இலங்கையின் காலி முகத்திடல் தன்னெழுச்சி போராட்டத்தின் மீது கடந்த 9ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கொழும்பு காலி முகத்திடலில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற வன்முறை தொடர்பில் ஜனாதிபதி் கோட்டாபய ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க ஆகிய இருவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி முகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது,

இதன்படி, கடந்த 9ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவூட்டுமாறு சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 22 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர், போலீஸ் மாஅதிபருக்கு அறிவித்திருந்தார்.

கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version