திருகோணமலை – சீனக்குடா பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

சீனக்குடா – தின்னம்பிள்ளை சேனை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பையொன்றில் சுற்றிய நிலையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிசுவை பிரசவித்த தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணவன் வௌிநாடு சென்றுள்ள நிலையில், குறித்த பெண் கிண்ணியா குறிஞ்சாக்கேணியிலுள்ள தனது தாயின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதன்போது, திடீர் சுகவீனமடைந்த அப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடைகள் அடங்கிய பையொன்றை மாமியாரின் வீட்டிற்கு உறவினர் ஒருவர் மூலமாக அனுப்பியுள்ளார்.

குழந்தையின் தாய் அனுப்பிய பையை அலுமாரியில் வைத்த மாமியார், மறுநாள் அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அதனை சோதனையிட்டுள்ளார்.

இதன்போது, பையில் சிசுவின் சடலம் இருப்பதை அறிந்து, பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை சீனன்குடா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version