தருமபுரி அருகே கோயில் திருவிழாவில் தேர் அச்சு முறிந்து, கவிழ்ந்தது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஹள்ளி காளியம்மன் கோயில் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காளியம்மன் கோயில் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.

தேர் நிலையடியைச் சேர்வதற்கு சற்று முன்பு, எதிர்பாராத விதமாக அச்சு முறிந்து முன்பக்கமாக கவிழ்ந்தது.

இதில், பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா காலனியை சேர்ந்த மனோகரன், சரவணன், அப்பு முதலி காலனி சேர்ந்த முருகன், மாதலி கிராமத்தை சேர்ந்த மாதேஸ் ஆகியோர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இவர்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனோகரன், சரவணன் இருவரும் உயிரிழந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தேர்த்திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று தேர்த் திருவிழா நடைபெற்றுள்ளது.

இதேபோல், திருப்பூர் மாவட்டம் சீராப்பாளையம் கருப்பராயன் கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது.

இதற்காக, ஈரோடு மாவட்டம் மன்னதாம்பாளையம் குல விளக்கு அருகே காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுக்க கிராம மக்கள் சென்றுள்ளனர்.

இதில், பெருமாநல்லூர் செட்டிபாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் இளங்கோ, சீராம்பாளையத்தை சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளார் கோவிந்தராஜ் ஆகிய இருவரும் ஆற்றில் இறங்கி ஆழமான பகுதிக்கு சென்றபோது, முழ்கி உயிரிழந்தனர்

Share.
Leave A Reply

Exit mobile version