அரசியலமைப்பின் 21 ஆவது சட்டவரைபு உருவாக்க பணிகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டமூலம் நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

அமைச்சரவை அங்கிகாரம் பெற்று, பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதுடன் இரட்டை குடியுரிமை கொண்ட நபரின் பாராளுமன்ற உறுப்புரிமை நீதிமன்றினால் நீக்கப்படும் என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதியமைச்சின் கடமைகளை நேற்று முன்தினம் பொறுப்பேற்றதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு என்றுமில்லாத வகையில் மோசமான நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளது. பொருளாதார நெருக்கடியும்,அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு,அத்தியாவசிய சேவைத்துறையில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்னுரிமை வழங்க வேண்டும்.

அரசியல் ஸ்தீரத்தன்மை பேணப்படாவிடின் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.

தற்போதைய பின்னணியில் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க இணக்கம் தெரிவிக்கவில்லை, இருப்பினும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொடர்ந்து முன்வைத்த கோரிக்கையினாலும், சுயாதீனமாக செயற்படுமாறு அழைப்பு விடுத்ததாலும் நாட்டு மக்களுக்காக அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ளேன்.

அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் வெறுப்பு நிலை காணப்படுகிறது.மக்களை குறை கூறுவது பயனற்றது.இந்த அரசியல் கலாச்சாரம் இலங்கைக்கு பொருத்தமற்றது.

பாராளுமன்றில் குழு அடிப்படையிலும்,கட்சி அடிப்படையிலும் வேறுப்பட்டு குடும்ப ஆட்சியை பாதுகாக்க முயற்சிக்கும் மக்கள் பிரதிநிதிகள் மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முன்னுரிமை வழங்காததன் விளைவை தற்போது முழு நாடும் எதிர்க்கொள்கிறது.

நிறைவேற்றுத்துறையும்,சட்டவாக்கத்துறையும் வெகுவிரைவில் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் முதற்கட்டமாக அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனநாயக இலட்சினங்கள் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் ஊடாக இல்லாதொழிக்கப்பட்டன.

ஆகவே 21ஆவது திருத்தம் ஊடாக 19 ஆவது திருத்தத்தின் ஜனநாயக இலட்சினங்களை மீள செயற்படுத்துவது அத்தியாவசியமானது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டவரைபு தயார் செய்யப்பட்டுள்ளது. நாளை இடம் பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் திருத்த யோசனை முன்வைக்கப்பட்டு வெகுவிரைவில் நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

நாட்டின் சட்டவாட்சி கோட்பாடு முறையாக செயற்படுத்தப்படாமல் இருப்பது நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் துறைகள் வீழ்ச்சியடைவதற்கு பிரதான காரணியாக உள்ளது.

சட்டவாட்சி கோட்பாடு தொடர்பில் மக்களின் நம்பிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது.அரசியல் கட்சி பேறுப்பாடின்றி புதிய அரசாங்கத்தில் சட்டவாட்சி கோட்பாட்டை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

சகல கட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் கோரிக்கையை பிரதான எதிர்க்கட்சி நிராகரித்ததை தொடர்ந்து சுயாதீன தரப்பினரை உள்ளடக்கிய வகையில் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

குடும்ப ஆட்சியிலான அரசாங்கத்தை ஜனாதிபதி நீக்கியுள்ளதை தொடர்ந்து அரசியல் ஸ்தீரத்தன்மை பேணப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டவுடன் இரட்டை குடியுரிமையுடைய தரப்பினரது பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்படும்.மக்களின் பிரதான கோரிக்கை முதலாவதாக செயற்படுத்தப்படும் என்றார்.

இரட்டை குடியுரிமையுடைய நபர் தேர்தலில் போட்டியிடுவதற்கும், பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் தடை விதிக்கப்பட்டது.இதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க சுவிஷ்லாந்து நாட்டின் குடியுரிமையினை இழக்க நேரிட்டது.

இரட்டை குடியுரிமையுடையவர் அரசியலில் பிரவேசம் செய்வதற்கு 19ஆவது திருத்தத்தில் காணப்பட்ட தடை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் நீக்கப்பட்டது.

அமெரிக்க குடியுரிமையினை உடைய பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

இரட்டை குடியுரிமையுடைய பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சராக பதவி வகித்து நாட்டின் பொருளாதாரத்தை திட்டமிட்ட வகையில் சீரழித்தார் என முன்னாள் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார,உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உட்பட தற்போதைய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் கடுமையாக விமர்சித்தனர்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை உடையவர் அரசியலில் பங்குப்பற்றுவதற்கு மீண்டும் தடை ஏற்படுத்தப்படும் என குறிப்பிடப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version