இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது 1.7 மில்லியன் சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக இலங்கையில் 10 இல் 7 குடும்பங்கள் தாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்துள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான செய்தி தொடர்பாளர் பிஸ்மார்க் ஸ்வாங்கின் சர்வதேச ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் சிறுவர் நெருக்கடியாகியுள்ளது. பொருளாதார நெருக்கடிகளின் சுமையை 1.7 மில்லியன் சிறுவர்கள் சுமக்க வேண்டியுள்ளது.

தெற்காசியாவிலேயே குழந்தைகளின் ஊட்டச் சத்து குறைபாடு காணப்படுகின்ற நாடுகளில் இலங்கையும் ஒரு நாடாகவுள்ளது. பொருளாதார நெருக்கடியானது குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டு நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது.

இலங்கையில் 10 இல் 7 குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியின் காரணமாக உணவு உட்கொள்வதைக் குறைத்துக் கொண்டுள்ளன. மூன்று வேளை உணவு உட்கொண்டவர்கள் அதனை இரு வேளையாகவும் , இரு வேளை உட்கொண்டவர்கள் அதனை ஒரு வேளையாகவும் குறைத்துக் கொண்டுள்ளனர்.

இவ்வாறான நெருக்கடிகளால் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள 7.1 மில்லியன் சிறுவர்களுக்காக மனிதாபிமான உதவியாக 25 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு யுனிசெஃப் நடவடிக்கை எடுத்துள்ளது. காரணம் ஊட்டச்சத்து குறைபாடானது சிறுவர்களை மரணிக்கும் நிலைக்கு கொண்டு செல்லும்.

தெற்காசியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் விகிதத்தில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.

குறைந்த பட்சம் 17 சதவீதக் குழந்தைகள் நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மரணத்திற்கான அதிக ஆபத்தைக் கொண்டுள்ளது. உணவின் தரமானது விரும்பத்தகாத அளவிற்கு மோசமடைந்துள்ளது.

இந்த நெருக்கடியானது பாடசாலை மாணவர்களை மிகவும் பாதித்துள்ளது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு,  பாடசாலை உணவின் விலை இரட்டிப்பாக்கப்படுவதால் பட்டினி கிடக்கும் அபாயமும் காணப்படுகிறது.

கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பது, சுத்தமான குடி நீர் , கர்ப்பிணித் தாய்க்கு சத்தான உணவுகள் மற்றும் கூடுதல் உணவுகளை வழங்குவது, குழந்தைகளுக்கு மனநல ஆதரவு வழங்குவது உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு யுனிசெஃப் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இது  ஒரு மோசமான சூழ்நிலையை தவிர்க்க உதவும் என்று பிஸ்மார்க் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version