நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை குறைத்து 19 ஆவது திருத்த சட்டத்தை மீண்டும் கொண்டுவரும் விடயத்தில் ஆளும், எதிர்க்கட்சிகள் தற்போது ஒரு குறிப்பிட்ட அளவிலான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவும் இது தொடர்பில் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
பிரதமர் பாராளுமன்றத்திலேயே இது தொடர்பாக அறிவித்திருக்கின்றார். அதேபோன்று தற்போது எதிர்க்கட்சியும் இதற்கான யோசனைகளை முன்வைத்திருக்கின்றது.
எனவே அடுத்த கட்டம் எவ்வாறு நகரப்போகின்றது என்பதே இங்கு மிக முக்கியமானதாக இருக்கின்றது.
நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருக்கின்ற தற்போதைய பின்னணியில் அரசியல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பாக தொடர்ச்சியாக அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களினால் ஆராயப்பட்டு வருகின்றது.
தற்போது அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று நெருக்கடியை ஏற்படுத்துகின்ற வகையில் மக்களின் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற சூழலில் அரசியல் ரீதியான பல்வேறு திருப்புமுனை மாற்றங்களை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவே அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மிக முக்கியமாக கடந்த 44 வருடங்களாக இந்த நாட்டில் கடும் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் சம்பாதித்துக்கொண்டிருக்கின்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றியமைப்பதற்கு தற்போது ஒருசிறந்த அரசியல் ரீதியான சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் அதனை அரசியல் ரீதியாக ஒருங்கிணைத்து சகல தரப்பினரும் ஈடுபாட்டுடன் செயற்பட்டு அந்த இலக்கை அடைவார்களா என்பதே இங்கு கேள்விக்குறியாக இருக்கின்றது .
எனினும் நாட்டில் தற்போதைய அரசியல் நிலைமையானது அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திக்கின்றது.
அதாவது மார்ச் மாதம் 31 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக மிரிஹானை பகுதியில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் தற்போது காலிமுகத்திடல் மற்றும் ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரியே இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எப்படியிருப்பினும் கடந்த மூன்று வாரங்களாக மக்களின் இந்தப் போராட்டங்கள் பாரிய மாற்றங்களை தற்போதைய இந்த சூழலில் ஏற்படுத்தியிருக்கின்றன.
முழு அமைச்சரவையும் பதவி விலகியமை சகல கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்தமை அதனை எதிர்க்கட்சிகள் நிராகரித்தமை , இளம் பிரதிநிதிகளை கொண்ட அமைச்சரவை நியமிக்கப்பட்டமை, அரசியலமைப்பு திருத்தத்தை செய்ய தயார் என ஜனாதிபதி அறிவித்தமை, 19 ஆவது திருத்த சட்டத்தை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தெரிவித்தமை, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானத்தை பாராளுமன்ற சபை முதல் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவித்தமை உள்ளிட்ட பல திருப்புமுனைகள் ஏற்பட்டுள்ளன.
அந்தவகையில் இந்த மூன்று வார போராட்டங்கள் மிக முக்கியமான மாற்றங்களை அரசியல் கட்டமைப்பில் ஏற்படுத்தியிருக்கின்றன.
அதேநேரம் மிக முக்கியமான பல மாற்றங்களை இந்த புதிய நிலைமையின் ஊடாக செய்துகொள்ள முடியுமா என்பதே தற்போது ஆராயப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இந்த சூழலில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்குவதற்காக அரசியலமைப்பு திருத்த யோசனையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் கையளித்தது.
தற்போதைய நெருக்கடியில் அரசியலமைப்பு ரீதியாக எவ்வாறான மாற்றங்களை செய்ய முடியும் என்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளுடன் சபாநாயகர் நடத்தி வருகின்ற கலந்துரையாடல்களில் ஒரு பகுதியாகவே ஐக்கிய மக்கள் சக்தி இந்த யோசனையை பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளித்திருக்கிறது.
இதனூடாக முழுமையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இருக்கின்றது.
அதேநேரம் அரசாங்கமும் மீண்டும் 19 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவருவதாக அறிவித்திருக்கின்றது.
அந்தவகையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் இந்த அணுகுமுறைகள் ஒரு புள்ளியில் வந்து இணைவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை முழுமையாக நீக்கும் எண்ணம் இல்லை என்றே தெரிகின்றது.
மாறாக 19ஆவது திருத்த சட்டத்தை மீண்டும் கொண்டுவந்து ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் எடுக்கப்போவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் தற்போது நடைமுறையில் இருக்கின்ற 20 ஆவது திருத்த சட்டத்தை நீக்கி ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கின்ற 19ஆவது திருத்த சட்டத்தை மீண்டும் 21 ஆவது திருத்த சட்டமாக கொண்டுவர முயற்சிக்கின்றமை அரசியல் ரீதியான ஒரு மாற்றத்துக்கு வழிகாட்டியாக அமைந்திருக்கின்றது.
ஆனால் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறைமையை முற்றாக நீக்கவேண்டுமானால் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
தற்போது தேர்தல் ஒன்றை நடத்தக்கூடிய நிலையில் நாடு இல்லை என்பது சகலரதும் கருத்தாக உள்ளது.
எனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 19 ஆவது திருத்தச ட்டத்தை மீண்டும் கொண்டுவருவது சாத்தியமாகவுள்ள ஒரு முயற்சியாக காணப்படுகின்றது.
இந்நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என சகல தரப்பினரும் இதனை ஆதரிப்பதால் அதற்கான சாத்தியம் அதிகரித்திருப்பதாக தெரிகின்றது.
அதனடிப்படையில் ஒரு அரசியல் ரீதியான மாற்றத்திற்கான சாத்தியம் இருப்பதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது விரைவாக 20 ஆவது திருத்தச ட்டத்தை நீக்கி 19 ஆவது திருத்த சட்டத்தின் முக்கியமான விடயங்களை உள்ளடக்கி அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளப்படவேண்டும் என்று மகாசங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த விடயத்தில் பிரதான கட்சிகள் தாமதமடைந்துகொண்டிக்கின்றமை தொடர்பாக கடும் அதிருப்தியையம் விசனத்தையும் பெளத்த மகா சங்கங்கள் வெளியிட்டிருக்கின்றன.
அந்தவகையில் மகா சங்கங்களின் அறிக்கையையடுத்து இந்த செயற்பாடுகள் விரைவுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
எனவே மாற்றம் ஒன்றுக்கான சாத்தியத்தின் சமிக்ஞை தெரிய ஆரம்பித்துள்ளது. அதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதாகவே தெரிகின்றது .
19 ஆவது திருத்த சட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் பட்சத்தில் அதில் பல முக்கிய விடயங்கள் காணப்படுகின்றன.
முக்கியமாக தற்போது காணப்படுகின்ற பாராளுமன்ற பேரவைக்கு பதிலாக அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்படும்.
அதில் ஆளும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் சிவில் சமூக பிரதிநிதிகளும் இடமபெறுவார்கள்.
அந்த அரசியலமைப்பு பேரவையே நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும். முக்கியமாக தேர்தல் ஆணைக்குழு , நிதி ஆணைக்குழு, நீதி சேவை ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு, லஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு உள்ளிட்ட 9 ஆணைக்குழுக்கள் 19 ஆவது திருத்த சட்டத்தின் கீழ் நியமிக்கப்படும்.
அதேபோன்று நாட்டின் பிரதான அரச பதவிகளுக்கான நியமனங்களும் அரசியலமைப்பு பேரவையின் ஊடாகவே இடம்பெறும்.
மேலும் பிரதமரை நியமித்தல், அமைச்சர்களை நியமித்தல் என்பன தன்னிச்சையாக இடம்பெற முடியாது. மாறாக இணக்கப்பாட்டு கலந்துரையாடல்கள் ஊடாகவே அது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு பின்னரே கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும்.
இதுபோன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் 19 ஆவது திருத்தசட்டத்தில் உள்ளடங்குகின்றன.
ஆனால் இந்த நெருக்கடியான அரசியல் சூழலில் அரசியல் கட்சிகள் 19 ஆவது திருத்த சட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான ஒருங்கிணைப்பு செயற்பாடுகளை எவ்வாறு ஒருங்கிணைத்து முன்கொண்டு செல்லப் போகின்றன என்பது முக்கியமாகும்.
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை குறைத்து 19 ஆவது திருத்த சட்டத்தை மீண்டும் கொண்டுவரும் விடயத்தில் ஆளும், எதிர்க்கட்சிகள் தற்போது ஒரு குறிப்பிட்ட அளவிலான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவும் இது தொடர்பில் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
பிரதமர் பாராளுமன்றத்திலேயே இது தொடர்பாக அறிவித்திருக்கின்றார். அதேபோன்று தற்போது எதிர்க்கட்சியும் இதற்கான யோசனைகளை முன்வைத்திருக்கின்றது.
எனவே அடுத்த கட்டம் எவ்வாறு நகரப்போகின்றது என்பதே இங்கு மிக முக்கியமானதாக இருக்கின்றது. என்ன நடக்கும் என்பதை சகலரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.