இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு சனிக்கிழமை இரவு அரசு எதிர்ப்பாளர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பதவி விலகுமாறு கோரி தலைநகரில் போராட்டங்கள் வலுவடைந்த சில மணி நேரத்திலேயே பிரதமர் ரணிலின் வீட்டையும் போராட்டக்காரர்கள் இலக்கு வைத்தனர்.

அந்த வீட்டின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிரதமருக்கு சொந்தமான வாகனங்களையும் போராட்டக்குழுவினர் சேதப்படுத்தியதை காண முடிந்தது.

முன்னதாக, போராட்டக்குழுவினர் ரணில் வசிக்காத பிரதமரின் அலுவல்பூர்வ இல்லமான அலரி மாளிகையையும் இலக்கு வைத்தனர். “பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை போராட்டக்காரர்கள் உடைத்து தீ வைத்துள்ளனர்” என ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

ரணிலின் வீடு தீயில் எரியும் காட்சிகள் இடம்பெற்ற காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இலங்கை பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியை ராஜிநாமா செய்த அடுத்த சில தினங்களில் நாடாளுமன்றத்தில் ஒற்றை உறுப்பினராக இருந்த ரணில் விக்ரமசிங்க நாட்டின் புதிய பிரதமராக கடந்த மே மாதம் பதவியேற்றார்.

ஆனால், அவர் பதவிக்கு வந்தது முதலே அவர் மீது நம்பிக்கையற்றவர்களாக போராட்டக்காரர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் இருந்தனர்.

இந்த நிலையில், “அரசாங்கம் தொடரவும் அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதமாக தமது பதவியை ராஜிநாமா செய்யத் தயார்,” என்று சனிக்கிழமை மாலையில் ரணில் கூறினார்.

 

இது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்கள் வழங்கிய சிறந்த யோசனையை ஏற்று அதை செயல்படுத்த ஏதுவாக பதவி விலகுவதாகவும் ரணில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், காலையில் ஜனாதிபதி கோட்டாபய வீட்டை நோக்கி பேரணியாக புறப்பட்ட போராட்டக்காரர்கள், பிற்பகலில் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து அதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பிற்பகல் 3 மணிக்குப் பிறகு பிரதமரின் அலுவல்பூர்வ இல்லமான அலரி மாளிகைக்குள்ளும் அவர்கள் நுழைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக இரவு 8 மணியளவில் கொழும்பு ஐந்தாம் வீதியில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் தனிப்படைட வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அப்போது ஒரு பிரிவினர் அவரது வீட்டுக்குள் பலத்த பாதுகாப்பையும் மீறி நுழைய முற்பட்டனர்.

இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடைசியில் படையினரை தள்ளிக் கொண்டு பெருங்கூட்டம் ரணிலின் வீட்டுக்குள் நுழைந்து அவரது இல்லத்துக்கு தீ வைத்தது.

சம்பவ பகுதிக்கு தீயணைப்புப் படையினர் செல்ல முடியாத அளவுக்கு வீதிகளில் போராட்டக்காரர்களின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

முன்னதாக, ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவியை விட்டு விலக வைக்கும் முயற்சியாக அவரது வீட்டுக்கு அருகே போராட்டக்குழுவினர் சென்றனர்.

இதை செய்தி சேகரிக்கச் சென்ற நான்கு நிருபர்கள் உள்பட குறைந்தது ஆறு பேர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version