இலங்கையரான பிரியந்த குமார பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களில் 6 பேருக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கைதான 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையரான பிரியந்த குமார பாகிஸ்தான் – சியல்கொட் பகுதியில் வைத்து கடந்த வருடம் டிசம்பர் 3ஆம் திகதி அடித்து கொலைசெய்யப்பட்டு எரியூட்டப்பட்டிருந்தார்.
அத்துடன், பிரியந்த குமார அடித்துக் கொலை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய காணொளியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் 100 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன், மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையிலேயே விசாரணைகளின் அடிப்படையில் 6 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் மேலும் 76 பேருக்கு 2 வருட சிறைத்தண்டனையும் விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.