தன்னை தொழிலதிபர் ஒருவர் மாதம் ரூ.25 லட்சம் சம்பளத்துக்கு மனைவியாக இருக்கும்படி கேட்டதாக நடிகை நீது சந்திரா தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் நடிகைகளுக்கு பாலியல் சீண்டல்கள் நடப்பது குறித்து பலருமே குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். பாலிவுட் நடிகை நீது சந்திரா தனக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து பேசிய நீது சந்திரா, “என்னுடைய வாழ்க்கை வெற்றிகரமான நடிகையின் தோல்விக் கதை.
2005-ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான நான் தேசிய விருது வாங்கிய 12-க்கும் அதிகமான நடிகர்களுடன் நடித்திருக்கிறேன்.
ஆனால் இன்றைக்கு எனக்கு வேலை இல்லை. இதனால் பெரிய தொழிலதிபர் ஒருவர் என்னிட்ம் மாதம் ரூ.25 லட்சத்தில் சம்பள மனைவியாக இருக்க முடியுமா என்று என்னிடம் கேட்டார்.
அவர் அப்படிக் கேட்டது எனக்கு பெரும் அதிர்ச்சியளித்தது. இப்போது என்னிடம் பணமோ, வேலையோ இல்லை. மிகவும் கவலையாக உள்ளேன்.
இத்தனைப் படங்களில் நடித்த பிறகும் நான் இங்கு வேண்டப்படாதவளாக மாறிவிட்டேன். முன்னணி இயக்குநர் ஒருவர் என்னை பட ஒத்திக்கைக்கு அழைத்திருந்தார்.
ஒத்திகை முடிந்து ஒரு மணி நேரத்தில் என்னை நிராகரித்துவிட்டார்” என்றார். ஹாலிவுட்டிலும் அறிமுகமான நீது சந்திரா இரண்டு படங்களில் நடித்தார். இது குறித்து நீது சந்திரா கூறுகையில், “அனைத்தும் மாறிக்கொண்டுதான் இருக்கும்.
ஹாலிவுட்டில் நான் யாரது துணையும் இல்லாமல் நுழைந்ததை சிலரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதோடு அவர்களால் நம்ப முடியவில்லை. இதற்கு முன்பு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம்கூட பல முறை எனது மனதில் வந்து சென்றது என்று தெரிவித்தார்.
`கரம் மசாலா’ என்ற படத்தில் அறிமுகமான நடிகை நீது 13-பி, டிராபிக் சிக்னல், தமிழில் ஆதி பகவன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த சில படங்களுக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது.