இலங்கையிலிருந்து கள்ளத்தோணி மூலம் தமிழகம் வந்த இரண்டு இளைஞர்களை பிடித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் மீது இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு இருப்பது தெரியவந்தது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் அங்கு வாழ வழியின்றி, மக்கள் நகை, வீடு வாசலை விற்று பல லட்சம் ரூபாய் கொடுத்து கள்ளப்படகுகள் மூலம், கடல்வழியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் குடும்பம் குடும்பமாக அண்டை நாடுகளுக்குள் அகதிகளாக நுழைந்து வருகின்றனர்.

அதன்படி தமிழகத்திற்குள் இதுவரை 15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

அவர்களிடம் கடலோரக் காவல் குழும போலீஸார் மற்றும் மரைன் போலீஸார் உரிய விசாரணை மேற்கொண்ட பின்னர், அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைத்தனர்.

இந்த நிலையில், ராமநாதபுரம், தொண்டி கடற்கரைப்பகுதியில் இன்று சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த இரண்டு இளைஞர்களை கடலோர காவல்படை போலீஸர் பிடித்து மரைன் போலீஸிடம் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் மரைன் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசீலன், அருள்ராஜ் என்பது தெரியவந்தது.


போதை பொருள் கடத்தல் இளைஞர்களிடம் மரைன் போலீசார் விசாரணை

இலங்கையில் வேலை வாய்ப்புகள் இல்லாததால் பசி பட்டினியுடன் வாழ்ந்து வருவதாகவும், அதனால் அகதிகளாக கள்ளத்தோணி மூலம் தமிழகம் வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அவர்கள் கைகளில் எந்த உடமைகளும் எடுத்து வராததால் சந்தேகம் அடைந்த போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், இவர்கள் புகைப்படங்களை இலங்கை யாழ்ப்பாணம் போலீஸாருக்கு அனுப்பி விசாரித்தபோது, அவர்கள் இருவரும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்தது.

அதையடுத்து, அவர்களைக் கைதுசெய்த மரைன் போலீஸார் அவர்கள் தமிழகத்திற்கு போதைப்பொருகள் ஏதேனும் கடத்தி வந்தார்களா என விசாரணை நடத்தினர். பின்னர் இருவரும் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version