ஹரிகரன்

 “சந்திரிகா, இனப்படுகொலைப் போர் நடந்ததாக குறிப்பிடும், முப்பது ஆண்டுகளில், – 1994 தொடக்கம், 2005 வரையான  9 ஆண்டுகள் நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்” 

 “கனேடிய பாராளுமன்றத்தில், ஹரி ஆனந்தசங்கரி முன்வைத்த, மே 18ஆம் திகதியை தமிழர் இனப்படுகொலை நாளாக அங்கீகரிக்கும் தீர்மானம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது”

உக்ரேனில் ரஷ்யா இனப்படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருப்பதாக மேற்குலகம் வலுவான குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை உலகின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியிருக்கிறது.

2009 மே 19ஆம் திகதி இனப்படுகொலை மூலம், தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. ராஜபக்ஷ அரசாங்கம், சர்வதேச ஆதரவுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற அடையாளத்துடன் முன்னெடுத்த  போர் முற்று முழுதாக தமிழர்கள் மீது ஏவிவிடப்பட்டது.

தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது. தமிழரின் இருப்பையும், அடையாளங்களையும் அழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டது. ஆனால், இந்தப் போர், தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர் என்பதை ஏற்றுக் கொள்ளாத தரப்பினர் இன்றும் உள்ளனர்.

போரில் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள், அநியாயங்களை எந்த வகைக்குள் அடக்குவது என்பதிலும், பல்வேறு தரப்புகள் மத்தியில் குழப்பங்கள் உள்ளன. போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், நடந்தது, இனஅழிப்பு போர் என்றது ஒரு தரப்பு.

இனப்படுகொலை என்றது இன்னொரு தரப்பு.  இல்லை, இனப்படுகொலை என்பதை நிறுவுவதற்கு, ஏராளம் ஆதாரங்கள் தேவை, நடந்தது போர்க்குற்றங்கள் தான் என்றது மற்றொரு தரப்பு.

13 ஆண்டுகளுக்குப் பின்னரும், நடந்தது இனப்படுகொலையா- போர்க்குற்றங்களா, இன அழிப்புக்கான போரா என்று தெளிவான வரையறை செய்வதில் குழம்பிப் போயிருந்த இனம், தமிழினமாகத் தான் இருக்கும்.

பேரளவில் நடந்த தமிழர்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த முறையான விசாரணையோ, நடத்தப்படவில்லை.  நீதியைக் கோரிய போராட்டங்கள் நடக்கின்ற போதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்படவுமில்லை. பொறுப்புக்கூறல் முன்னெடுக்கப்படவுமில்லை.

இவ்வாறான நிலையில் தான், இப்போது தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது என்பதற்கு முக்கியமான அங்கீகாரங்கள் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன.

கடந்த 18ஆம் திகதி போரில் உயிரிழந்தவர்களுக்காக தனது இல்லத்தில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, முன்னெடுக்கப்பட்ட போர் இனப்படுகொலைப் போர் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமது முகநூல் பக்கத்தில், “ஒரு நாட்டையோ மனித இனத்தையோ போரினாலோ, வெற்றியாலோ தோற்கடிக்க முடியாது என்றும், 30 வருட இனப்படுகொலைப் போரில், நாம் இழந்தவை ஏராளம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முப்பது ஆண்டுகளாக நடந்த போரை, அவர் “இனப்படுகொலைப் போர்“ (genocide war) என்று அடையாளப்படுத்தியிருப்பது முக்கியமானதொரு விடயம்.

சந்திரிகா, இனப்படுகொலைப் போர் நடந்ததாக குறிப்பிடும், முப்பது ஆண்டுகளில், – 1994 தொடக்கம், 2005 வரையான  9 ஆண்டுகள் நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்.

இப்போது குறிப்பிடுகின்ற, இனப்படுகொலைப் போரை அவர் அந்தக் காலகட்டத்தில் வழிநடத்தியிருக்கிறார். சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் தான், தமிழர்களுக்கு எதிரான போர் முழுவேகம் பெற்றது.

தனது ஆட்சியிலேயே 75 சதவீதமான போரை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதாகவும், எஞ்சிய 25 சதவீதமான போரையே மஹிந்த ராஜபக்ஷ முடிவுக்குக் கொண்டு வந்தார் என்றும் சந்திரிகா சில ஆண்டுகளுக்கு முன்னர், கூறியிருந்தமை நினைவிருக்கலாம்.

அண்மைக்காலத்தில் சந்திரிகா குமாரதுங்க நல்லிணக்கம் தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தாலும், இனப்படுகொலைப் போரில் அவரும் இழப்புக்களைச் சந்தித்திருந்தாலும், அவரை விட மோசமான இழப்புக்களையும், அழிவுகளையும் தமிழர்கள் சந்தித்திருக்கிறார்கள்.

அதனை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதால் தான், அவர் தனது இல்லத்தில் மே 18 நாளை நினைவு கூர்ந்திருக்கிறார். நடந்தது இனப்படுகொலைப் போர் என்ற அவரது பதிவு, இன்றைய நிலையில் இனஅழிப்புப் போர் என்பதற்கு முக்கியமானதொரு சாட்சியம்.

அதுவும், இனஅழிப்பு போரை முன்னெடுத்த ஒரு முன்னாள் தலைவரே, அதனை ஏற்றுக் கொள்வதானது சர்வதேச அளவில், ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதொரு சாட்சியமாகவும் இருக்கும்.

இவ்வாறான நிலையில் தான், கனேடிய பாராளுமன்றத்தில், ஹரி ஆனந்தசங்கரி முன்வைத்த, மே 18ஆம் திகதியை தமிழர் இனப்படுகொலை நாளாக அங்கீகரிக்கும் தீர்மானம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

கனேடிய பாராளுமன்றத்தின் 338 உறுப்பினர்களாலும் அந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

உலகில், தமிழர் இனப்படுகொலையை அங்கீகரித்து, அதனை நினைவுகூரும் நாளை ஏற்றுக் கொண்டுள்ள முதல் நாடாகவும், முதல் பாராளுமன்றமாகவும் கனடா அமைந்திருக்கிறது,

இந்த இரண்டு விடயங்களும் தமிழர் இனப்படுகொலை தொடர்பான நீதி கோரும் போராட்டங்களின் முக்கியமான அடைவுகளாகும்.

கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் மக்கள், நீதிக்காக நடத்திய போராட்டம் வீண் போகவில்லை என்பதையே இது அடையாளப்படுத்துகிறது.

இனப்படுகொலைக்கு நீதி கோரும் தமிழர்களின் போராட்டம் நீண்டது. நெடியது மாத்திரமன்றி பரந்துபட்டதும் கூட.

நூற்றாண்டுகளுக்கு முந்திய பல இனப்படுகொலைகள், இனஅழிப்புகள் இப்போது தான், சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுகின்றன.

ஆர்மேனிய இனப்படுகொலை நிகழ்ந்து, நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் தான், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதனை இனப்படுகொலை என்று கடந்த ஆண்டு அங்கீகரித்திருந்தார்.

வரலாற்றில் பல இனப்படுகொலைகளுக்கு இன்னமும் அங்கீகாரம் கிட்டவில்லை.  அவ்வாறான பட்டியலில் தான் தமிழர் இனப்படுகொலையும் உள்ளடங்கியிருந்தது.

ஆனால், உக்ரேன் போர் தொடங்கிய சில வாரங்களிலேயே அங்கு போர்க்குற்றங்கள் நடப்பதாக, உக்ரேனியர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அதுபற்றிய விசாரணைகளும் தொடங்கப்பட்டிருக்கின்றன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இதுவரையில்லாதளவுக்கு மிகப்பெரிய விசாரணைக் குழுவை உக்ரேனுக்கு அனுப்பியிருக்கிறது.

46 பேர் கொண்ட அந்தக் குழு அங்கு போர்க்குற்றங்கள், இன அழிப்பு தொடர்பான ஆதாரங்களைத் தேடுகின்றது.

அதேவேளை, இனப்படுகொலைகளுக்கான சாட்சியங்களையும், போர்க்குற்ற ஆதாரங்களையும், திரட்டிக் கொடுக்கின்ற பணியை கனடா உள்ளிட்ட நாடுகள், மேற்கொண்டிருக்கின்றன.

இன்று தமிழர் இனப்படுகொலையை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுள்ள கனடா, தமிழினத்துக்கு எதிரான இனப்படுகொலைக்கான ஆதாரங்களை சேகரித்து, வழங்க கூடிய முக்கியமானதொரு நாடாக இருக்கிறது.

இனப்படுகொலைச் சாட்சிகள் பெருமளவில் கனடாவில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, அரச படைகளில் இருந்தவர்களும் இருக்கிறார்கள்.

அவர்களின் மூலம், தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை சாட்சியங்கள், ஆதாரங்களை திரட்டி, சர்வதேச விசாரணைகளில் சமர்ப்பிக்கின்ற முயற்சிகளை கனடாவினால் முன்னெடுக்க முடியும்.

கடந்த 13 ஆண்டுகளில் கனடா அவ்வாறான முயற்சிகள் எதையும் வெளிப்படையாக முன்னெடுத்திருக்கவில்லை. இரகசியமான சாட்சியங்களை பதிவு செய்திருக்கலாம்.

ஆனால், உக்ரைன் இனப்படுகொலைகளுக்கு கனடா வெளிப்படையாக சாட்சியங்களை திரட்டத் தொடங்கிய பின்னர், தமிழினப் படுகொலைக்கான சாட்சியங்களைத் திரட்டாமல் இருக்க முடியாது.

தற்போதைய சூழல் தமிழினப் படுகொலைக்கு நீதியைப் – நியாயத்தைப் பெறுகின்ற நீண்ட போராட்டத்துக்கு கிடைத்திருக்கின்ற முதல் வெற்றி எனலாம்.

இது இறுதி வெற்றியாகாது. தமிழினப் படுகொலை அங்கீகரிக்கப்படும் நிலை தான் தற்போது தோன்றி வருகிறது.

இது இனப்படுகொலைக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும்- பொறுப்புக்கூறும்- உண்மையைக் கண்டறியும் விசாரணைகளாக மாற வேண்டும், அந்த நிலை தோன்ற இன்னும் சில காலம் செல்லலாம்.

ஆனாலும், அந்த நிலை வராமல் போகாது, என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் துளிர்விடச் செய்திருக்கிறது தற்போதைய சூழல்.

Share.
Leave A Reply

Exit mobile version