சிங்கள இனவாதக் குழுவினர், மேற்கொண்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்
தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறை நடந்தேறி 39 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
கறுப்பு ஜுலையில் முதலாவது கலவரம் ஆரம்பமானது, ஜுலை மாதம் 23ம் தேதி என்பதுடன், அதே தேதியை அண்மித்து மக்கள் மீது இலங்கை ராணுவம் நேற்று (22) தாக்குதல் நடத்தியதாக காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் 1983ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தபோதும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்தது. 2022ல் தற்போதும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார்.
1983ஆம் ஆண்டு இலங்கையில் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்தன ஆட்சி செய்தார். இன்று அவரது மருமகனான ரணில் விக்ரமசிங்க ஆட்சி செய்து வருகிறார் என்று போராட்டக்காரர்கள் ஒப்பிடுகிறார்கள்.
கறுப்பு ஜுலை – வரலாறு என்ன?
1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி முதல் சில வார காலத்திற்கு இலங்கையின் பல பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என இந்தக் கலவரத்தை இன்றும் இலங்கையர்கள் அடையாளப்படுத்தி வருகின்றனர்.
திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஆரம்பமாக இந்த கறுப்பு ஜுலை வன்முறை பார்க்கப்படுகிறது.
கொழும்பு மற்றும் தென் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான வணிக நிலையங்கள், வீடுகள், சொத்துகள் என அனைத்தையும் அழிக்கும் செயல்பாடாக இந்த வன்முறை சம்பவம் பதிவாகியிருந்தது.
ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று தமிழர்களைத் தேடித் தேடி தாக்குதல் நடத்தியது மாத்திரம் அன்றி, தமிழர்கள் இந்த வன்முறைகளில் கொலையும் செய்யப்பட்டார்கள்.
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் மீது பல தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், 1983ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர்களுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது.
கறுப்பு ஜுலை ஏற்படுவதற்கான காரணம்?
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் ராணுவத்தினர் பயணித்த வாகனமொன்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் ஜுலை 23ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 ராணுவ சிப்பாய்கள் உயிரிழந்திருந்ததாகக் கூறப்பட்டது.
உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் தென் பகுதியிலுள்ள சிங்கள மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.
கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், முற்றுகைத் தாக்குதலும் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 ராணுவத்தினர் முதலில் உயிரிழந்ததுடன், பின்னர் காயமடைந்த இரண்டு ராணுவத்தினர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்திருந்தது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான தகவல்கள் மறுநாள் வெளியாகிய நிலையில், தென் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த ராணுவ சிப்பாய்களின் சடலங்களை கொழும்பு – பொரள்ளை மயாகத்தில் நல்லடக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்த நிலையில், பொரள்ளை பகுதிக்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வருகை தந்திருந்தனர்.
இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் தாக்குதல் நடத்த வந்துவிட்டதாக புரளி பரவி, சிறிய அளவில் ஏற்பட்ட வன்முறை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டது.
மிதவாத தலைவர்கள் தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் எனக் கோரத் தொடங்கினார்கள்
இந்த வன்முறை சம்பவத்தினால் பல தமிழர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும் பலர் எரியூட்டி கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த வன்முறை சம்பவத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர்.
1983ஆம் ஆண்டு தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்ட பின்னணியில், பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
இலங்கையில் தமது சொத்துகளை, சொந்தங்களை இழந்த பலர் இன்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ் இன அழிப்புக்கு இந்த வன்முறை முதன்முதலில் வித்திட்டதாக இன்றும் தமிழர்கள் கூறி வருகின்றனர்.
இன்று என்ன நடக்கின்றது?
இலங்கையில் தற்போது அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய ராஜபக்ஷவே காரணம் எனத் தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், தற்போது ரணில் விக்ரமசிங்கவை நோக்கி நகர்ந்துள்ளது.
ராஜபக்ஷ குடும்பத்தைப் பாதுகாக்கும் நோக்கிலேயே, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
ஜனாதிபதியாக கடந்த 21ஆம் தேதி பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, 22ஆம் தேதி அதிகாலை காலி முகத்திடலுக்கு ராணுவத்தை அனுப்பி போராட்டக்காரர்களைக் கலைக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
போராட்டக்காரர்கள் வசமிருந்த ஜனாதிபதி செயலகத்தைக் கைப்பற்றும் நோக்கிலேயே ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்குப் பலரும் தமது எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காலி முகத்திடல் போராட்டத்திலுள்ள இளைஞனான சத்துர ஜயவிக்ரம பண்டார, போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.
”ஜுலை மாதம் 23ஆம் தேதி, இந்த நினைவுகளை நாம் சற்று பின்நோக்கிப் பார்த்தால், 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி இன்று இலங்கையில் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பலவந்தமாக பதவியேற்றுக் கொண்ட, அதாவது மக்களின் விருப்பமின்றி தெரிவான ரணில் விக்ரமசிங்கவின் மாமனார், ஜுலை மாதம் 22ஆம் தேதியை அண்மித்தே அடக்குமுறையை ஆரம்பித்தார்.
மாமனார் செய்ததை, மருமகன் செய்வில்லை என்றால், அது பலனில்லை என எண்ணியிருப்பார் போலத் தெரிகிறது. நான் காணாத, அதாவது 39 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற, எமது நாட்டில் வாழக்கூடிய தமிழ் மக்கள் மாத்திரம் எதிர்நோக்கிய அடங்குமுறையை, இன்று ராணுவமயமாக்கலைப் பயன்படுத்தி மேற்கொண்டதை இன்று நாம் கண்டோம்.
39 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதை, ரணில் விக்ரமசிங்கவின் மூலம் இன்று எம்மால் அவதானிக்க முடிந்தது. மாமனார் செய்ததை, மருமகனும் செய்து, இலங்கையில் மீண்டுமொரு கறுப்பு ஜுலையை ஏற்படுத்த முயல்கிறார்.
இலங்கையில் மீண்டும் இளைஞர்களின் உயிர்களை பலியெடுப்பதற்காகவா அல்லது இளைஞர், யுவதிகளின் கனவுகளை இல்லாது செய்வதற்காகவா இப்போது முயல்கிறீர்கள் என்றும் 30 வருட யுத்தம் எனக் கூறி தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்களை மோதிக் கொள்ள வைத்து, நாட்டை இல்லாது செய்யவா முயல்கிறீர்கள் என்றும் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்க விரும்புகின்றோம்” என சத்துர ஜயவிக்ரம பண்டார தெரிவிக்கின்றார்.
“1983ம் ஆண்டு நடந்த கறுப்பு ஜுலை நிகழ்வை மீண்டும் நிகழ்த்த ரணிலுக்கு தேவை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது” என காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் பிரதீபா பெர்ணான்டோ பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
”1983 கறுப்பு ஜுலை நினைவலைகளை நாம் அறிவோம். இந்த கறுப்பு ஜுலை காரணமாக, இன்றும் காயங்களுடன் வாழும், பலரை நாம் அறிவோம். பலரது வாழ்க்கை அந்த தருணம் முதல் முழுமையாக மாறியது.
அந்த ஜுலை மாதத்தை மீண்டும் நிகழ்த்துவதற்கு ரணிலுக்கு தேவை உள்ளதா என தெரியவில்லை. நேற்று இரவு நேரத்தில் கொடுமையான தாக்குதலை நடத்தியமையானது, கறுப்பு ஜுலைக்கு சமமானது என நான் நினைக்கின்றேன்.
அந்த கறுப்பு ஜுலையின் மாதிரியா இது என்ற எண்ணம் எனக்கு வருகின்றது” என போராட்டகளத்தில் முன்னின்று போராடும் பிரதீபா பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.
பல சிங்கள இளைஞர்களிடம் இந்தக் கருத்து எதிரொலிக்கிறது.