மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்திற்கு அமைய, இன்று (26) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 346 ரூபா 49 சதமாக அமைந்துள்ளது.

எனினும், இலங்கை வங்கி இன்று ஒரு டொலரை 353 ரூபாவிற்கு விற்பனை செய்தது.

கடந்த மார்ச் 8 ஆம் திகதி முதல் டொலரின் பெறுமதியை சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் விநியோகத்திற்கு அமைய தீர்மானிப்பதற்கு ஏதுவாக நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய நாணய மாற்று விகித முறை அமுல்படுத்தப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் ரூபாவின் பெறுமதி 75 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

ரூபாவின் பெறுமதியில் ஏற்படுகின்ற வீழ்ச்சி பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

IMF இடமிருந்து நிவாரணம் கிடைக்குமா?

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதிகாரிகள் மற்றும் பொருளாதார செயற்றிட்டத்துடன் நெருங்கி செயற்படுவதன் ஊடாக தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கை மேற்கொள்ளும் பிரயத்தனத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும் என இந்தப் பேச்சுவாரத்தையின் பின்னர் நாணய நிதியம் அறிவித்தது.

எனினும், எந்தவொரு கொடுக்கல் வாங்கலுக்காகவும் இலங்கையின் கடன் செலுத்தும் இயலுமையை நிலையான பாதையை நோக்கி இட்டுச் செல்ல முடியும் என்ற உறுதிப்பாடு அவசியம் எனவும் அவர்கள் கூறினர்.

இதனிடையே, இலங்கை நிதிக்கொள்கையை கடுமையாக்கி வரியை அதிகரிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் Anne–Marie Gulde–Wolf தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு காரணத்தையும் மூலோபாய ரீதியிலான பதில்களையும் தேடுவதே தற்போதுள்ள முக்கிய நடவடிக்கை என அவர் சுட்டிக்காட்டினார்.

நிதியையும் வருமானத்தையும் மூலோபாய ரீதியில் அதிகரிக்க வேண்டும் எனவும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த நிதிக்கொள்கையை கடுமையாக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், நெகிழ்வுத்தன்மையுடன் நாணயமாற்று விகிதத்தை பேண வேண்டும் எனவும் கூறினார்.

அழுத்தத்தை சந்தித்துள்ள மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், நிதிக் கொள்கை வகுக்கப்பட வேணடும் என வலியுறுத்திய அவர், செல்வந்தர்களிடம் அதிக வரி அறவிடப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையுடனான செயற்றிட்டம் தொடர்பாக எமக்கு பிரேரணையொன்று கிடைத்துள்ளது. அது தொடர்பில் நாம் கடந்த வாரம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தோம். இலங்கையின் கடன் செலுத்தும் இயலுமை ஸ்திரமற்றுள்ளது. ஆகவே, இலங்கை அதிகாரிகள் கடன் பெற்றுக்கொண்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை ஆரம்பித்ததை சிறந்த விடயமாகக் காண்கின்றோம்.

என Anne–Marie Gulde–Wolf மேலும் குறிப்பிட்டார்.

IMF ஒத்துழைப்பது தொடர்பில் சீனாவிற்கு அதிருப்தியா?

கடனை மறுசீரமைத்து மீள செலுத்துவதற்கான இயலுமையை சிறந்த நிலைக்கு கொண்டு வந்து அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பது உள்ளிட்ட பொருளாதார மறுசீரமைப்பே IMF- இன் எதிர்பார்ப்பாகும்.

இந்த செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்தால், இலங்கைக்கு வழங்கும் கடன் உதவித் திட்டத்தை அவர்கள் அறிவிப்பார்கள்.

எனினும், இலங்கை முன்வைத்துள்ள கடன் மறுசீரமைப்பிற்கு சீனா இணங்கவில்லை.

கடனை மறுசீரமைக்கவும், IMF உதவியை பெற்றுக்கொள்ளவும் இலங்கை மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் கவலையடைவதாக இலங்கைக்கான சீன தூதுவர் அண்மையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது கூறியிருந்தார்.

இலங்கை கடனை மீள செலுத்துவதை தவறவிடாதிருப்பதற்கு சீனா அதிகபட்ச உதவிகளை வழங்கியுள்ள நிலையிலும், சர்வதேச நாணய நிதியத்தை நாடியதன் மூலம் கடன் செலுத்துவதை தவற விடுவதற்கு இலங்கை துரதிர்ஷ்டவசமான தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பு தீர்மானம் நிச்சயமாக எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள இரு தரப்பு கடன் கொடுக்கல் வாங்கல்களில் தாக்கம் செலுத்தும் எனவும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

சீனாவிடமிருந்து இலங்கை எதற்காக அதிகளவில் கடன் பெற்றது?

கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தளை விமான நிலையம், கொழும்பு தாமரைக் கோபுரம், அதிவேக நெடுஞ்சாலைகள் என்பன சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடன் மூலம் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களாகும்.

சீனா கூறும் வகையில், கடனை மீள செலுத்துவதற்காக தற்போது நாம் மீண்டும் கடனைப் பெற வேண்டுமா?

அவ்வாறு கடனை பெற்றால் மீண்டும் மீண்டும் வட்டியை செலுத்துவதற்கு நேரிடுமல்லவா?

இந்தியா என்ன கூறுகின்றது?

கடன் மறுசீரமைப்பு மற்றும் IMF ஒத்துழைப்பை இந்தியா தொடர்ந்தும் ஊக்குவித்து வருகின்றது.

IMF பேச்சுவார்த்தை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வாஷிங்டன் நகரில் இலங்கை தூதுக்குழுவை சந்தித்த இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அது தொடர்பாக கலந்துரையாடியிருந்தார்.

இலங்கையின் துண்டு விழும் தொகை நெருக்கடிக்கு உடனடி தீர்வாக சர்வதேச நாணய நிதியம் உடனடி கடனை வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என அவர் வாஷிங்டனில் தெரிவித்தார்.

இதேவேளை, ஏனைய கடன் பெற்ற தரப்பினர் தொடர்பில் செயற்படும் விதத்தில் இலங்கை தொடர்பிலும் செயற்படுமாறு இந்திய நிதி அமைச்சர் சீனாவிடம் வலியுறுத்தினர்.

எவ்வாறாயினும், உடனடி நிதி உதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இதுவரை இணக்கம் தெரிவிக்கவில்லை.

அநேகமாக இலங்கைக்கு நீண்டகால திட்டத்தின் கீழ் IMF-இன் ஒத்தழைப்பு கிடைக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், இலங்கை மீள செலுத்த வேண்டியுள்ள வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தற்போது முக்கிய தேவையாக காணப்படுகிறது.

இதேவேளை, சர்வதேச கடன் தரப்படுத்தலில் இலங்கை தொடர்ந்தும் பின்தள்ளப்பட்டுள்ளது.

Standard and Poor’s சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனம், தெரிவு செய்யப்பட்ட கடனை திருப்பிச் செலுத்த தவறும் அபாயம் உள்ள நாடாக இலங்கையை பெயரிட்டுள்ளது.

2023 ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முதிர்ச்சியடையவுள்ள இறைமை முறிகளுக்கான வட்டியை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட 30 நாள் கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் அதனை செலுத்தத் தவறினால், தரப்படுத்தலில் D மட்டம் வரை இலங்கை தரமிறக்கப்படலாம் என Reuters செய்தி வௌியிட்டுள்ளது.

D மட்டம் என்பது கடனை செலுத்தத் தவறும் அபாயம் உள்ள நாடு என்பதையே குறிக்கின்றது.

குறித்த காலப்பகுதிக்குள் இலங்கை அந்த வட்டியை செலுத்தும் என எதிர்பார்க்க முடியாது என Standard and Poor’s நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மைக் காலமாக Moody’s , Fitch, Standard and Poor’s ஆகிய நிறுவனங்கள் தொடர்ச்சியாக கடன் தரப்படுத்தலில் இலங்கையை தரமிறக்கி வருகின்றன.

நாட்டில் நிலவும் பொருளார நிலைமையை சீர் செய்வதற்கு இதனை விடவும் துரிதமாக தீர்வுகளைத் தேட வேண்டும் அல்லவா?

Share.
Leave A Reply

Exit mobile version