Site icon ilakkiyainfo

எரிபொருள் தட்டுபாடால் வீழ்ச்சியடைந்த மற்றுமொரு துறை

தேயிலை உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கிடைக்காமை காரணமாக, தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தோட்ட முதலாளிமார் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ரொசான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

நேற்று (5) தலவாக்கலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

தேயிலைத் தோட்டங்களிலிருந்து தேயிலைத் தொழிற்சாலைகள் வரை பறிக்கும் கொழுந்துகளைக் கொண்டு செல்வதற்கும் தேயிலைத் தூள் தயாரிப்புக்கும் தினமும் அதிகளவு பெட்ரோலும் டீசலும் தேவைப்படுகின்றது.

அத்துடன் தற்போது அமுல்படுத்தப்படும் மின்துண்டிப்புக்கு மத்தியில் தேயிலை உற்பத்திக்கு பாரியளவு எரிபொருள் தேவையாகவுள்ள நிலையில், தேயிலைத் தூளை ஏல விற்பனைக்கு கொண்டு செல்வதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன் தேயிலைத் தொழிற்றுறையுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 இலட்சம் பேர் தொடர்புட்டுள்ளதாகவும் இவ்வாறான நிலையில் தேயிலை தொழிற்றுறை வீழ்ச்சியடைந்தால், இலங்கையின் பிரதான அந்நிய செலாவணி கிடைக்கும் மார்க்கமும் தடைபடுவதுடன் பத்து இலட்ச பேரின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்படும்.

இலங்கையிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்யும் நாடுகளின் கேள்விக்கு அமைய தேயிலையை ஏற்றுமதி செய்யாவிட்டால் குறித்த நாடுகள் இந்தியா மற்றும் கென்யா போன்ற நாடுகளிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்ய தொடங்கிவிடும்.

எனவே இலங்கை எரிபொருள் கூட்டுதாபனம் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு தேவையான எரிபொருளை விநியாகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அவர், பெருந்தோட்டங்களில் எரிபொருளை சேமித்து வைப்பதற்கான களஞ்சியசாலை வசதிகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version