தமி­ழ­ரசுக்கட்­சிக்குள் சிறி­தரன் பிரிவு தாயக மைய அர­சி­ய­லையும், சுமந்­திரன் பிரிவு கொழும்பு மைய அர­சி­ய­லையும் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இதுவே இவ்­வி­ரண்டு பிரி­வி­ன­ருக்கும் இடை­யி­லான கொள்கை முரண்­பா­டாகும். இந்த கொள்கை முரண்­பாட்டை தெளி­வாக புரிந்து கொள்­ளா­விட்டால் முரண்­பாட்டைத் தீர்ப்­பது கடி­ன­மாக இருக்கும். சுமந்­திரன் பிரிவு மத்­தியக் குழுவை தனது கட்­டுப்­பாட்டின் கீழ் வைத்துக் கொண்டு தனது மேலா­திக்க நிலையை நகர்த்தி வரு­கின்­றது. சிறி­தரன் பிரி­வுக்கு பொதுச் சபையில் தான் செல்­வாக்கு உண்டு.

மத்­திய குழுவில் ஆத­ரவு குறைவு. ஆத­ரவு கொடுத்த பலரும் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர். அன்­றாட கரு­மங்­க­ளோடு பொதுச்­சபை பெரி­ய­ள­விற்கு தொடர்­பு­ப­டு­வ­தில்லை. மத்­திய குழுவே தொடர்புபடு­கின்­றது. இதனால் சுமந்­திரன் பிரிவின் நகர்­வு­களே கட்­சியின் நகர்­வு­க­ளாக வெளியில் காட்­சி­ய­ளிக்­கின்­றன. பாரா­ளு­மன்ற குழு­வுக்குள் சுமந்­திரன் பிரி­வுக்கு பெரிய செல்­வாக்கு கிடை­யாது. சாணக்­கி­யனும், சத்­தி­ய­லிங்­கமும் மட்டும் சுமந்­திரன் பிரி­வுக்கு ஆத­ர­வாக உள்­ளனர்.

இந்த இரு­த­ரப்­புக்கும் இடை­யே­யான கொள்கை முரண்­பாட்டை புரிந்து கொள்­வ­தற்கும் எத்­த­ரப்­பி­னு­டைய கொள்கை சம­கா­லத்தில் தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­றது என்ற தீர்­மா­னத்­துக்கு வரு­வ­தற்கும் இரு கொள்­கை­க­ளி­னதும் சாதக, பாத­கங்­களை அறிந்து கொள்­வது அவ­சி­ய­மாகும். இந்தக் கொள்கை நிலைப்­பா­டுகள் தமிழ் அர­சி­யலின் தலை­ வி­தியை தீர்­மா­னிப்­பதில் பாரிய பங்கை வகிக்­கின்­றன.

தாய­க­ மைய அர­சியல் தாய­கத்தின் நலன்­களை முதன்­மைப்­ப­டுத்­து­வ­தாக இருக்கும். மாறாக, கொழும்பு மைய அர­சியல் கொழும்பு நலன்­களை முதன்­மைப்­ப­டுத்­து­வ­தாக இருக்கும். தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு வரும் வரை எதிர்ப்பு அர­சியல் அவ­சி­ய­மா­னது.

அதுவே தமிழ்த் தேசிய அர­சி­யலை தக்க வைக்க உதவும். 30 வருட காலம் அஹிம்சா ரீதி­யான போராட்­டங்­க­ளி­னூ­டா­கவும், தொடர்ந்து 30 வருட காலம் ஆயுதப் போராட்ட அர­சியல் ஊடா­கவும் எதிர்ப்பு அர­சியல் தக்­க­ வைக்­கப்­பட்­டது. இதன் வழி தமிழ்த் தேசிய அர­சியல் பாது­காக்­கப்­பட்­டது.

எதிர்ப்பு அர­சியல் எப்­போதும் தாய­கத்தை முதன்­மைப்­ப­டுத்­தி­ய­தாக இருக்கும். மாறாக, கொழும்பு மைய அர­சியல் சம­ர­சத்தை முதன்­மைப்­ப­டுத்­து­வ­தாக இருக்கும். டக்ளஸ் தேவா­னந்­தா­வினால் முன்­னெ­டுக்­கப்­படும் அர­சியல் கொழும்பு மைய அர­சி­யலே.

அவரால் அர­சியல் தீர்­வையும் முன்­னெ­டுக்க முடி­ய­வில்லை தமிழ்த் தேசிய அர­சி­யலை பாதுகாக்­கவும் முடி­ய­வில்லை. இதன்­படி பார்க்கும் போது தாய­க­ மைய அர­சியல் தமிழ்த் தேசியத்தை வளர்க்கும், கொழும்பு மைய அர­சியல் தமிழ் தேசி­யத்தை சிதைக்கும்.

மேலும், தமிழ் மக்கள் தங்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை பெறு­வ­தற்கு தமிழ் மக்­க­ளுக்­கான அரசியல் நியா­யப்­பா­டு­களை பலப்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மா­ன­தாகும். கொழும்­புடன் சம­ரச அரசியலில் ஈடு­பட்டுக் கொண்டு அர­சியல் நியா­யப்­பா­டு­களை பலப்­ப­டுத்த முடி­யாது.

இதன்­வழி பார்க்­கும்­போதும் தாயக மைய அர­சியல் தமிழ் மக்­களின் அர­சியல் நியா­யப்­பாடுகளை பலப்­ப­டுத்தும். மாறாக, கொழும்பு மைய அர­சியல் நியாயப்பாடு­களை பல­வீ­னப்­ப­டுத்தும். தவிர தேசிய இனப் பிரச்­சினை என்­பது ஒரு சர்­வ­தேசப் பிரச்­சி­னை­யாகும்.

சர்­வ­தேச அர­சியல் தான் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வைத் தரக்­கூ­டி­ய­தாக இருப்­பதால் கொழும்பு மைய அர­சியல் சர்­வ­தேச ஈடு­பாட்டை பல­வீ­னப்­ப­டுத்தும். சம­ரச அர­சி­ய­லுக்கு சென்றால் சர்­வ­தேச தலை­யீடு தேவைப்­ப­டாது. சர்­வ­தேச சக்­தி­களும் கையை விரித்து விடுவார்கள்.

இவற்றை விட கொழும்பு மைய அர­சியல் சிங்­களக் கட்­சி­களின் ஊடு­ரு­வலை தமிழர் தாய­கத்தில் அதி­க­ரிக்கச் செய்யும். மக்­களும் புறோக்கர் தேவை­யில்லை எனக் கருதி சிங்­களக் கட்­சி­க­ளுடன் நேர­டி­யாக ஊடாடத் தொடங்­குவர். எனவே ஒட்­டு­மொத்­த­மாகப் பார்க்கும் போது கொழும்பு மைய அர­சியல் தமிழ் மக்­க­ளுக்கு தீங்­கா­னது.

தாயக மைய அர­சி­யலே மிகவும் அவ­சி­ய­மா­னது. சுமந்­திரன் தனது இருப்­புக்­காக கொழும்பு மைய அர­சி­ய­லை­யையே முதன்­மைப்­ப­டுத்­து­கின்றார். அவ­ரது தனிப்­பட்ட இருப்­புக்­காக ஒரு தேசிய இனத்தின் எதிர்­கா­லத்­தையே விலை­யாகக் கொடுக்க முடி­யாது.

தமி­ழ­ரசுக்கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் சுமந்­திரன் கட்­சியின் ஊடகப் பேச்­சா­ள­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். கட்­சிக்­கென ஊடகப் பேச்­சா­ள­ராக சிறிநேசன் ஏற்­கெ­னவே நிய­மிக்­கப்­பட்ட நிலையில் இன்னொரு ஊடகப் பேச்­சாளர் தேவை­தானா என்ற கேள்வி இங்கு எழு­கின்­றது.

மத்­திய குழுவின் தீர்­மா­னத்­துக்கு மாறாக செயல்­பட்­டார்கள் என்று கூறி பலர் நீக்­கப்­பட்­டுள்­ளனர். உள்­ளூ­ராட்சி சபைக்­கான வேட்பு மனுத் தாக்கல் செய்­த­போது சுமந்­திரன் கிளி­நொச்­சியில் தனி­யாக சுயேச்சைப் பட்­டி­யலை இறக்­கி­யி­ருந்தார். அவர் ஏன் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­ப­வில்லை.

கட்­சிக்கு எதி­ராக வழக்குத் தொடுத்­த­வர்கள் ஏன் நீக்­கப்­ப­ட­வில்லை. இக்­கேள்­வி­க­ளுக்­கெல்லாம் மத்­திய குழு­வினர் பதில் கூறி­யாக வேண்டும். ஒரு தனி நபர் தன்­னு­டைய விருப்பு வெறுப்­பு­க­ளுக்­கேற்ப மத்­திய குழுவைக் கையாள்­வதை எந்த வகையில் நியாயம் எனக் கூற முடியும்?

தமிழ் மக்­களைப் பொறுத்­த­வரை தமி­ழ­ரசுக் கட்சி சிதைந்து போவதை விரும்­ப­வில்லை. இதற்கு பல கார­ணங்கள் உள்­ளன. அவற்றில் முத­லா­வது, ஒரு பாரம்­ப­ரிய வடக்கு, – கிழக்கு முகம் கொண்ட கட்சி சிதைந்து போவதை மக்கள் ஏற்­க­வில்லை. தமி­ழ­ரசுக்கட்சி சிதைந்தால் வடக்கு, – கிழக்கு முகம் கொண்ட இன்னொரு கட்­சியை குறு­கிய காலத்தில் கட்­டி­யெ­ழுப்­பு­வது இல­கு­வா­ன­தொன்­றல்ல.

வடக்கு, – கிழக்கு இணைந்த அர­சியல் இல்­லை­யென்றால் தமிழர் தாயகம் என ஒன்று இருக்­காது. தாயகம் இல்­லை­யென்றால் தமிழ்த் தேசியம் இருக்­காது. தமிழ்த் தேசியம் இல்­லை­யென்றால் தமிழ் அர­சி­யலில் அர்த்தம் ஏதும் இருக்கப் போவ­தில்லை. தமிழ் மக்­களின் கூட்­டி­ருப்பை, கூட்­ட­டை­யா­ளத்தை, கூட்­டு­ரி­மையைப் பேணு­வ­தற்கு தமிழர் தாயகம் இணைந்த அர­சியல் அவ­சி­ய­மா­னது.

இரண்­டா­வது, விரைவில் உள்­ளூ­ராட்சிச் சபைத் தேர்­தலும் தொடர்ந்து மாகாண சபைத் தேர்­தலும் நடை­பெற இருக்­கின்­றன. இரண்டு தேர்­தல்­களும் பாரா­ளு­மன்றத் தேர்தல் போல கொழும்பு மையத் தேர்தல் அல்ல. இவை தாயக மையத் தேர்­தல்­க­ளாகும். இந்தத் தேர்­தல்­களின் தென்­னி­லங்கை கட்­சி­கள் மேல் நிலைக்கு வந்தால் அதன் பின்னர் தமிழ்த் தேசிய அர­சியல் பற்றி நினைத்தே பார்க்க முடி­யாது.

இந்தத் தேர்­தல்­களில் தமிழ்த் தேசியக் கட்­சிகள் அனைத்தும் ஒருங்­கி­ணைந்து போட்­டி­யிட வேண்டும். இல்­லையேல் உள்­ளூ­ராட்சிச் சபையில் பல சபைகளை தேசிய மக்கள் சக்தி கைப்­பற்றக்கூடிய நிலை ஏற்­ப­டலாம். அதே­போல வட மாகாண சபை, கிழக்கு மாகாண சபை என்­ப­வற்­றையும் தேசிய மக்கள் சக்தி கைப்­பற்­றலாம்.

கிழக்கு மாகாண சபை தேசிய மக்கள் சக்­தியின் கைக­ளுக்கு செல்­வது ஏற்­கெ­னவே உறு­தி­யா­கி­விட்­டது. ஒருங்­கி­ணைந்த அர­சியல் இல்­லை­யென்றால் வட ­மா­காண சபையும் பறி­போகும் நிலை உரு­வா­கலாம். இந்த நிலை ஏற்­பட்டால் பெருந்­தே­சி­யத்­திற்குள் தமிழ்த் தேசியம் கரைந்து போகின்ற நிலையே ஏற்­படும்.

மூன்­றா­வது, தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் விரைவில் புதிய அர­சி­யல்­யாப்பு ஒன்றை உரு­வாக்கும் முயற்­சியில் இறங்க உள்­ளது. இதன் போது தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு எவ்­வாறு இருக்க வேண்டும் என்­பது தொடர்­பாக தமிழ்த் தேசியக் கட்­சிகள் ஒருங்­கி­ணைந்து தீர்வு யோச­னையை முன்­வைக்க வேண்டும்.

சுமந்­திரன் இது விட­யத்தில் அர­சியல் யாப்புக் குழுவில் இரு தமிழ்ப் பிர­தி­நி­தி­களை இணைப்­பதில் முனைப்புக் காட்டி வரு­வ­தா­கவே செய்­திகள் வரு­கின்­றன. சாணக்­கி­ய­னையும், சத்­தி­ய­லிங்­கத்­தையும் அர­சி­ய­ல­மைப்புக் குழு­வுக்கு அனுப்பி நல்­லாட்­சிக்­கால ‘ஏக்­கி­ய­ ராஜ்­ஜிய’ திட்­டத்தை மேடை யேற்­றவே அவர் முனை­கின்றார். இந்த மோச­மான சதி முயற்­சியை அனை­வரும் எதிர்க்க வேண்டும். சிங்­களப் பெரும்­பான்­மை­யுள்ள குழுவில் தமிழர் இருவர் அங்கம் வகித்து எந்தப் பயனும் ஏற்­படப் போவ­தில்லை.

தமிழ்த் தரப்பு குழுவில் அங்கம் வகிப்­பதை முன்­னி­றுத்­தாமல் வெளியே நின்று கொண்டு தமிழ் மக்கள் சார்பில் தீர்வு யோச­னையை முன்­வைத்து பேரம் பேச வேண்டும். தமி­ழ­ரசுக் கட்சி பல­வீ­ன­ம­டைந்தால் தமிழ் மக்­களின் பேரம் பேசும் பலமும் பல­வீ­ன­ம­டையும். இந்த விவ­கா­ரத்தில் தமிழ் மக்கள் ஒரு தரப்­பாக பங்கு பெற்ற வேண்­டுமே தவிர உதி­ரி­யாக பங்­கு­பற்றக் கூடாது. உதி­ரி­க­ளாக பங்­கு­பற்­றுதல் பெருந்­தே­சி­ய­வாத நிகழ்ச்சி நிர­லுக்குள் மாட்­டுப்­படும் நிலையை உரு­வாக்­கலாம்.

நான்­கா­வது இனப்­பி­ரச்­சினை என்­பது உள்­நாட்டு பிரச்­சி­னை­யல்ல. அது ஒரு சர்­வ­தேசப் பிரச்­சினை. இதற்கு உள்­நாட்டுத் தீர்வு எதுவும் இல்லை. சர்­வ­தேசத் தீர்வு தான் உண்டு. சர்­வ­தேச மத்­தி­யஸ்­தத்­தின்கீழ் தமிழ்த் தரப்பும் அர­ச ­த­ரப்பும் இரு தரப்­பு­க­ளாக அமர்ந்து பேசும்­போதே தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வை நோக்கி நகர முடியும். இத்­த­கைய ஒரு நிலைக்கு சர்­வ­தேச சமூ­கத்தை தள்­ளு­வ­தற்கு ஒருங்­கி­ணைந்த அர­சியல் அவ­சியம். இத­னூ­டாக சர்­வ­தேச அர­சி­யலை தமிழ் மக்­க­ளுக்கு சார்­பாக திருப்ப வேண்டும்.

தமி­ழ­ரசுக் கட்­சியின் உட்­பி­ரச்­சி­னையால் தமிழ் மக்கள் மிகவும் நொந்து போயுள்­ளனர். சாதா­ரண தமிழ் மக்­க­ளுக்கு இவற்­றுக்கு இடை­யி­லான கொள்கை நிலைப்­பா­டுகள் எதுவும் விளங்­காது. அவர்­க­ளது விருப்­ப­மெல்லாம் கட்­சிகள் ஒரு குடையின் கீழ் ஒருங்­கி­ணைந்து செயல்­பட வேண்டும் என்­ப­துதான்.

தற்­போது சாதா­ரண மக்கள் பொது­வெ­ளியில் தமது கவ­லை­களை கூறத் தொடங்­கி­யுள்­ளனர். இக்­கட்­டு­ரை­யா­ளரை சாதா­ரண மக்கள் கேட்கும் ஒரே கேள்வி வரு­கின்ற தேர்­தல்­க­ளி­லா­வது இவர்கள் ஒருங்­கி­ணைந்து செயல்­ப­டு­வார்­களா என்­பதே.

தமி­ழ­ரசுக் கட்­சியின் உட்­பி­ரச்­சினை தமிழ் மக்­களின் மைய அர­சி­யலை பாதிக்­காத வரை தான் அது உட்­கட்­சிப்­பி­ரச்­சினை. பாதிப்பு அடை­யாளம் தெரியத் தொடங்­கிய பின்னர் அது உட்­கட்சிப் பிரச்­சினை யல்ல. தமிழ் மக்­களின் தேசியப் பிரச்­சினை. தமிழ் அர­சி­யலின் எதிர்­கா­லத்தை பாதிக்கும் செயற்­பாட்டை மேற்­கொள்­வ­தற்கு கட்­சிக்­கா­ரர்­க­ளுக்கு எந்த உரி­மையும் கிடை­யாது. தேசியப் பிரச்­சினை என்று வந்த பின்னர் சிவில் சமூ­கத்தின் தலை­யீடு தவிர்க்க முடி­யா­தது. தற்­போ­தைய நிலையில் கட்­சியின் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு கூட்டுத் தலைமை சிறந்த கரு­வி­யாக இருக்கும்.

வாக்­கெ­டுப்பு நடந்தால் கட்சி கட்­டாயம் பிள­வு­படும் என்­பது இக்­கட்­டு­ரை­யா­ளரின் அசைக்க முடி­யாத கருத்­தாக இருந்­தது. தற்­போது இடம்­பெறும் பிரச்­சி­னைகள் முன்­னரே நடக்கும் என இக்­கட்­டு­ரை­யாளர் எதிர்வு கூறி­யி­ருந்தார். மாவை இது தொடர்­பாக முயற்­சி­களை மேற்­கொள்­வ­தாக கூறி­யி­ருந்தார். ஆனால் பின்னர் எதுவும் நடக்­க­வில்லை. அதன் போக்­கி­லேயே விடப்­பட்­டதால் தான் கட்­சிக்கு இன்­றைய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

கூட்டுத் தலை­மையை உரு­வாக்­கு­வ­தற்கு முன்னர் தாய­க­ மைய அர­சி­யலா? கொழும்பு மைய அர­சி­யலா? என்­பதில் உறு­தி­யான தீர்­மானம் எடுப்­பது அவ­சி­ய­மா­ன­தாகும். கொழும்பு மைய அர­சியல் தமிழ்த் தேசிய அர­சி­யலின் எதிர்­கா­லத்தை பாதிக்கும் என்­பதால் சுமந்­திரன் அதனை அடக்கி வாசிப்­ப­தற்கு தயா­ராக இருக்க வேண்டும். அவர் அடக்கி வாசிப்­ப­தற்கு சம்­ம­தித்தால் தான் கூட்டுத் தலை­மைக்குள் அவ­ரையும் சேர்க்­கலாம். அவர் அதற்கு தயா­ரில்­லை­யென்றால் மாற்று நட­வ­டிக்­கை­யையே மக்கள் எடுக்க வேண்டும். மாற்று நட­வ­டிக்கை என்­பது அவரை கைவிட்டு செல்­வ­துதான்.

தமி­ழ­ரசுக் கட்­சியின் உட்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­காக சிவில் குழு ஒன்று உரு­வாக்­கப்­படல் வேண்டும். அந்தக் குழுவில் கட்சி சாராத கல்­வி­யா­ளர்கள், மதத் தலைவர்கள், சமூக முக்கியஸ்தர்களை சேர்க்க வேண்டும். அந்தக்குழு தனக்குள் கலந்துரையாடி உட்கட்சிப் பிரச்சினையை தீர்ப்பதற்கான வரைபடம் ஒன்றை உருவாக்க வேண்டும்.

அந்த வரைபடம் பிரதானமாக இரண்டு விடயங்களை உள்ளடக்கியிருத்தல் அவசியம். ஒன்று கூட்டுத் தலைமையை உருவாக்குவதாகும். சிறிதரன், சுமந்திரனோடு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஒருவரையும் சேர்த்து அந்த கூட்டுத் தலைமையை உருவாக்கலாம்.

இரண்டாவது, ஏற்கெனவே கட்சியி லிருந்து வெளியேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர் கள் அனைவரையும் மீளவும் இணைத்துக் கொள்வதற்கான வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். சிவில் குழுவின் தலைவராக திருகோணமலை ஆயரை நியமிக்கலாம். அவருக்கு ஏற்கனவே சமரசச் செயற்பாட்டில் ஈடுபட்ட அனுபவம் உண்டு. திருமலையில் கூட்டாக தமிழ்த் தேசியக் கட்சிகளை போட்டியிட வைத்தவரும் அவரே.

அவருடன் தென்கயிலை ஆதினம், ஆறுதிருமுருகன் போன்றோரையும் இணைக்கலாம். யாழ். பல்கலைக்கழக, கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர்களையும் இணைத்துக் கொள்ளலாம். உட்கட்சிப் பிரச்சினை தீர்வுக்கு வந்த பின்னர் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளையும் இணைத்து ஒருங்கிணைந்த அரசியலுக்கு முயற்சிக்கலாம்.

சி.அ.யோ­தி­லிங்கம் Virakesari

Share.
Leave A Reply

Exit mobile version