இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியால், ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் தீவிரமாக உருவெடுத்த நிலையில், சனிக்கிழமை (ஏப்ரல் 2ம் தேதி) அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இது தவிர, 36 மணி நேர ஊரடங்கு சட்டமும் அமலில் உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு முதல் இலங்கையில் ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ள இந்த சூழ்நிலையில், கடந்த 30ம் தேதி இரவு தன்னெழுச்சியாக கூடிய பெருந்திரளானோர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனால், சுமார் 3 கோடி ரூபாவிற்கும் அதிக சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்றைய தினம் அவசர கால சட்டத்தை அமல்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் மூத்த வழக்கறிஞர் இளையதம்பி தம்பையா கூறியது..
இயற்கை அனர்த்தம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் போன்ற நாட்டில் அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில், அரசாங்கத்தினால் சாதாரண சட்டத்தின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என கருதும் போது, அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்படும் என அவர் கூறுகின்றார்.
பாதுகாப்பு விடயங்கள், பொருளாதார விடயங்கள், இயற்கை அனர்த்தங்கள் போன்ற காரணிகளினால் அரசாங்கத்திற்கு சாதாரண சட்டங்களின் ஊடாக அதனை சமாளிக்க முடியாத நிலைமை வரும் போது, மேலதிகமான அடக்குமுறை சட்டமே, இந்த அவசரகால சட்டம் என அவர் குறிப்பிடுகின்றார்.
பொதுமக்கள் பாதுகாப்பு என்ற பெயரில்...
”பொதுமக்கள் பாதுகாப்பு என்ற பெயரில், அரசை பாதுகாப்பதற்கான சட்டமே இந்த அவசரகால சட்டம். இது இலங்கையில மட்டும் இல்ல.
எல்லா நாடுகளிலேயும் இருக்கும். இந்தியாவை எடுத்துக்கொண்டால், 70ம் ஆண்டு காலத்தில் அவசர கால சட்டம் இருந்தது.
இலங்கையிலும் 70ம் ஆண்டு காலப் பகுதியில் இருந்தது. 60களிலும் இருந்தது. 50களிலும் இருந்தது. 2012ம் ஆண்டு வரை இருந்தது.
பிரதானமாக சாதாரண சட்டத்தை கொண்டு நாட்டு மக்களை அமைதியாக வைத்திருக்க முடியாத ஒரு சூழ்நிலையில் தான் இந்த அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவது என்பது என்னுடைய பார்வை.
ஆனால் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழ்நிலை வரும் நேரத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்திற்கு கீழ அவசர கால சட்டத்தை பிரகடனப்படுத்துவதாக அரச தரப்பு அல்லது ஆளும் தரப்பினர் சொல்வார்கள்.
அவசர கால சட்டத்தை பிரகடனப்படுத்துவது என்பது, சாதாரண சட்டத்தில் நாட்டை ஆள முடியாத ஒரு சூழ்நிலையில் நடக்கிறது,” என அவர் கூறுகின்றார்.
இது பாரதூரமான சட்டமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது பாரதூரமான சட்டம் என பதிலளித்தார்.
மக்களுடைய உரிமையை மறுக்கின்ற சட்டம் எனவும் அவர் விளக்கமளித்தார்.
ஒருவர் மீது நியாயமான சந்தேகம் ஏற்படுமானால், அவரை கைது செய்ய முடியும் என்ற சரத்து இந்த சட்டத்தில் உள்ளது என அவர் குறிப்பிடுகின்றார்.1
யாருடைய சந்தேகத்தில் கைது செய்வது?
”நியாயமான சந்தேகத்தை யார் உருவாக்குவது என்றால், போலீஸ் அதிகாரிகள்தான். அவர்களுக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில போனதாக கூறுவார்கள்.
தகவல் சரியா பிழையா என்று விசாரிப்பது உடனே நடக்காது. ஆகவே இது சாதாரண நிலைமையை விட பாரதூரமான வாழ்க்கையில் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தும்” என இளையதம்பி தம்பையா தெரிவிக்கின்றார்.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் அடிப்படையில், அரசியலமைப்பின் ஏற்பாட்டின் அடிப்படையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்ற ஒரு சட்ட ஆயுதம் தான் அவசரகால சட்டம் என அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த ஆயுதத்தையே ஆளும் தரப்பு தற்போது கையில் எடுத்துள்ளதாக மூத்த வழக்கறிஞர் இளையதம்பி தம்பையா தெரிவிக்கின்றார்.
இலங்கையில் இதற்கு முன்னர் அவசரகால சட்டம் அமலில் இருந்த காலக் கட்டத்தில் காணாமல் போனோர் விவகாரத்திற்கு யார் பொறுப்பு என்பது இன்று வரை நிரூபிக்கப்படவில்லை என அவர் கூறுகின்றார்.
அவசரகால சட்டம் என்பது அரச பயங்கரவாதத்திற்கு இடமளிப்பதாக இருக்கும் என கூறும் அவர், அரசாங்கத்தின் பெயரில் வேறு சக்திகள் கூட இயங்குவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக தெரிவிக்கிறார்.
எவ்வாறான சக்திகள் இயங்கினாலும், அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும் என அவர் கூறுகிறார்.
இந்த அவசரகால சட்டத்தின் ஊடாக நன்மைகள் ஏதேனும் காணப்படுகின்றனவா என வழக்கறிஞரிடம் வினவியபோது…
”என்னை பொறுத்தவரை அவசரகால சட்டம் நன்மை பயக்கும் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் கூட சாதாரண சட்டங்கள் போதுமானவை.
அடக்கு முறை கூட கூடத்தான், புதுசட்டங்களும், சாதாரண சட்டங்களை விட விசேட சட்டங்களும் தேவைப்படும். பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தில் ஒரு கிழமைக்கு முன்புதான் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
திருத்தம் கொண்டு வந்து, அது போதாமல் இந்த அவசரகால சட்டத்தை கொண்டு வருவது என்பது, திருத்தம் செய்ததும் போதாது என்பதைத்தான் காட்டுகின்றது” என அவர் கூறுகின்றார்.
இலங்கையில் மிக முக்கியமான அனைத்து இடங்களிலும் ராணுவம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மிக முக்கிய நிறுவனங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயுதம் ஏந்திய ராணுவம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதுடன், மிக முக்கிய பொறுப்புகளுக்கு ராணுவ அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், இலங்கையில் ராணுவ ஆட்சி கொண்டு வரப்படுவதற்கான சாத்தயம் உள்ளதாக பலரும் கூறி வருகின்ற நிலையிலேயே, அவசரகால சட்டம் அமல்படுத்தப்படுகின்றது.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை ராணுவ வீரராக கடமையாற்றிய ஒருவர் என்ற பின்னணியில், இலங்கையில் ராணுவ ஆட்சிக்கு இடம் உள்ளது என்ற ஒரு எண்ணம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், இலங்கையில் ராணுவ ஆட்சி ஒன்று கொண்டு வர சாத்தியம் உள்ளதா என பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது.
ராணுவ உடையில் வந்தால்தான் ராணுவ ஆட்சியா?
”இது இலங்கைக்கு புது விஷயம் அல்ல. ராணுவ பாதை மறிப்புக்கள், பாதை சோதனைகள் என அவசரகால நிலைமைகளில் இல்லை. சாதாரண சூழ்நிலையில் கூட இருந்துட்டு இருக்கு.
இலங்கையில் சட்ட ரீதியாக இல்லா விட்டாலும், நடைமுறையில பல திணைக்களங்கள் போன்ற விடயங்களில் தலைவர்களாக இருக்கிறார்கள்.
தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கூடுதலாக இடமளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இந்த கொரோனா காலத்தில். அவர்கள் இலங்கையின் நிர்வாகத்தில் பிரிக்க முடியாத பங்காக வந்து விட்டார்கள்.
அரசாங்கம் அதற்குரிய ஏற்பாட்டை செய்துகொடுக்கிறது. சிவில் நிர்வாகத்தையும், ராணுவ நிர்வாகத்தையும் ஒன்றாக்கி விட்டார்கள்.
ஆகவே ராணுவத் தலைமை ஒன்று வந்ததால மட்டும் ராணுவ ஆட்சி வருமா? அல்லது வராமல் இருப்பதால் ராணுவ ஆட்சி இல்லையா? என நாம் பழைய வரைவிலக்கணங்களை வைத்துப் பார்க்கக் கூடாது.
ராணுவ உடுப்போட ஒரு நாட்டுத் தலைவர் வந்து, நான்தான் தலைவர் என்று சொல்வது என்ற ஒரு சூழ்நிலை வந்தால் தான் ராணுவ ஆட்சி. இல்லை என்றால் ராணுவ ஆட்சி இல்லை என்று நாம் பார்க்க முடியாது.
ஆனால் ராணுவ செயற்பாடுகள் கூடும்போது, ஜனநாயக ஆட்சி அல்லது சிவில் ஆட்சியில் குறைபாடு ஏற்படுகிறது. இதன்படி, இந்த அவசரகால சட்டத்தில் அவர்களுக்கு மேலும் இடமளிக்கப்படும்” என இளையதம்பி தம்பையா தெரிவிக்கின்றார்.
-பிபிசி தமிழ் செய்தி-