நிதி அமைச்சராக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் ரூபாய் வருமானம் இன்மையால் ஒரு டிரில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட வேண்டியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் ரொய்ட்டர் செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிதியை மீண்டும் இரண்டு வருட நிவாரண திட்டமாக மாற்றுவதற்கான உள்கட்டமைப்பு திட்டங்களை இடைக்கால வரவு செலவுத் திட்டம் குறைக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் இறங்கும்போது பணவீக்கம் உயரும் என்றும் மேலும் வீதிகளில் போராட்டங்கள் நடத்தப்படலாம் என்றும் எச்சரித்தார்.
எந்தவொரு அமைதியின்மையும் கையை விட்டு வெளியேறாது என்று தான் நம்புவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 22 மில்லியன் மக்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவ நிதி வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.
எதிர்வரும் கடினமான நாட்களில் எதிர்ப்புகள் இருக்கும். மக்கள் துன்பப்படும்போது எதிர்ப்புக்கள் கிழம்புவது இயற்கையானது, அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அது அரசியல் அமைப்பை சீர்குலைக்காமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில், செலவினங்களைக் குறைப்பது, முடிந்தவரை நலனுக்காக மாற்றுவது மட்டுமே குறிக்கோளாக அமையும்.
1948 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை தற்போது மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தள்ளாடிக்கொண்டிருக்கிறது.
வெளிநாட்டு நாணயத்தின் பற்றாக்குறையால் எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியை கடுமையாகக் குறைந்தது. இது பல மாதங்களாக நாட்டில் எதிர்ப்புகளைத் தூண்டியது.
பொதுமக்களில் பெரும்பாலோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குறிவைத்து எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர். அவர்கள் பொருளாதாரத்தை தவறாக கையாண்டதாக எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தற்போதைய நெருக்கடிக்கு கொவிட்-19 தொற்றுநோய் பரவலும் தாக்கம் செலுத்தியுள்ளது இது நாட்டின் இலாபகரமான சுற்றுலாத் துறையை சீரழித்ததுடன் வெளிநாட்டு ஊழியர்கள் நாட்டுக்கு பணம் அனுப்பும் வீதத்தை குறைத்துள்ளது.
“எங்களிடம் ரூபாய் வருமானம் இல்லை, இப்போது இன்னும் ஒரு டிரில்லியன் ரூபாயை அச்சடிக்க வேண்டும்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வருடாந்த பணவீக்கம் எதிர்வரும் மாதங்களில் 40 வீதத்தை தாண்டும் என்றும் எச்சரித்தார்.
இந்தியா, சமீபத்திய மாதங்களில் உணவு, எரிபொருள், மருந்துகள் மற்றும் நிதியுதவிகளை வழங்கி இலங்கைக்கு உதவிகளை செய்து பெரும் அரணாக இருந்து வருகிறது.
பெய்ஜிங்கில் இருந்து உரம் மற்றும் மருந்துகளை கோரி அடுத்த வாரம் இலங்கைக்கான சீன தூதுவரை சந்திக்க உள்ளேன், என குறித்த நேர்காணலில் அவர் மேலும் பிரதமர் தெரிவித்தார்.