சிகள் பிளவு அடையவும் வாய்ப்பு உள்ளது.

கூடவும் வாய்ப்பு உள்ளது. அதை மட்டும் கூற இயலும்” என்று தெரிவித்தார் அவர். மூன்றாவது அணி அமையுமா என்ற கேள்விக்கு சாத்தியமே.

ஆனால் எப்போது சாத்தியம் என்பதை இப்போது கூறமுடியாது என்று தெரிவித்தார் அவர். கமல் ஹாசனின் பிராசர நிகழ்ச்சிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும் அவர் உள்ளரங்கக் கூட்டங்களில் தங்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version