28 ஆண்டுகளாக நடந்து வந்த கேரள கன்னியாஸ்திரீ அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரீ ஸ்டெபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது கேரள மாநில சிபிஐ நீதிமன்றம். சிறை தண்டனையுடன் சேர்த்து பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு ரூ. 6.50 லட்சமும் கன்னியாஸ்திரீ ஸ்டெபிக்கு ரூ. 5.50 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 49 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 1992ம் ஆண்டு கொலை நடந்தபோது கன்னியாஸ்திரீ அபயாவுக்கு வயது 19 மட்டுமே.

கேரளாவில் மிக நீண்டகாலம் விசாரிக்கப்பட்ட கிரிமினல் வழக்காக இந்தக் கொலை வழக்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

சகோதரி அபயாவின் உடல், அவர் தங்கியிருந்த விடுதியின் கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்ட 28 ஆண்டுகள் கழித்து, பாதிரியாரும், கன்னியாஸ்திரியும் தான் கொலைக்குக் காரணம் என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கண்டுபிடித்துள்ளது.

இந்த வழக்கில் கோட்டூர் (69) மற்றும் சகோதரி செபி (55) ஆகியோருக்கான தண்டனை விவரத்தை நாளை அறிவிப்பதாக, திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். சனல் குமார் கூறியுள்ளார்.

கொலை செய்தது மற்றும் தடயங்களை அழித்த குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது நிரூபிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கோட்டூர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

கோட்டயத்தில் கனன்யா கத்தோலிக்க தேவாலயம் நடத்தி வரும் பியஸ் கான்வென்ட் விடுதியில் தங்கி, பட்ட நிலைக்கு முந்தைய கல்வி பயின்று வந்தவர் கன்னியாஸ்திரீ அபயா.

அவருடன் விடுதியில் தங்கியிருந்த மற்றொரு கன்னியாஸ்திரீ ஷெர்லி 1992 மார்ச் 26 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு தேர்வுக்குப் படிப்பதற்காக எழுந்தபோது கடைசியாக அபயாவை பார்த்திருக்கிறார். குளிர் நீரில் முகம் கழுவ அபயா சமையலறைக்குச் சென்றிருக்கிறார்.

அப்போது பாதிரியார் கோட்டூர், கன்னியாஸ்திரீ செபி, பாதிரியார் புட்ரிகயல் ஆகியோர் உறவில் ஈடுபட்டிருந்த காட்சியை சகோதரி அபயா பார்த்ததாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இதை சகோதரி அபயா வெளியில் சொல்லிவிடுவார் என்ற பயத்தில், அவருடைய கழுத்தை பாதிரியார் கோட்டூர் நெரிக்க, அபயாவை கோடாரியால் சகோதரி செபி தாக்கிக் கொன்றதாகவும், பிறகு மூவரும் சேர்ந்து உடலை கிணற்றில் வீசிவிட்டதாகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது.

“தீர்ப்பு பற்றிய செய்திகள் பரவியபோது, மகிழ்ச்சி அடைவதா சோகம் கொள்வதா என எனக்குத் தெரியவில்லை. இரண்டு உணர்வுகளுமே தோன்றின.

நீதிமன்றம் இன்றைக்கு தீர்ப்பு கூறும் என நான் எதிர்பார்க்கவில்லை. இந்த தீர்ப்பால் என் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

சொர்க்கத்தில் இருந்து அவர்கள் இதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நான்கு மாத இடைவெளியில் இருவரையுமே நான் இழந்துவிட்டேன்” என்று அபயாவின் சகோதரர் பிஜு தாமஸ் துபையில் இருந்து பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

“அபயா என்னைவிட இரண்டு வயது இளையவர். அவருக்கு 14 அல்லது 15 வயது இருந்தபோது, கன்னியாஸ்திரீ ஆக வேண்டும் என்று அழுவாள். என் தந்தை திட்டுவார்.

ஆனால் கன்னியாஸ்திரீகளும், பாதிரியார்களும் எங்கள் வீட்டுக்கு வரும் போது தரப்படும் மரியாதைகளைப் பார்த்து அவள் ஈர்க்கப்பட்டாள்” என்று பிஜூ தெரிவித்தார். இப்போது அவர் ஓட்டல் துறையில் பணியாற்றி வருகிறார்.

சகோதரி அபயாவை இழந்த போது, “அது கொலை என்று என் பெற்றோர் கூறினர். பலம் மிக்கவர்களை எதிர்த்துப் போராட முடியாத ஏழையாக நாங்கள் இருந்தோம்.

எங்களுக்காகப் போராட நிறைய பேர் முன்வந்தனர். ஆக்ஷன் கவுன்சிலும் அதில் ஒன்றாக இருந்தது” என்றார் பிஜு.

தற்கொலையா அல்லது கூட்டுக் கொலையா?

“நிச்சயமாக இது கூட்டுக் கொலைதான். தலையில் தாக்கியுள்ளனர். அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து உடலை கிணற்றில் வீசியுள்ளனர்.

இந்த வழக்கு மத்தியப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றப்பட்ட போது நான் தான் முதலாவது விசாரணை அதிகாரியாக இருந்தேன்” என்று அப்போது காவல் துறை துணை கண்காணிப்பாளராக இருந்த வர்கீஸ் பி. தாமஸ், பிபிசி இந்தி பிரிவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கான்வென்ட் மதர் சுப்பீரியர் தலைமையில், கன்னியாஸ்திரிகள் குழு அளித்த மனுவின் அடிப்படையில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற அப்போதைய முதல்வர் கே. கருணாகரன் உத்தரவிட்டார்.

ஆரம்பத்தில் உள்ளூர் காவல் துறையினரும், பின்னர் குற்றப் பிரிவு காவல் துறையினரும் இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்று கருதினர்.

அது கொலையாக இருக்கும் என்று சந்தேகித்ததால் முதல்வரிடம் மனு அளித்தனர்.

1993ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. எடுத்துக் கொண்டது. அந்த ஆண்டின் இறுதியில் இது கூட்டுக் கொலை என்று தாமஸ் மற்றும் அவரது விசாரணைக் குழுவினர் முடிவுக்கு வந்தனர்.

“நிலுவை வழக்குகள் எதுவும் இருக்கக் கூடாது என மேலதிகாரி விரும்பியதால், தற்கொலை என்று கூறி வழக்கை முடித்துவிடுமாறு கூறினார்.

அதை ஏற்க மறுத்து, நான் பணியில் இருந்து ராஜிநாமா செய்துவிட்டேன்” என்று 76 வயதான தாமஸ் தெரிவித்தார்.

ஆனால், “எந்த முடிவுமே எடுக்காமல் வழக்கை முடிப்பதற்கு அதிகபட்ச எண்ணிக்கையில் முயற்சிகள் எடுக்கப்பட்டதால் இது வரலாற்றில் இடம் பெறும் வழக்காக இருக்கும். உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகுதான் இதன் விசாரணை முறைப்படி நடைபெற்றது.

ஆதாரங்களை சீர்குலைக்க பல முயற்சிகள் நடந்தன. உண்மை கண்டறியும் பரிசோதனை பதிவுகளை மாற்ற முயற்சி நடந்தது.

அதை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை” என்று இந்த வழக்கில் தொடர்பில்லாத வழக்கறிஞர் சந்தியா ராஜூ பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அபயா தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று குறைந்தது மூன்று சமயங்களில் சிபிஐ குழுக்கள் கூறியுள்ளன.

சிபிஐ அறிக்கைகளை நீதித்துறை நடுவர் நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் ஏற்க மறுத்துவிட்டன. சிபிஐ-க்கு மூன்று மாதங்கள் அவகாசம் தருவதாக 2008ல் உயர்நீதிமன்றம் அறிவித்தது.

சந்தர்ப்ப சாட்சியங்கள்

1992 மார்ச் 26 ஆம் தேதி இரவு கான்வென்ட் வளாகத்தில் பாதிரியார் கோட்டூரை பார்த்ததாக, கான்வென்ட் அருகில் வசிக்கும் சஞ்சு மாத்யூ என்பவர் 164வது பிரிவின் கீழ் சிபிஐ-யிடம் சாட்சியம் அளித்த போது திருப்பம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து கோட்டூர், கன்னியாஸ்திரீ செபி, பாதிரியார் புட்ரிகயல் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.

கான்வென்ட் விடுதியில் இரு பாதிரியார்களையும் பார்த்ததாக, திருட்டு தொழில் செய்து வந்த அடக்கா ராஜூ என்பவரும் சிபிஐயிடம் தெரிவித்தார்.

“ஆரம்பத்தில் இருந்தே இது தற்கொலை அல்ல என்பது தெளிவாகத் தெரிந்தது. சமையலறையில் போராட்டம் நடந்திருப்பதற்கான அடையாளங்கள் இருந்தன.

அபயாவின் செருப்புகள் சமையலறையில் இரண்டு இடங்களில் கிடந்தன. படிப்பதற்காக அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கக் கூடியவருக்கு, தற்கொலை என்ற எண்ணம் முதலில் வராது.

ஏதோ குழப்பம் இருக்கிறது என்று உணர்வதற்குப் போதிய ஆதாரமாக அது இருந்தது” என்று குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி முயற்சிகள் மேற்கொண்ட ஆக்ஷன் கவுன்சிலைச் சேர்ந்த ஜோமன் புதென்புரக்கல் பிபிசி இந்தி பிரிவிடம் தெரிவித்தார்.

“கேரளாவில் மிக நீண்டகாலம் நடந்த கிரிமினல் வழக்குகளில் ஒன்றாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது” என்று சந்தியா ராஜூ கூறினார்.

குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை தேவாலய நிர்வாகம் எப்படி அணுகுகிறது என்ற கேள்வியையும் இந்தத் தீர்ப்பு எழுப்பியுள்ளது.

“குற்றவாளிகள் தொடர்ந்து பாதிரியார்களாக செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களை தேவாலய நிர்வாகம் நீக்கவில்லை.

குறைந்தபட்சம் பாதிரியார் பணியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்திருக்கலாம். குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டால், அப்போது மீண்டும் சேர்த்துக் கொண்டிருக்கலாம்” என்று எங்கள் சகோதரிகளைப் பாதுகாத்திடுங்கள் என்ற அமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான பாதிரியார் அகஸ்டின் வட்டொல்லி கூறியுள்ளார்.

ஜலந்தர் மறைமாவட்டத்தில் பிஷப் பிரான்கோ முலக்கால் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என்று ஒரு கன்னியாஸ்திரீ காவல் துறையில் புகார் கொடுத்த சில நாட்களில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version