பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்களிப்பதற்காக அந்நாட்டு நாடாளுமன்றம் கூடியது.
இந்நிலையில் வாக்கெடுப்பு தொடங்கும் முன்பே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரிப்பதாக துணை சபாநாயகர் கான் சூரி அறிவித்தார். நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான் கான் பரிந்துரைத்தார்.
இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 5-க்கு எதிராக இருப்பதாக துணை சபாநாயகர் அறிவித்திருந்தார்.
தம் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் அமெரிக்காவால் முன்னெடுக்கப்படும் சர்வதேச சதி என்று பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவில் இம்ரான் கான் பதவிக்கு வந்ததாக பரவலாக கருதப்பட்டவர் என்றும், இப்போது ராணுவத்தின் ஆதரவை அவர் இழந்துள்ளதாக பார்வையாளர்கள் கருதும் நிலையில், சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள எதிர்க்கட்சிகள் விரும்பியதாகவும் பிபிசி செய்தியாளர் செக்கந்தர் கெர்மானி கூறுகிறார்.
தேசிய சட்டமன்றம் என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வந்துகொண்டிருக்கும் எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், ஆனால் பிரதமர் இம்ரான் இதுவரை வரவில்லை என்றும் பிபிசி செய்தியாளர் ஹுமைரா கன்வால் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் ஏராளமான இருக்கைகள் காலியாக இருப்பதாக அவர் கூறினார்.
இதனிடையே நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் இம்ரான்கான், நாடாளுமன்றத்தைக் கலைக்கவும், மீண்டும் தேர்தல் நடத்தவும் ஜனாதிபதிக்கு தாம் பரிந்துரைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
“நாட்டு மக்கள் தேர்தலுக்குத் தயாராக வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும். வெளி ஆள்கள் அல்ல” என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா மீது குற்றச்சாட்டு
தனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உதவியோடு ஒரு வெளிநாட்டு சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக கூறிய இம்ரான் கான், இதனை உறுதி செய்யும் அதிகாரபூர்வ ஆவணம் ஒன்றை தேசிய பாதுகாப்பு கமிட்டியும், அமைச்சரவையும் பார்த்துள்ளன என்றும், அதில், இம்ரான் கானை பதவி நீக்கினால், பாகிஸ்தானோடு அமெரிக்காவின் உறவு மேம்படும் என்றும், பாகிஸ்தான் மன்னிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக இம்ரான் கான் தெரிவித்ததார்.
……………………………………….
இனி என்ன நடக்கும்?
நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று பிரதமர் பரிந்துரைத்தால் அதை ஜனாதிபதி ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அப்படி நடக்கும்பட்சத்தில், அடுத்த தேர்தல் நடத்தி முடிவுகள் வரும் வரை நாட்டு நிர்வாகத்தைக் கவனிக்க காபந்து பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இம்ரான் கான்
முன்னதாக பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் அசாத் குவைசர் நீக்க தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில்தான் துணை சபாநாயகர் தற்காலிக சபாநாயகராக செயல்பட்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்துள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் அரசியல் சர்க்கஸ் தொடங்கியிருப்பதாகவே பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.
முன்னதாக, பாகிஸ்தான் தலைநகரமான இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், இன்று காலை பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் முகமது சர்வார் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, அம்மாநிலத்தின் புதிய ஆளுநராக ஒமர் சர்பராஸ் சீமா நியமிக்கப்பட்டுள்ளார்.
342 உறுப்பினர்களை கொண்டது பாகிஸ்தான் நாடாளுமன்றம். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டுமானால், இம்ரான் கான் அரசுக்கு 172 வாக்குகள் தேவையாக இருந்தது.
இம்ரானுக்கு என்ன சிக்கல்?
பிரதமர் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சித் தலைவரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சித் தலைவருமான ஷபாஸ் ஷெரீஃபால் மார்ச் 28 அன்று தாக்கல் செய்யப்பட்டது.
69 வயதான இம்ரான் கான், ஒரு புதிய பாகிஸ்தானை உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்தோடும், சில வாக்குறுதிகளோடும் 2018 இல் ஆட்சிக்கு வந்தார்.
ஆனால், விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பது, போன்ற அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்கத் தவறியதால் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார்.
பல தசாப்தங்களாக வேரூன்றியிருந்த ஊழலைத் துடைப்பதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த அவர், விண்ணை முட்டும் பணவீக்கம், முடக்கப்பட்ட கடன் போன்ற நிர்வாகச் சுமைகளால் ஆட்சியை நடத்த கூட்டணி கட்சிகளின் ஆதரவை தக்கவைக்கவே போராடினார்.
பாகிஸ்தானை பொறுத்தவரை அரசியல் அதிகாரத்திற்கு முக்கிய ஆதாரமாக ராணுவ பலம் இருந்துவரும் நிலையில், இம்ரான் கான் ராணுவத்தின் ஆதரவையும் இழந்துவிட்டார் என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.