முகமது நபி பற்றிய விவாதத்தின் போது நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்திருப்பீர்கள். முகமது நபியின் படம் எங்கும் காட்டப்படவில்லை. இதற்குக் காரணம், இஸ்லாத்தில் அல்லாவையோ அல்லது வேறு எந்த நபியையோ ஓவியம், படம் அல்லது வேறு வழிகளில் காட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
முகமது நபியை படம் வரைவது அல்லது சிலை செய்வது அவரை அவமதிப்பதாகக் கருதப்படுகிறது.
இது சிலை வழிபாட்டை ஊக்குவிப்பதாக நம்பப்படுகிறது. இந்த விதியை யாராவது மீறினால், அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. பிரெஞ்சு வார இதழான சார்லி ஹெப்தோ, முகமது நபியின் கார்ட்டூன்களை வெளியிட்ட சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கும்.
ஆனால் இஸ்லாத்தில் ஏன் இத்தகைய விதிகள் உள்ளன? நபிகளை படம் மூலமாகவோ அல்லது வேறு எந்த வழி மூலமாகவோ காட்ட தடை ஏன்? நபிகளின் படம் எப்போதாவது இருந்திருக்கிறதா? இது தொடர்பாக முஸ்லிம்களின் மத நூலான குர்ஆன் என்ன சொல்கிறது? இந்தக் கட்டுப்பாடு இஸ்லாமிய கலையை எந்த அளவிற்கு பாதித்துள்ளது?
இதுபோன்ற பல கேள்விகள் உள்ளன, அவற்றின் பதில்களைத்தேட இந்தக் கட்டுரையில் முயற்சி செய்யப்பட்டுள்ளது.
குர்ஆனில் இதைப் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது?
இஸ்லாத்தின் புனித நூலான குர்ஆனில் அல்லாஹ்வின் படம் அல்லது முகமது நபியின் படம் தொடர்பாக குறிப்பிட்ட அல்லது வெளிப்படையான தடை எதுவும் இல்லை. செதுக்கப்பட்ட சிலை அல்லது ஓவியம் ஆகிய இரண்டுமே இதில் அடங்கும்.
ஆனால் குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில் இஸ்லாத்தில் படம் வரைவதற்கு தடை உள்ளது என்று இஸ்லாத்தின் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
குர்ஆனில் மொத்தம் 114 அத்தியாயங்கள் உள்ளன, அவை சூராக்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு அத்தியாயம் அல்லது சூராவிற்குள்ளும் ஆயத் எனப்படும் சிறிய பகுதிகள் உள்ளன.
குர்ஆனில் மொத்தம் 6236 ஆயத்கள் உள்ளன.
குர்ஆனின் 42வது சூராவின் 42வது ஆயத்தில், “அல்லாஹ் பூமியையும் வானத்தையும் படைத்தவன். அவனுடைய படம் என்று எதுவும் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
குர்ஆனில் எழுதப்பட்ட இந்த விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு, இஸ்லாமிய அறிஞர்கள் மனிதக் கைகளால் செய்யப்பட்ட ஒரு படத்தில் அல்லாவை சிறைப்பிடிக்க முடியாது என்று முடிவு கூறுகிறார்கள்.
அவ்வாறு யாரேனும் செய்ய முயன்றால் அது அல்லாஹ்வை அவமதித்ததாகவே கருதப்படும். இதே நம்பிக்கை முகமது நபிக்கும் பொருந்தும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
குர்ஆனின் அத்தியாயம் அல்லது சூரா எண் 21 இன் ஆயத் 52 முதல் 54 வரை, “(ஆபிரகாம்) தனது தந்தை மற்றும் மக்களிடம், “நீங்கள் எந்தப் படங்களை வணங்குகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘எங்கள் முன்னோர்கள் அவரை வழிபடுவதைப் பார்த்திருக்கிறோம்.’என்று சொன்னார்கள்.
அதற்கு ஆபிரகாம், ‘நிச்சயமாக நீங்கள் பார்த்திருப்பீர்கள். உங்கள் தந்தையும் இதை பார்த்திருப்பார். ஆனால் அது கண்டிப்பாக தவறு,”என்று சொன்னதாக எழுதப்பட்டுள்ளது.
முகமது நபியின் படம் வரைய இஸ்லாம் மதத்தில் தடை ஏன்?
இந்த ஆயத்தை மேற்கோள் காட்டி இஸ்லாத்தின் அறிஞர்கள் சிலை வழிபாட்டை படங்கள் ஊக்குவிக்கக்கூடும் என்று நம்புகிறார்கள்.
அதாவது ஒரு படத்தை உருவாக்குவதன் மூலம், தெய்வீகச் சின்னத்திற்குப் பதிலாக, அதன் உருவம் வழிபாட்டுப் பொருளாக மாறக்கூடும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
குர்ஆனில் முகமது நபியின் படங்கள், சிலையைப் இதைப் பற்றி குறிப்பாக எதுவும் கூறப்படவில்லை. ஆனால் ஹதீஸில் (ஹஸ்ரத் முகமது சொன்னது அல்லது செய்தது ஹதீஸ் என்று அழைக்கப்படுகிறது) படங்கள் உருவாக்குவதை தவிர்க்க வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஹதீஸில் கூறப்பட்டுள்ளது என்ன?
முகமது நபி, தனது வாழ்க்கையில் சொன்னதும், செய்ததும் ஹதீஸ் என்று அழைக்கப்படுகிறது. இது முகமது நபி காலமான பிறகு எழுதப்பட்டது.
அல்லாஹ், முகமது, கிறிஸ்தவ மற்றும் யூத பாரம்பரியத்தின் அனைத்து முக்கிய இறைத் தூதர்களின் படங்களை வரைவது ஹதீஸில் தடைசெய்யப்பட்டுள்ளது.
உயிரினங்கள் குறிப்பாக மனிதர்களின் படங்களை வரைவதையும் இஸ்லாம் தடை செய்கிறது.
இஸ்லாமிய கலை பெரும்பாலும் சிலைகள் இல்லாத மற்றும் அலங்கார விளக்கப்படங்களை நோக்கி சாய்வதற்கு இதுவே காரணம். உலகம் முழுவதும் கட்டப்பட்ட மசூதிகளின் சுவர்களிலும் குர்ஆனின் பக்கங்களிலும், வடிவியல் (geometry) வடிவங்களைக் காண்கிறோம்.
ஷியா முஸ்லிம்களின் பாரம்பரியத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் அவ்வளவு கடுமையாக இல்லை. பாரசீகத்தில் (நவீன இரான்) வரையப்பட்ட ஏழாம் நூற்றாண்டின் முகமது நபியின் படங்களை நீங்கள் பார்க்கமுடியும்.
எடின்பரோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மோனா சித்திக்கி, முஸ்லிம் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட முகமது நபியின் சில படங்களைக் குறிப்பிடுகிறார். இந்த படங்கள் மங்கோலிய மற்றும் ஒட்டோமான் பேரரசு காலத்தில் வரையப்பட்டவை.
முகமது நபியின் படம் வரைய இஸ்லாம் மதத்தில் தடை ஏன்?
இந்த படங்களில், முகமது நபியின் முகம் காட்டப்படவில்லை. ஆனால் அது அவரை சித்தரிக்கிறது என்பது தெளிவாக உள்ளது. இந்த படங்கள் முகமது நபி மீது கொண்ட மரியாதையால் உருவாக்கப்பட்டவை என அவர் கூறுகிறார்.
எப்போது முதல் முகமது நபியின் படங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டன?
முகமது நபியின் பல படங்கள் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. மேலும் அந்த நேரத்தில் அந்தப் படங்களை சிலைவழிபாட்டை ஊக்குவிக்காதபடி தனிப்பட்ட முறையில் பார்க்க முடியும் என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கலைப் பேராசிரியரான கிறிஸ்டின் க்ரூபர் தெரிவிக்கிறார்.
18 ஆம் நூற்றாண்டில் அச்சு ஊடகங்கள் பெரிய அளவில் பரவியதால் இது சவாலுக்கு உள்ளாக ஆரம்பித்ததாக க்ரூபர் கூறுகிறார்.
இதற்கிடையில், ஐரோப்பிய சக்திகள் மற்றும் கருத்துக்கள், பல முஸ்லிம் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தின. இதுவும் இந்த விஷயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தங்கள் மதம், கிறிஸ்தவத்திலிருந்து எவ்வளவு வித்தியாசமானது என்பதை காலனித்துவ சித்தாந்தத்திற்கு இஸ்லாமிய உலகம் இதன் மூலமாகக்காட்டியது என்று க்ரூபர் குறிப்பிட்டார்.
கிறிஸ்தவ மதத்தில் சிலை செய்வது, ஓவியம் வரைவது அல்லது படம் வரைவது தடை செய்யப்படவில்லை.
இதற்குப் பிறகு முகமது நபியின் படங்கள் மறையத் தொடங்கி, அவருடைய படம் அல்லது உருவத்தை உருவாக்குவதற்கு எதிராக புதிய விவாதம் வெடித்தது.
ஆனால் முகமது நபி உள்ளிட்ட இறைத் தூதர்களின் உருவங்களை வரைவதை பழங்கால அறிஞர்கள் எப்போதும் கண்டித்துள்ளனர் என்று பெரும்பாலான முஸ்லிம் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இடைக்காலத்தில் உருவான முகமது நபிகளின் படங்களை அவற்றின் சூழலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரிட்டனின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான லீட்ஸில் உள்ள மெக்கா மசூதியின் இமாம் காரி ஆசிம் கூறுகிறார்.
“இந்த படங்களில் பெரும்பாலானவை ஒரு குறிப்பிட்ட இரவில் ஒரு குறிப்பிட்ட பயணத்தை சுட்டிக்காட்டுகின்றன.
இதில் ஒரு ஆடு அல்லது குதிரை சித்தரிக்கப்பட்டுள்ளது. முகமது நபி ஒரு குதிரை அல்லது அது போன்ற ஏதோ ஒன்றின் மீது அமர்ந்திருக்கிறார்,” என்று அவர் குறிப்பிட்டார்.
முகமது நபியின் படம் வரைய இஸ்லாம் மதத்தில் தடை ஏன்?
பட மூலாதாரம், Getty Images
(முகமது நபி, பூமியிலிருந்து சொர்க்கத்திற்கு பயணம் செய்தார் என்றும் அவர் ஒரு குறிப்பிட்ட இரவில் பயணம் செய்தார் என்றும் முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.)
ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இவை முகமது நபியின் சாதாரண உருவப்படங்கள் அல்ல. பல படங்களின் விஷயம் தெளிவாக இல்லை என்றும் ஆசிம் கூறுகிறார்.
இஸ்லாமிய கலை உருவானது எப்படி?
முன்பு கூறியது போல், இஸ்லாத்தின் ஷியா மற்றும் சன்னி பிரிவினர் முகமது நபியின் படம் அல்லது உருவம் தயாரிப்பதில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
ஆனால், இஸ்லாமிய மதத் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் மத்தியில் முகமது நபியின் படத்தை எந்த வடிவத்திலும் உருவாக்கக் கூடாது என்பதில் பொதுவான கருத்து உள்ளது.
இருப்பினும், உருவப் படங்களை உருவாக்குவது இஸ்லாத்தில் கண்டிப்பான முறையில் தடை செய்யப்படவில்லை.
ஆனால் இந்த உருவப்படங்களை மதச் சூழலில் பார்க்கக் கூடாது. பல முஸ்லிம் மன்னர்கள் மற்றும் ராணிகளின் படங்கள் நமக்கு கிடைப்பதற்கு இதுவே காரணம்.
ஆனால் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லாஹ், நபி போன்றவர்களின் படங்கள் அப்படிக் கிடைப்பது இல்லை.
இஸ்லாமிய நாடுகளில் ஒரு புதிய கலை வடிவத்தின் எழுச்சிக்கு இது வழிவகுத்தது. இந்து கோவில்களில் தெய்வங்களின் உருவங்களையும், ஐரோப்பிய தேவாலயங்களில் இயேசு, மேரி போன்றோர் உருவங்களையும் நாம் பார்க்கிறோம்.
அதே நேரம் மசூதிகள் வடிவியல் உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அவை எழுத்துக்கள் மற்றும் ஜன்னல் போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளன.
நபிகள் நாயகத்தின் உருவத்தை வரைவதற்கு தடை உள்ளதால், சிலர் அவரை பிரதிநிதித்துவப்படுத்த புதிய வழிகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர்.
இந்த வரிசையில், ஹிலியா போன்ற புலப்படும் வடிவங்கள் ஒட்டோமான் பேரரசில் தோன்றின. இது ஒரு கையெழுத்து அச்சு. இவை ஆயத்துகளின் கையெழுத்துப் பிரதிகள். இதில் நபிகள் நாயகம் பற்றி எழுதப்பட்டுள்ளது.
இந்திய சட்டம் என்ன சொல்கிறது?
இந்தியாவில் முகமது நபியின் உருவம் அல்லது படத்தை உருவாக்குவது பற்றி இந்திய சட்டத்தில் நேரடியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஆனால் இது தொடர்பாக எந்த ஒரு புகாரும் மத விஷயங்கள் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படலாம்.
இது தனது மத உணர்வுகளை புண்படுத்துவதாகவோ அல்லது கலவரத்தை தூண்டும் வாய்ப்பு உள்ளதாகவோ புகார்தாரர் கூறலாம்.
இத்தகைய வழக்குகள் ஐபிசியின் 153A மற்றும் 153B, 295A மற்றும் 298 ஆகிய பிரிவுகளின் கீழ் புகார் பதிவு செய்யப்படலாம்.
153A இன் படி, யாரேனும் ஒருவர் ஆத்திரமூட்டும் வகையில் ஏதேனும் அறிக்கை வெளியிட்டாலோ அல்லது கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் அத்தகைய நடவடிக்கை எடுத்தாலோ, அது குற்றமாக கருதப்படும்.
இதன்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இதைச் செய்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்.
முகமது நபியின் படம் வரைய இஸ்லாம் மதத்தில் தடை ஏன்?
IPC இன் பிரிவு 295A இன் கீழ், எந்தவொரு மதம் அல்லது மதத்தின் உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்துவது ஒரு குற்றமாகும்.
இதற்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
எந்தவொரு நபரின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கத்துடன் மதக்கூட்டங்களில் எந்தவொரு தவறான வார்த்தையையும் பேசுவது, சத்தம் போடுவது அல்லது உடலின் எந்தப் பகுதியையும் காட்டுவது, ஏதாவது பொருளை வைப்பது போன்றவை, வாரண்ட் இல்லாமல் கைது செய்யப்படக்கூடிய மற்றும் ஜாமீன் பெறக்கூடிய குற்றங்கள் என்று IPC இன் பிரிவு 298 கூறுகிறது. இதற்கு ஓராண்டு சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.