மத்திய வங்கியின் நாணயச் சபையானது 08 ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வட்டி வீதங்களை 08 ஆம் திகதி நடைமுறைக்குவரும் வகையில் 13.50 சதவீதத்திற்கும் மற்றும் 14.50 சதவீதத்திற்கும் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
அதன்படி நாட்டின் வட்டி வீதங்கள் கணிசமானளவு அதிகரிக்கப்பட்டுள்ளன.
கூட்டுக் கேள்வி கட்டியெழுப்பப்படுதல், உள்நாட்டு நிரம்பல் இடையூறுகள், செலாவணி வீத தேய்மானம் மற்றும் உலகளாவிய ரீதியில் பண்டங்களின் உயர்வடைந்த விலைகள் போன்றவற்றினால் உள்நாட்டில் எதிர்வரும் காலத்தில் பணவீக்க அழுத்தங்கள் மேலும் கடுமையடையக் கூடுமென்பதனைக் கரிசனையில் கொண்டு மத்திய வங்கியின் நாணயச் சபையானது இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
மேலும் பொருளாதாரத்தில் மேலதிகக் கேள்வித் தூண்டல் பணவீக்க அழுத்தங்கள் கட்டியெழுப்பப்படுவதனை இல்லாதொழிப்பதற்கும் மோசமான பணவீக்க எதிர்பார்ப்புக்கள் உயர்வடைவதனை முன்கூட்டியே தடுப்பதற்கும் செலவாணி வீதத்தினை உறுதிப்படுத்துவதற்கும் தேவைப்படும் உத்வேகத்தினை வழங்குவதற்கும் வட்டி வீதக் கட்டமைப்பில் அவதானிக்கப்பட்ட ஒழுங்கீனங்களினைத் திருத்தியமைப்பதற்கும் கணிசமான கொள்கைப் பதிலிறுப்பு இன்றியமையாதது எனும் கருத்தினைக் கொண்டு இந்த தீர்மானம் மத்திய வங்கியினால் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது மத்திய வங்கியினால் வட்டி வீதம் 7 வீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அண்மைய வரலாற்றில் இந்தளவு தூரம் அதிகமான வகையில் வட்டி வீதம் இம்முறையே அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது தற்போது நாட்டில் காணப்பட்டு வந்த வட்டி வீதமானது இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய ஒரு தீர்மானமாக காணப்படுகிறது.
மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க பதவியேற்று ஒரு சில மணி நேரங்களில் நாணய சபை கூடி இந்த தீர்மானத்தை எடுத்திருக்கிறது.
இதனூடாக ரூபாவின் பெறுமதி ஸ்திரமான நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வட்டி வீதமானது இவ்வாறு இரண்டு மடங்காக அதாவது 14 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதன் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பதையும் மத்திய வங்கி இதனை அதிகரித்தது என்பதனையும் பார்க்க வேண்டியுள்ளது.
அதாவது இனி வரும் காலங்களில் வங்கிகளில் கடன் எடுக்கின்றவர்களுக்கு என்ன நடக்கும்? அதேபோன்று வங்கிகளில் நீண்டகால வைப்புக்களை செய்தவர்களுக்கு என்ன நடக்கும் ?
என்பது தொடர்பாக இங்கு ஆராய வேண்டியது அவசியமாயிருக்கிறது. காரணம் வட்டி வீதம் நாட்டில் அதிகரிக்கும்போது இந்த இரண்டு விடயங்களிலும் அது தாக்கம் செலுத்துவதாக அமையும்.
வட்டிவீத அதிகரிப்பானது சாதாரண மக்களின் வாழ்க்கையில் எவ்வாறு தாக்கத்தை செலுத்தும் என்பது தொடர்பாகவே பார்க்க வேண்டியுள்ளது.
அதாவது வங்கிகளில் மக்கள் பணத்தை வைப்புச் செய்யும்போது அதற்கான வட்டி வீதம் அதிகமாகக் கிடைக்கும்.
குறிப்பாக நிலையான வைப்புகளுக்கு 14 வீதத்துக்கும் அதிகமான அளவில் வட்டி கிடைப்பதற்கான சாத்தியம் இருக்கின்றது. இதனால் மக்கள் அதிகளவில் தமது பணத்தை வங்கிகளில் வைப்புச் செய்ய முயற்சிப்பார்கள்.
அதேபோன்று கடன் வட்டி வீதமும் தற்போது அதிகரித்திருக்கின்றது. 14 வீதத்துக்கும் அதிகளவிலேயே கடன்களை பெற வேண்டிய ஒரு நிலைமை காணப்படுகிறது.
இது கடன்பெறும் மக்களின் ஆற்றலை குறைக்கும். அதாவது கடன் பெறும் ஆற்றல் குறைவு காரணமாக அது நிதி பரிமாற்றத்தை குறைக்கும்.
இவ்வாறு வங்கியில் வைப்பு செய்வது அதிகரித்து கடன் பெறுவது குறையும்போது நிதி பரிமாற்றம் குறைவடைந்து பணவீக்கம் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
காரணம் பொருட்களின் விலை உயர்வு மற்றும் அதிகளவில் பொருள் கொள்வனவு என்பனவே பணவீக்கத்துக்கு முக்கிய காரணிகளாகும். எனவே இதன் மூலம் பணவீக்கம் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த வட்டி வீத அதிகரிப்பானது ஏற்கனவே கடன்களை பெற்றிருக்கின்றவர்களுக்கு அதாவது வாகனங்களை குத்தகைக்கு எடுத்திருக்கின்றவர்கள், வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட கடன்களைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு என்ன நடக்கும் என்பது பரவலாக மக்கள் மத்தியில் எழுப்பப்படுகின்ற கேள்வியாக இருக்கின்றது.
மக்கள் வங்கிகளில் கடன் பெறும்போது நிலையான வட்டி விகிதத்தில் கடன் அல்லது மிதக்கும் வட்டி வீதத்தில் கடன் என்ற அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.
அதாவது நிலையான வட்டி அடிப்படையில் கடனை பெற்றால் தற்போது இந்த வட்டி அதிகரிப்பின் அடிப்படையில் வட்டி அதிகரிக்காது.
ஆனால் மிதக்கும் வட்டி வீதத்தின் அடிப்படையில் கடனைப் பெற்றிருந்தால் குறிப்பிட்டளவில் கடன்களின் வட்டி வீதம் அதிகரிக்கும் சாத்தியமே இருக்கின்றது. அதனை தவிர்க்க முடியாது.
ஆனால் கடன் பெற்றவர்கள் வங்கிகளுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த முடியும். குத்தகை கடன்கள் நிலையான வட்டி விகிதத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.
அதனால் வாகனங்களை குத்தகை அடிப்படையில் பெற்றவர்கள் அந்தக் கடனை செலுத்துவது குறித்து அச்சப்பட வேண்டியதில்லை.
ஆனால் வீட்டுக் கடன்களைப் பெற்றுக் கொள்வது குறைவடையும். காரணம் அதிக வட்டி என்பதால் மக்கள் அதிக வட்டியில் வீட்டுக் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கு தயங்குவார்கள். அதுமட்டுமன்றி சீமெந்து கட்டிடப் பொருட்களின் விலைகளும் அதிகரித்திருக்கின்றன.
அதனால் சாதாரண மக்கள் வீடு ஒன்றை நிர்மாணிப்பது என்ற கனவில் தற்போது ஒரு சிக்கல் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
வட்டி வீதமும் அதிகரித்திருப்பதால் வீட்டுக் கடனை பெற்று அந்தக் கடனை செலுத்துவது மக்களுக்கு கடினமாக இருக்கும்.
தற்போது டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 330 ரூபாய் வரை வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
இதனால் இந்த நிலையிலேயே ரூபாவின் பெறுமதியை ஸ்திரப்படுத்துவதற்கு இந்த வட்டி வீத அதிகரிப்பு மூலம் வழி ஏற்பட்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மிக முக்கியமாக டொலர் உள்வருகையை அதிகரிப்பதற்கு இந்த நடவடிக்கை உறுதுணையாக அமையும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் வட்டி வீதம் கடந்த காலங்களில் மிகக்குறைவாக இருந்ததன் காரணமாக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்நாட்டில் கடன்களை பெற்று தமது செலவுகளை செய்து கொண்டிருந்தன.
தற்போது இலங்கையில் வட்டி வீதம் அதிகரித்திருப்பதால் உள்நாட்டில் கடன்களை பெறுவது கடினமாக அமைந்து விடும்.
அதனால் இலங்கையில் இருக்கின்ற நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருக்கின்ற டொலர்களை இங்கே கொண்டு வருவதற்கான சாத்தியம் இருக்கின்றது.
அத்துடன் வெளிநாடுகளில் இருக்கின்ற இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் கூட இலங்கையில் வங்கிகளில் வைப்புச் செய்யும் சாத்தியம் உள்ளது. அதனால் அந்நிய செலாவணி உள்வருகை அதிகரிக்கலாம்.
இது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. ஆனால் இவ்வாறான நிலை ஏற்படுவதற்கு இலங்கையில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை உறுதியாக இருக்கவேண்டும்.
நாட்டில் தற்போது நிலவுகின்ற நெருக்கடி நிலை இதற்கு சாதகமாக அமையாது. அதேபோன்று இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று கடன் பெறவுள்ளது. எனவே சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெறும்போது வட்டி வீதங்களை அதிகரிக்குமாறு கோரும்.
அதனால் பொருத்தமான நேரத்தில் தேவையான ஒரு நடவடிக்கையை மத்திய வங்கி எடுத்துள்ளது. மிக முக்கியமானதொரு காலகட்டத்தில் இக்கட்டான நெருக்கடி மிக்க நேரத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பொருளாதார நிபுணர் ஹர்ஷ டி சில்வா, வட்டி வீதத்தை அதிகரிக்குமாறு கோரியிருந்தார். அதன்படி தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இநநிலையில் சகலரும் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்து கவனம் செலுத்துகின்றனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க முக்கிய விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அதாவது மிக நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கின்றோம்.
மிக விரைவாக மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. அதற்கு முதற்கட்டமாக நாட்டில் அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை பேணப்படவேண்டும்.
அவை தற்போது நெருக்கடியில் இருக்கின்றன. அவற்றை மாற்றியமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனது தலைமையில் மத்திய வங்கி சுயாதீனமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் செயற்படும்.
எனக்கு எந்தவிதமான அழுத்தங்களும் வராது என்று நம்புகின்றேன். அரசாங்கம், எதிர்க்கட்சி, மக்கள் என எனக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். மத்திய வங்கியின் அடிப்படையே சுயாதீனமாக செயற்படுவது அதனை நாங்கள் முன்னெடுப்போம்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் விரைவுபடுத்தப்படும். நாட்டில் தற்போதைய நிதி நெருக்கடி நிலைமையை தீர்க்கும் நோக்கில் சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் துரிதப்படுத்தப்படும்.
நேற்று இரவிலிருந்தே சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும். அதனூடாக இலங்கைக்கு பெற்றுக்கொள்ள முடியுமான நிதி உதவி தொடர்பில் ஆலோசிக்கப்படும்.
இந்தப் பேச்சுவார்த்தைகளை விரைவாக நடத்துமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். இந்த பேச்சுவார்த்தைகள் விரைவுபடுத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நாட்டு மக்கள் படுகின்ற கஷ்டங்களை பார்த்துவிட்டே இந்த சவால்களை ஏற்றுக்கொள்வதற்கு நான் இங்கு வந்தேன். ஒரே இரவில் மாற்றத்தை எதிர்பார்க்க வேண்டாம். ஆனால் விரைவாக நிலைமையில் முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தற்போது இலங்கை பொருளாதார ம் தொடர்பான ஒரு உதாரணத்தை கூறுகின்றேன். ஒரு வாகனம் வீதியிலிருந்து விலகி பள்ளத்தில் விழுந்து கொண்டிருக்கின்றது.
முதலில் அவ்வாறு விழுந்து கொண்டிருக்கும் வாகனம் தரையில் விழுவதற்கு முன்னர் வேகத் தடையையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். அதன் பின்னரே அதனை தூக்கி எடுக்க வேண்டும்.
எனவே தற்போது வாகனம் விழுவதை தடுப்பதற்கே நடவடிக்கை எடுக்கின்றோம். அதன் பின்னர் அதனை தூக்கி எடுப்போம். எனவே ஒரு குறிப்பிட்ட காலம் எமக்கு தேவையாக இருக்கின்றது.
மக்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். தேவையற்ற எதிர்பார்ப்புக்களை உடனடியாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். ஆனால் என்னால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.
இந்நிலையில் விரைவாக தற்போதைய நெருக்கடியை தீர்க்க வேண்டும். பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் தீர்க்கப்பட வேண்டும்.
அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட்டால் மட்டுமே பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியும். இந்நிலையில் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதிகரிக்கப்பட்டுள்ளன. அடுத்து பொருளாதாரத்தில் என்ன நடக்கும் என்பதனை பார்க்கலாம்.
ரொபட் அன்டனி