இலங்கை மிகவும் மோசமான ஒரு நிலைமையை எதிர்கொண்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், பொருளியல் நிபுணருமான எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.
பிபிசி தமிழுடன் இடம்பெற்ற நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இன்று காணப்படுகின்ற நிலைமை மேலும் தீவிரமடையும் என அவர் கூறுகின்றார்.
அத்துடன், உணவு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் எழுந்துள்ளதாகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், பொருளியல் நிபுணருமான எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.
பொருளாதார ரீதியில் இலங்கையின் தற்போதைய நிலைமை என்ன?
மிகவும் கவலைக்கிடமான ஒரு நிலைமை தான். ஏனென்றால், நான் வழமையாக சொல்வதை போல இதுவொரு சாதாரண நிலைமை அல்ல. மிக மோசமான ஒரு பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியிருக்கின்றது. இந்த நிலைமை மேலும் தீவிரமடையக்கூடிய நிலைமைதான் காணப்படுகின்றது. இப்போதுள்ள நிலைமை எப்போதும் ஏற்றுக்கொள்ள கூடிய நிலைமையாக தென்படவில்லை.
இலங்கையின் நிலைமை தற்போது வங்குரோத்து அல்லது திவால் ஆகியிருக்கின்றதா?
நேற்று வரை அவ்வாறான நிலைமை இல்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தோம். இலங்கை தன்னுடைய பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாது மட்டுமல்ல, அந்த கடன்களுக்கான வட்டியைக்கூட செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அது பற்றிய அறிவிப்புகள் வந்தது. இப்போது வழங்கப்பட்டுள்ள அந்த கருணைக் காலம் முடிவடைந்திருக்கின்றது. ஆகவே இலங்கை முழுமையாகவே திவாலான நிலைமையில் உள்ளது என்று சொல்லலாம்.
அப்படியென்றால், எதிர்காலத்தில் எப்படியான ஒரு நிலைமை ஏற்படும்?
எல்லாவற்றுக்கும் காரணமாக அமைவது டாலர் பற்றாக்குறை. இந்த டாலர் பற்றாக்குறை தீராத பட்சத்திலே இந்த நிலைமை இன்னும் மோசமாகக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆனால் புதிதாக பதவியேற்றிருக்கின்ற பிரதமர், அவருக்கு இருக்கக்கூடிய தொடர்புகள் மற்றும் சர்வதேச உறவுகளை பயன்படுத்தி, இந்த நிலைமையிலிருந்து வெளிவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிகின்றது.
ரணில் விக்ரமசிங்கவின் வருகையின் அடுத்த நாள், இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்திருந்தது. பங்கு சந்தை ஒரு வளர்ச்சியை எட்டியிருந்தது. இதை எப்படி அவதானிக்கின்றீர்கள்?
இந்த நிலைமை, மத்திய வங்கியின் ஒரு சுற்றறிக்கை மூலமாக ஏற்பட்டது என்று நான் நினைக்கின்றேன். ஏனென்றால், மத்திய வங்கி வழமையாகவே நாணய மாற்று விகிதத்தை சந்தைக்கு தீர்மானிக்க விட்ட நிலையிலே, அது பல மடங்கு அதிகரித்து செல்லக்கூடிய ஒரு நிலைமை ஏற்பட்டது.
இதிலிருந்து மீள வர வேண்டுமாக இருந்தால், டாலருக்கு பரிமாறக்கூடிய ரூபாயின் வீழ்ச்சியினை தீர்மானிக்க வேண்டிய ஒரு நிலைமை இருந்தது. எனவே அந்த நிலைமையினை குறிப்பிட்ட ஒரு வீழ்ச்சிக்குள்ளேதான் ரூபாயின் பெறுமதி இருக்க வேண்டும். இதை மத்திய வங்கி உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.
அந்த அறிவிப்பு ஒரு முக்கியமான காரணம், டாலரின் பெறுமதி இந்த வீழ்ச்சிக்குள்ளே வர வேண்டும் என்பது. எனவேதான் 365 ரூபாயாக ஓர் இரவிலேயே டாலர் வீழ்ச்சி அடைந்தது . இப்போது அது இன்னும் குறைவடைந்திருக்கின்றது. காரணம் ஏற்றுமதி செய்கின்ற நபர்கள், தங்களுடைய வருவாய்களை, வங்கித்துறை ஊடாக அனுப்ப வேண்டும் என கடப்பாடு கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றது.
அதேபோல இறக்குமதி செய்பவர்கள் வங்கி துறையின் ஊடாக மட்டுமே அந்த கடனை செய்ய வேண்டும் என்ற வகையிலான ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இது முன்னவே செய்யப்பட்டிருக்குமானால், இந்தளவு டாலர் எகிரி குதித்திருக்க வாய்ப்பில்லை. எனினும், சந்தைக்கு முழுமையாக அடிபணிந்த நிலையிலேயே இந்த டாலரின் பெறுமதி இவ்வாறு சென்றது.
ரணில் விக்ரமசிங்க அவர்கள் பதவியேற்ற காலம், அடுத்த நாள் இந்த சுற்றறிக்கையும் செயற்பட ஆரம்பித்தமையினால் இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இலங்கையினுடைய பங்கு சந்தை வழமையாகவும் அரசியல் மாற்றங்களுக்கு அல்லது நகர்வுகளுக்கு ஏற்ற வகையில் இருக்கும். அந்த சந்தையை பொருத்த மட்டிலே, பிரதமரின் வருகையின் ஊடாக அந்த நம்பகத்தன்மை அதிகரித்திருப்பதாக நாங்கள் நினைக்கலாம்.
பலர் இப்போது டாலர்களை பதுக்கி வைத்திருக்கின்றார்கள் இன்னும் விலை அதிகரிக்கும் என்ற நோக்கிலே. அந்த பதுக்கலை கட்டுப்படுத்த வேண்டும் என்பது ஒரு நோக்கம். ரூபாவில் தங்களுடைய வைப்புகளை வைத்திருப்பதை விட, டாலர்களின் அதனை பதுக்கி வைப்பதன் ஊடாக கள்ள சந்தையிலே அதை கூடிய விலைக்கு விற்பனை செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது.
இந்த எதிர்பார்ப்பை முறியடிக்கும் வகையிலேயே தனிநபர்கள் வைத்திருக்கக்கூடிய அந்த அளவினை கட்டுப்டுத்துகின்ற ஒரு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். டாலர் நிரம்பலை சந்தையில் அதிகரிக்கக்கூடிய ஒரு வழி வகையாகவே இதனை பார்க்க முடியும்.
வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படுகின்ற பணம், வங்கிகளில் இருக்கும் போது, அந்த பணத்திற்கும் இவ்வாறான கட்டுப்பாடுகள் இருக்கின்றனவா?
வங்கிகளிலே வைப்பு செய்யப்படுகின்ற பணம், பொதுவான என்.எப்.ஆர்.சி என்ற வெளிநாட்டு கணக்கிலேயே வைக்கப்பட வேண்டும். குறிப்பாக டாலரிலே வைக்கப்பட வேண்டும். அவ்வாறு வைக்கப்படுகின்ற போது, பணத்தை மீள பெறும் போது, அந்த பணம் ரூபாவில் பெறக்கூடியதாக இருக்கும்.
இந்த பணம் உரிமையாளர்களின் அனுமதி இல்லாமல், மத்திய வங்கியினால் மாறற்ப்பட்டது என்ற ஒரு வதந்தி நிலவியது. ஆனால் அது அவ்வாறு இல்லை என மத்திய வங்கி கூறியிருக்கின்றது. டாலர் கணக்குகளிலே தங்களுடைய வைப்புகளை வைத்திருப்பவர்கள், அந்த டாலர் என்ற கணக்கிலேயே தங்களுடைய கணக்கை பேணி செல்லலாம்.
இனப் பிரச்னைக்கு இறுதியான, நிலையான ஒன்றிய முறை தீர்வு கண்டால், இலங்கை ஆசியாவின் சுவிட்சர்லாந்தாக முன்னேறுமா?
இலங்கை உண்மையிலேயே இந்த போருக்கு பிந்திய காலப் பகுதியில் சரியான அரசியல் நகர்வுகளை மேற்கொண்டிருக்குமானால், அது ஒன்றியமா இல்லையா என்ற கருத்து முரண்பாடுகளில் இருக்கின்றன. ஆனால் முறையான விதத்திலே இந்த இனப் பிரச்னைக்கு தீர்வு கண்டிருந்தால், நாடு இதை விட முன்னேறி செல்லக்கூடிய வாய்ப்பு இருந்திருக்கின்றது.
இனப் பிரச்னையையும், இன நெருக்கடியையும் போருக்கு பின்னரும் கூட காவிச் செல்வதன் ஊடாக அரசியல் நடத்துகின்ற ஒரு போக்கு தான் நாங்கள் அவதானித்திருக்கின்றோம். இன்றும் கூட அதனை மீள புதுப்பிப்பதற்கான முயற்சிகளிலே பலரும் முயற்சித்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்த நிலைமை, ஆசியாவின் சுவிஸர்லாந்தா மாறுமா இல்லையா என்பதை பற்றி எல்லாம் கற்பனை செய்ய முடியாது. ஆனால் இன்றைய நிலைமை ஏற்பட்டிருக்காது என்பது நிச்சயம்.
இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரசிங்க நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். இதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
கடந்த காலங்களிலும் அவர் உரையாற்றும் போது, இந்த அபாய எச்சரிக்கையை தொடர்ச்சியாக விட்டிருந்தார். பொருளாதாரம் இவ்வாறான வீழ்ச்சி பாதையை நோக்கி செல்லும். இதற்கு தயாராக வேண்டும் என்றவாறு ஓர் எச்சரிக்கையை தொடர்ச்சியாகவே விட்டிருந்தார். ஆனால், அவரை எல்லோரும் கோமாளியாக பார்த்தார்கள்.
இப்போதும் கூட அவருடைய பொருளாதார ரீதியான கணிப்பீடுகள் பெரும்பாலும் சரியாக இருந்திருக்கின்றது. சர்வதேச ரீதியில் உணவு நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது. ரஷ்யா – யுக்ரேன் யுத்தம் காரணமாக உணவு நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது. கேதுமை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது.
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இப்போது உள்ள சூழ்நிலையிலே உள்நாட்டிலே உற்பத்தியை பெருக்குவதற்குரிய வழி வகைகளை முக்கியமாக செய்ய வேண்டும். இந்தியாவிலிருந்து உரம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றது. யுரியா இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றது. அந்த உரம் முறையாக கிராமிய மக்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யப்படுகின்ற பட்சத்திலே ஓரளவுக்கேனும் உணவு தட்டுப்பாட்டிலிருந்ரு இலங்கை தவிர்த்துக்கொள்ள முடியும். பொதுமக்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் என்னவென்றால், உங்களுடைய காணிகளிலே ஏதாவது ஒரு பயிர் செய்கையை செய்ய முயற்சிக்க வேண்டும். இதன் ஊடாகத்தான் உணவு நெருக்கடியிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.