`இது எங்கள் போராட்டத்தின் கடைசி நாள். கிட்டத்தட்ட எல்லா ஆயுதங்களும் தீர்ந்துவிட்டன. வெடிபொருள்களும் போரைச் சமாளிக்கும் அளவுக்கு இல்லை. இதற்குப் பிறகு எங்களில் சிலருக்கு மரணமும், சிலருக்குச் சிறையும் காத்திருக்கின்றன.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய போர், ஆறு வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்தப் போரில் உக்ரைனின் கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்றவற்றின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்துவது, பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குதல், உக்ரைன் மக்களைப் படுகொலை செய்தல் என மனித உரிமை மீறல்களில் ரஷ்யா ஈடுபட்டுவருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது.

ஆனால், இது தொடர்பாக ஐ.நா சபையில் பலமுறை விவாதிக்கப்பட்டும் ரஷ்யா அதைத் தொடர்ந்து மறுத்துவருகிறது.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமையை ரஷ்ய ராணுவம் ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என ஐ.நா-வில் ரஷ்யா மீது உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

ரஷ்யா, உக்ரைனின் மரியுபோல் நகரத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் தனதாக்கிக்கொள்ளும் முயற்சியில் நீண்டகாலமாக ஈடுபட்டுவருகிறது.

அதனால் ரஷ்யா, உக்ரைன் போரின்போது மரியுபோல் நகரைக் கிட்டத்தட்ட தரைமட்டமாக்கிவிட்டது.

இந்த நிலையில், மரியுபோல் நகரில் ரஷ்யப் படைகளிடமிருந்து இத்தனை நாள்கள் தாக்குப்பிடித்த உக்ரைன் ராணுவத்தின் 36-வது கடற்படை மரைன் பிரிகேட் தனது முகநூல் பக்கத்தில், “இது எங்கள் போராட்டத்தின் கடைசிநாள். கிட்டத்தட்ட எல்லா ஆயுதங்களும் தீர்ந்துவிட்டன.

வெடிபொருள்களும் போரைச் சமாளிக்கும் அளவுக்கு இல்லை. இதற்குப் பிறகு எங்களில் சிலருக்கு மரணமும், சிலருக்குச் சிறையும் காத்திருக்கின்றன.

நெருப்பு வளையத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறோம். இதனால், மரியுபோல் முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்வது உறுதி” எனப் பதிவிட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version