“ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு போர் கதை இருக்கும். அந்த கதைகளை நாம் மறக்காமல் நம் அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டும்.”ரஷ்யாவின் ‘ரகசிய முதல் பெண்மணி’ என்று அழைக்கப்படும் அலினா கபய்வா இவ்வாறு கூறினார். யுக்ரேன்-ரஷ்யா போருக்கு மத்தியில் அவர் தலைப்பு செய்தியில் இடம்பிடித்துள்ளார்.

அதிபர் விளாதிமிர் புதினின் மகள்கள் உட்பட அவருக்கு நெருக்கமானவர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஆனால் அலினா இப்போது வரை இந்த தடையிலிருந்து தப்பித்துள்ளார்.

புதினின் ‘காதலி’ மற்றும் முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபய்வா மீது தடை விதிக்க அமெரிக்கா தயாராகி வந்ததாக வேர்ல்ட் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியது.

ஆனால் கடைசி நிமிடத்தில் அது செய்யப்படவில்லை. புதின் இதை ஒரு தனிப்பட்ட தாக்குதலாக கருதலாம். அமைதியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கு பின்னடைவு ஏற்படலாம் என்று இதன் பின்னணியில் கூறப்பட்டது.

ரஷ்ய அதிபர் புதினின் ‘காதலி’ மீது அமெரிக்கா, வேண்டுமென்றே பொருளாதாரத் தடைகளை விதிக்கவில்லை என்ற கூற்றை செய்தியாளர் சந்திப்பின் போது, வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜேன் சாகி நிராகரித்தார்.

அலினா கபய்வா மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேட்டதற்கு, “நாங்கள் தொடர்ந்து தடைகளை மதிப்பாய்வு செய்து வருகிறோம்” என்று சாகி கூறினார்.

அலினா கபாயேவா

அலினா ஜிம்னாஸ்டிக் வீரராக இருந்து 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவர் தனது 13 வது வயதில் ஜிம்னாஸ்டிக் உலகிற்கு அறிமுகமானார் . 1998 இல் தனது முதல் உலக பட்டத்தை( ரோப் பிரிவில்) வென்றார்.

இதற்குப் பிறகு, 2001 மற்றும் 2002 இல் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்களிலும் பல பதக்கங்களைப் பெற்றார்.

2003-லும் பல உலக பட்டங்களை வென்றார். ஊக்கமருந்து விவகாரத்திலும் அவர் சிக்கினார். ஆயினும் இதற்காக பெரிய தண்டனை எதையும் அவர் சந்திக்கவில்லை.
காணொளிக் குறிப்பு,

 

2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அவர் படிப்படியாக அரசியலில் நுழைந்தார். மேலும் அவரது பெயர் புதினுடன் இணையத்தொடங்கியது.

அவர் ஐக்கிய ரஷ்ய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான டுமாவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2014 இல், சோச்சி குளிர்கால ஒலிம்பிக்கில் ஜோதியை ஏந்திய வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.

அலினா, கிரெம்ளின் ஆதரவு ஊடகக் குழுவான ‘தி நேஷனல் மீடியா குரூப்’ தலைவராகவும் உள்ளார்.

ஆனால் மேற்கத்திய பொருளாதாரத் தடைகளைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதத்தில் அவரது பெயர் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது என்று தி மாஸ்கோ டைம்ஸ் தெரிவிக்கிறது.

2015 ஆம் ஆண்டில் அலினா, பிரசவத்திற்காக சுவிட்சர்லாந்த் சென்றதாக, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அதிகாரிகள் வால் ஸ்ட்ரீட் ஜெர்னலிடம் தெரிவித்ததாக மாஸ்கோ டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பின்னர் 2019ல் மாஸ்கோவில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், புதின் இதை உறுதிப்படுத்தவில்லை.

‘தி மாஸ்கோ டைம்ஸ்’ செய்தியின்படி, கடந்த வாரம் சனிக்கிழமை ரஷ்ய தலைநகரில் நடந்த ‘அலினா விழாவில்’ அலினா தோன்றினார். மே மாதம் ரஷ்யாவின் ‘வெற்றி தின’ கொண்டாட்ட ஒளிபரப்பில் இடம்பெற உள்ள ஜிம்னாஸ்ட் கண்காட்சிக்காக அவர் அங்கு வந்திருந்தார்.

“ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு போர் கதை உள்ளது. அந்த கதைகளை நாம் மறக்காமல் நம் அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டும்,” என்று அப்போது அவர் கூறினார்.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறித்த விமர்சனங்கள் குறித்தும், ரஷ்ய ஜிம்னாஸ்ட்கள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது குறித்தும் அவர் பேசுகையில், “நமக்கு இதனால் வெற்றி மட்டுமே கிடைக்கும்,” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அலினா பங்கேற்ற பிறகு, அவர் சுவிட்சர்லாந்து அல்லது சைபீரியாவில் உள்ள பதுங்கு குழியில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் செய்திகள் வெளியிட தடை நிலவுகிறது என்று ‘ டெய்லி மெயில்’ தெரிவிக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கலந்துகொண்டனர். இதன் போது யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆதரவான ‘Z’ சின்னமும் காண்பிக்கப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version