1956 ஜூன் 5 இதே இடத்தில் சாத்வீக வழியில் உரிமைக்காக தமிழர்கள் அமைதியாக போராடியபோது தாக்கப்பட்டு இரத்தம் சிந்தினார்கள். கொழும்பில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள்,வீடுகள் சூறையாடப்பட்டு  வன்முறைகள் பரவின ஜூன் 11 முதல் சில நாட்கள் கிழக்கில் கல்லோயா, அம்பாறையில்  200 தமிழர்கள் வரை கொல்லப்பட்டனர். சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட முதலாவது வன்முறை.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் Gota Go Home போராட்டத்தில் கலந்துகொள்ளாதது ஏன் எனக்கேட்கின்றனர். ஜனாதிபதி செயலகம் (பழைய பாரளுமன்றம்) முன்பாக அமைதியாக போராடியவர்களை மே 9 அலரி மாளிகையில் இருந்து வந்த கும்பல் தாக்கியதைப்போலவே 66 ஆண்டுகளுக்கு முன்னர் 1956 ஜூன் 5 இதே இடத்தில் சாத்வீக வழியில் உரிமைக்காக தமிழர்கள் அமைதியாக போராடியபோது தாக்கப்பட்டு இரத்தம் சிந்தினார்கள்.

கொழும்பில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள்,வீடுகள் சூறையாடப்பட்டு  வன்முறைகள் பரவின ஜூன் 11 முதல் சில நாட்கள் கிழக்கில் கல்லோயா, அம்பாறையில்  200 தமிழர்கள் வரை கொல்லப்பட்டனர். சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட முதலாவது வன்முறை.

பிரதமர் எஸ்.டபிள்.யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா தனிச்சிங்கள சட்ட மசோதாவை ஜூன் 5 பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது அதனை எதிர்த்து தமிழரசுக்கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் அக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும்,தொண்டர்களும் சத்தியாக்கிரகம் இருந்தபோது காடையர்களால் தாக்கப்பட்டனர்.ஈழத்தமிழரின் முதல் உரிமைப்போராட்டமும் இதுவே.

இலங்கையில் இரு பெரும் இனங்களுக்கு இடையே பெரும் குரோதத்துக்கு வழிவகுத்து இரத்த ஆறு ஓடக்காரணமான  தனிச்சிங்களச் சட்டம் (Official Language Act 33 of 58) ஜூன் 15 இல் 53 மணி நேர விவாதத்தின் பின் நிறைவேறியது. ஆதரவாக 66 வாக்குகளும் எதிராக 29 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரவளித்தது .தமிழரசு, தமிழ்க்காங்கிரஸ் கம்யூனிஸ்ட், சம சமாஜ கட்சிகள் எதிர்த்தன.

இச்சட்டத்தால் ஆங்கிலத்தில் பணியாற்றிவந்த பல தமிழ் அரச ஊழியர்கள்,தமிழ் அதிகாரிகள் வேலை இழந்தனர். ஓய்வு பெற்றனர். வேலை தேடி வெளி நாடுகள் சென்றனர். இன்று நாட்டின் பொருளாதார நிலைமையால் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தொழில் தேடி வெளிநாடுகள்  சென்றுள்ளனர்.

சிங்களமே எமது மூச்சு என்று அன்று கூறிய சிங்கள தலைவர்களின் பிள்ளைகள், குடும்பங்கள் மேற்கு நாடுகளில் வேறு மொழிகளில் கற்பதை இன்றும் காணமுடிகிறது.

எதிர்காலத்தில் தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் சட்டங்களை உருவாக்கும் கொடுங்கோல் நிறுவனமாக பாராளுமன்றம் செயற்படப்போவதை தனிச்சிங்களச் சட்டம் ஆரூடம் கூறியதை 1956 க்கு பின்னரான காலங்களில் காணமுடிந்தது. அதில் மிகக்கொடியது  பயங்கரவாத தடைச்சட்டம்.

எவருக்கும் இடையூறு இன்றி அமைதியாக பாராளுமன்ற மேற்கு வாசலில் சத்தியாக்கிரகம் இருந்து எதிர்ப்பை தெரிவிப்போம் உங்களின் ஒத்துழைப்பு தேவை என தமிழரசுக் கட்சித்தலைவர் செல்வநாயகம் பிரதமர் பண்டாரநாயக்காவுக்கு ஏற்கனவே கடிதமூலம் தெரிவித்திருந்தார்.

பண்டாரநாயக்கா படுகொலை எதிரியும் பிக்கு முன்னணி  அமைப்பின் தலைவருமான புத்தரகித்த தேரர் தலைமையில் பிக்குமாரும்,வெலிமடை எம்.பி. கே.எம்.பி.ராஜரட்னா, மாத்தளை எம்.பி.நிமால் கருணதிலக,பிரபல கல்விமான் எல்.ஏ.மேதானந்த ஆகியோரும் 200 க்கும் மேற்பட்ட காடையர்களும் பாராளுமன்றத்தின் முன்பு நிலத்தில் இருந்த தமிழர்களை மிருகத்தனமாகத்  தாக்கினார்கள்.

கடந்த மே 9 சம்பங்களுக்கு மதகுருமார் மீது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடந்த 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார். இதனை விசாரணை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொதுநலவாய பாராளுமன்ற செயலாளரிடம் கோரினார்.அமைச்சர் ஜோண்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட சில ஆளும் தரப்பு எம்.பிக்களே கைதானர்கள். ஆனால், அன்று இவ்விரு அரச எம்.பிக்கள் கைதாகவில்லை.

தமிழ் சத்தியாக்கிரகிகளை  காடையர்கள் தாக்கப்போவதாக தகவல் கிடைத்தது. அவர்களை விரட்டவா என (SP) பொலிஸ் அத்தியட்சகர் ஐவர் வான்டுவெஸ்ற் என்ற பறங்கியர் பிரதமர் பண்டாரநாயக்கா பாராளுமன்றம் வரும்போது வீதியில் வைத்து கேட்டார்.  “அவர்கள் அதனை அனுபவிக்கட்டும். மழை பெய்கிறது  நனையட்டும் எனக்கூறிய பிரதமர் சிரித்தார்.

கடந்த 13 பிரதமர் அலுவலகம் முன்பு போராட்டம் நடாத்தியவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்து கலைக்கவில்லை என்று பிரிகேடியர் அனில்சோமவீர் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடாத்தினால் அப்பாவி சிங்கள இளைஞர்கள் பலியாவார்கள் என்றே அவர் அதனை செயற்படுத்தவில்லை.

கடந்த மே 9 இதே இடத்தில் அமைதியாக இருந்தவர்களை அலரிமாளிகையில் இருந்து வந்தவர்கள்  தாக்கியபோதும் மேலிடத்தின் உத்தரவால் தடுக்க முடியவில்லை என மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன் விசாரணையில் கூறியிருந்தார்.

பல நேர்மையான பொலிஸ் அதிகாரிகள்  தமது கடமைகளை நீதியாக முன்னெடுக்கமுடியாது அரசியல் தலையீடுகளால் பதவி விலகுவதும், இடமாற்றப்படுவதும், ஓய்வு பெறுவதும், கட்டாய லீவில் அனுப்பப்படுவதும் வெளிநாடுகளுக்கு அச்சத்தில் தப்பிச்செல்வதும் அன்றிலிருந்து  தொடர்கிறது.

கே.எம்.பி.ராஜரட்னா எம்.பி.1956 மே பாராளுமன்றத்தின் முன்பாக தனிச்சிங்களச் சட்டத்தை அமுல்ப்படுத்தவேண்டும், தமிழுக்கு இடம் அளிக்கக்கூடாது என சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தவர்.

சிங்கள நாடு சிங்கள மொழி என தமிழர்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களை வெளியிட்டவர் எல்.ஏ.மேதானந்தா,எம்.பிக்களான கே.எம்.பி.ராஜரட்னா நிமால் கருணதிலக சத்தியாக்கிரகத்துக்கு எதிராக தமிழ் சட்டத்தரணிகள், தமிழ் மருத்துவர்கள், தமிழர்களின் வர்த்தக நிலையங்கள், திரையரங்குகள், வடகிழக்கின் உணவுப்பொருட்கள், புகையிலை போன்றவற்றை புறக்கணிக்குமாறு சிங்களவர் மத்தியில் பிரசாரம் செய்தனர்.

அமெரிக்கா வியட்னாம் கொரியா நாடுகளை இரண்டாக பிரித்ததைப் போன்று இலங்கையையும் பிரிக்கவே தமிழரசுக்கட்சியை தூண்டி சத்தியாக்கிரகத்தை நடாத்துகிறது. அதனால் ஒரு யுத்தம் ஏற்படும் சிங்களவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கே.எம்.பி.ராஜரட்னா இனவாதத்தை தூண்டி தமிழர்களுக்கு எதிராக  கொழும்பில் கலவரத்தை ஏற்படுத்தினார்.

 சத்தியாக்கிரகத்தில் ஈடுபடுவதற்காக வடக்கு,கிழக்கு மற்றும் கொழும்பு பகுதிகளில்இருந்து வந்த தொண்டர்கள் ஜூன் 4 பம்பலப்பிட்டி பிள்ளையார் ஆலய வளவில் தங்கவைக்கப்பட்டு மறுநாள் காலை  சுமார் 200 க்கும் மேற்பட்ட தமிழர்கள்  காலி வீதியூடாக கொடிகளுடன் பாராளுமன்றத்தை நோக்கி நடந்து சென்றபோது காலிமுகத்திடலில் தாக்கப்பட்டனர். அவர்கள் கொண்டுவந்த சமஷ்டி தொடர்பான பிரசுரங்களையும் பறித்து கடலில் எறிந்தனர்.

சத்தியாக்கிரகம் இருந்த கோப்பாய் எம்.பி.வன்னியசிங்கத்தை மாத்தளை எம்.பி.நிமால் கருணதிலக அடையாளம் காட்டவே அவரை தரையில் விழுத்தி  தாக்கினர். அவரது வெள்ளை நாசனலை கழற்றி கைக்கடிகாரத்தை பேனையை பறித்தனர். முழங்காலால் முகத்ததில் குத்த மூக்கிலிருந்து இரத்தம் வடிந்தது.

காறித்துப்பினார்கள். சிறு நீரை பீச்சி அடித்தார்கள்.கைகளால்,கால்களால்,கற்கள்,கம்புகளால் கண்டபடி தாக்கினார்கள்.சில தொண்டர்களின் காதுகளை கடித்து பிய்த்தனர். தந்தை செல்வநாயகத்தின் 15 வயது மகன் மனோகரன் உட்பட சிலரை துர்நாற்றமுள்ள பேரை வாவிக்குள் தூக்கி எறிந்தனர்.

தமிழர்கள் காடையர்களால் தாக்கப்படுவதை பாராளுமன்ற மேல் தட்டில் பிரதமர் பண்டாரநாயக்கா பார்த்துக்கொண்டு நின்றார். அதனை  ” Let them have the tast of it” என கேலிசெய்தார். அதே மேல் தட்டில் ( ஜனாதிபதி செயலகம்) இன்று ‘கோதா கோ கோம்’ போராட்டக்காரர் ஆக்கிரமித்து நிற்பதை காணமுடிகிறது. 

யாழ்.எம்.பியும் தமிழ்க்காங்கிரஸ் தலைவருமான ஜீ.ஜீ.பொன்னம்பலம், இ.தொ.கா.தலைவர் எஸ்.தொண்டமான்,சேர்.கந்தையா வைத்தியநாதன், ஏ.அசீஸ், சென்.யோசப் கல்லூரி அதிபர் வண.பீற்றர் பிள்ளை,வண.தனிநாயகம் உட்பட பல பிரமுகர்கள் சத்தியாக்கிரகிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

1956 தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் முதல் முதலாக தெரிவான இளைஞரான அமிர்தலிங்கத்தின் ( 29 வயது) தலையில் காடையர் கல்லால் தாக்கியதில் மண்டை உடைந்து வவுனியா எம்.பி.பேராசிரியர் செ.சுந்தரலிங்கம் அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்று  சிகிச்சை அளித்தார். சாவகச்சேரி எம்.பியான வீ.என்.நவரத்தினம் இரு கால்களில் படுகாயமடைந்து தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமிர்தலிங்கத்தை தலையில் பண்டேஜ் கட்டியபடி வவுனியா எம்.பி-செ.சுந்தரலிங்கம் சபைக்கு அழைத்து வரும்போது பிரதமர் பண்டாரநாயக்கா  (Wounds of War)“யுத்தத்தின் தழும்புகள்” என கிண்டல் செய்தார். அரச தரப்பு எம்.பிக்களும் கூச்சலிட்டனர். பாராளுமன்ற வரலாற்றில் உறுப்பினர்

ஒருவர் பாராளுமன்றத்துக்கு வெளியே தாக்கப்பட்டு காயத்துடன் சபைக்குள் நுழைந்த முதல் சம்பவமும் இதுவே. காலி முகத்திடல் சம்பவங்களையே நீங்கள் உண்மையாக விரும்பினீர்கள். எதிர்பார்த்தீர்கள். அதற்காகவே காத்திருந்தீர்கள். தவம் கிடந்தீர்கள் எனவும் பிரதமர் பண்டாரநாயக்கா அமிர்தலிங்கத்தை பார்த்துக் கிண்டலாக பேசினார்.

தமிழர்கள் மீதான வன்முறைகள் குறித்து தமக்கு கிடைத்த ‘ தந்திகளை’  கோப்பாய் எம்.பி.குமாரசாமி வன்னியசிங்கம் சபையில் வாசித்தபோது

ஆளும் தரப்பினர் அதனை செவிமடுக்காது சிரித்தனர். பிரதமர் காடைத்தனங்கள்,வன்முறைகளுக்கு ஒத்துழைப்பதால் நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கிறார். இவை உங்கள் சொந்த அழிவுக்குத்தான் வழிவகுக்கும் என எச்சரிக்கிறேன் என்று கு.வன்னியசிங்கம் எம்.பி.பிரதமருக்கு கூறியிருந்தார். 1959 செப்டம்பர் 26 பிரதமர் பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்டார்.

கடந்த மே 9 வன்முறைகளை ஜூன் 10 இல் பாராளுமன்றத்தில் சகல உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி கூறினார்கள். படுகொலை செய்யப்பட்ட பொல்லநறுவ பொதுசன பெரமுன எம்.பி.அமரகீர்த்தி அத்துக்கொரளவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். 1956 ஜூன் 5 தாக்கப்பட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. 1956 ஜூன் 5  தாக்கப்பட்ட தமிழரசு எம்.பிக்களில் எம்மத்தியில்  வாழ்பவர் மட்டக்களப்பு தொகுதி முன்னாள் எம்.பி. செல்லையா இராசதுரையே.

வவுனியா எம்.பி.பேராசிரியர் செ.சுந்தரலிங்கம் “நாம் சிங்களத்தை படிப்பதற்கு முன்னர் ஆயுதம் பாவிப்பதை அறிந்துகொள்ளவேண்டியிருக்கும். அதில் சிறிதும் தவறமாட்டோம்”  எனக்கூறினார்.(Hansard vol 24,col.1805-1956). எதிர்காலம் ஆயுதப்போராட்டம் ஏற்படும் என அவரின் கூற்றை 25 ஆண்டுகளால் காணமுடிந்தது.

விவாதத்தில்  பேசிய பீற்றர் கெனமன்,என்.எம்.பெரேரா,லெஸ்லி குணவர்த்தனா,பருத்தித்துறை தொகுதி கம்யூனிஸ்ட் உறுப்பினர் பொன்.கந்தையா போன்ற இடதுசாரிகள்  சிங்களச் சட்டத்தால் நாட்டில் ஏற்படவுள்ள பேராபத்தை தத்தரூபமாக விபரித்தனர். பொன்.கந்தையாவை தவிர ஏனைய மூவரும் 1972 இல் கொல்வின் ஆர்.டி சில்வாவின் குடியரசு அரசியலமைப்பை ஆதரித்தனர்.

மார்க்சிசத்தின் தந்தை அமைச்சர் பிலிப் குணவர்த்தனா ( தினேஷ் குணவர்த்தனாவின் தந்தை) ” எமது தேசிய போராட்டத்தின் முக்கிய கட்டமாக இச்சட்டத்தை நிறைவேற்றுகிறோம். அந்நிய சக்திகள் இந்த நாட்டை ஆக்கிரமித்தபோது சிங்கள மொழியே இருந்தது. அதனை மீளக்கொண்டு வந்துள்ளோம் “என்றார்.

கோட்டபாய ராஜபக்ச  நாட்டில் இருந்து தப்பிச்சென்றதைப்போலவே 1942 இல் பிரித்தானியருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கண்டியில் சிறைவைக்கப்பட்ட பிலிப் குணவர்த்தனா, என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி சில்வா  தப்பி வடக்கே வந்து வல்வெட்டித்துறை ஊடாக இந்தியாவுக்கு படகில் தப்பிச்சென்றதும் குறிப்பிடத்தக்கது.

சம அந்தஸ்து கொள்கையை வலியுறுத்தி  கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா ” ஒரு மொழி எனில் இரு நாடு-இரு மொழிகள் எனில் ஒரு நாடு”என தனிச்சிங்கள சட்ட விவாதத்தில் தீர்க்கதரிசனமாக கூறியது இன்று உண்மையாகியுள்ளது. வடக்கு,கிழக்கு மேடைகளில் தமிழர்களுக்கு சம உரிமையை வலியுறுத்தி பேசியவர்.

16 வருடங்களால்  1970 இல் சிறிமாவோ அரசில் அரசியலமைப்பு விவகார அமைச்சரானதும் 1972 அவர் தயாரித்த குடியரசு அரசியலமைப்பில் தனி நாட்டு பிரிவினைக்கான வித்தை வேரூன்ற வைத்தார். மதத்தை அபின் என்று வர்ணித்த சோசலிசவாதியான அவரின் அரசமைப்பில் பௌத்த மதம் அரச மதமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன் சோல்பரி அரசியலமைப்பின் சிறுபான்மையினருக்கான உரிமையை பாதுகாக்கும் 29 பிரிவை நீக்கியது.

இன்றும் வடக்கு,கிழக்கு பகுதிகளுக்கு சிங்களத்திலேயே அரச கடிதங்கள்,சுற்று நிருபங்கள் அனுப்பப்படுகின்றன. வவுனியா பல்கலைக்கழகத்துக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய வந்த போது, அதன் பெயர் சிங்களத்தில் மாற்றப்பட்டது. 2020 ஜனவரி மன்னாரில் பனை அபிவிருத்திச்சபை பயிற்சி நிலையத்தை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, அதன் பெயர் பலகையில் முதலாவதாக இருந்த தமிழ் மொழியை மாற்றி சிங்களத்தை முதலாவதாக எழுத உத்தரவிட்டார்.

ம.ரூபன் வீரகேசரி

Share.
Leave A Reply

Exit mobile version