மக்களால் தெரிவு செய்யப்பட்டு, உள்ளூராட்சி சபைகள், மாகாணசபைகள் மற்றும் பாராளுமன்றத்தில் கோலோச்சும் எல்லா அரசியல்வாதிகளும் தாம் மக்களுக்கு வழங்கிய கோரிக்கைகளை நூற்றுக்கு நூறு வீதம் நிறைவேற்றுவதில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

அவர்களின்  நலன்களை கவனித்துக்கொள்வதிலேயே தமது பதவி காலத்தின் பாதியை செலவிட்டு விடுவர். இது ஒரு வகையில் தம்மை ஏமாற்றும் செயற்பாடு என்பதை வாக்களித்த மக்களும் அறிவர். அரசியல்வாதிகளால் மக்கள் ஏமாற்றப்படுவதென்பது மூன்றாம் உலக நாடுகளின்  தவிர்க்க முடியாது அரசியல் கலாசாரம்.

ஆனால் தம்மோடு இருக்கும் அரசியல்வாதிகளையே ஏமாற்றும் அரசியலை இலங்கையில் தான் கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது இலங்கையில்  உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெயருக்குத் தான் இப்போது அந்த பதவியில் இருக்கின்றார்களோ என்று கூறத்தோன்றுகிறது.

ஏனென்றால் கட்சித் தலைமைகள் கூறுவதை ஒரு பொருட்டாக கருதாது தாம் நினைத்ததை சாதிக்கும் உறுப்பினர்கள் இப்போது அனைத்து கட்சிகளிலும் முளைத்து விட்டனர். ஆக இவர்கள் அனைவரும் சேர்ந்து, ‘கட்சி தலைவர்களை பொருட்படுத்தாத கட்சி’ என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கலாம்.

புதன்கிழமையன்று பாராளுமன்றில் இடம்பெற்ற இடைக்கால ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில் அவ்வாறு தான் இடம்பெற்றது.  இரகசிய வாக்கெடுப்பு என்ற விடயத்தை  சில உறுப்பினர்கள் தமக்கு சாதகமாகப்  பயன்படுத்திக்கொண்டனர்.

சஜித் அணியில் அங்கம் வகித்து அவருக்கு ஆதரவு வழங்கி வந்த கட்சி உறுப்பினர்கள் மற்றும் டலஸ் அணியில் இருந்த உறுப்பினர் அனைவரும் மனசாட்சியின் படி டலஸுக்கு வாக்களித்திருந்தால் அவர் 105 வாக்குகளையாவது பெற்றிருப்பார். அவர் வெல்வதும் தோற்பதும் இரண்டாவது விடயம்.

ஆனால் இந்த முடிவானது டலஸுக்கு மாத்திரமின்றி சஜித்துக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடைக்கால ஜனாதிபதியாக போட்டியிடுவதை முதல் நாளன்று சஜித் அறிவித்தாலும் அது முன்னதாகவே எடுக்கப்பட்ட தீர்மானம்.

ஏனென்றால் அவருக்கு பாராளுமன்றில் மூன்று தரப்பினரை எதிர்த்து நிற்க வேண்டிய நிலைமை. முதலாவது பொதுஜன பெரமுனவின் மஹிந்த அணி, இரண்டாவது டலஸ் அணி, மூன்றாவது ரணிலை ஆதரிப்போர் அணி.

தனது அணியில் தன்னை விரும்பாதவர்கள் டலஸை விரும்பக் கூடும் என அவர் தப்புக்கணக்கு போட்டிருக்கிறார். பாராளுமன்றில் தனக்கு உள்ள ஆதரவை பற்றிய அச்சத்தில், அதிலிருந்து தப்பிக்கவே சஜித் டலஸை தெரிவு செய்யும் முடிவுக்கு வந்திருப்பாரே ஒழிய, ரணிலை எதிர்த்து ஒருவரை நிறுத்தி அதில் அவரை வெற்றி பெறச்செய்யும் எண்ணத்தில் இல்லை என்று தாராளமாகக் கூறலாம்.

சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரையும் சேர்த்தால் 50 பேர் இருக்கின்றனர். பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்கும் அணிகளின் உறுப்பினர்கள் 27 பேர் உள்ளனர். இறுதி தருணத்தில்  டலஸுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றது.   டலஸ் அணியில்  13 உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர். அதே வேளை பொதுஜன பெரமுனவில் 25 பேர்வரை தாம் டலஸுக்கு ஆதரவளிப்பதாக கூறியிருந்தனர். அப்படியானால் டலஸுக்கு 112 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டுமே?

இறுதி நேரத்தில் பொதுஜன பெரமுனவினர் அனைவரும் ரணிலுக்கே ஆதரவளிக்க தீர்மானித்திருந்தனர். ஆகையால் பெரமுனவில் டலஸுக்கு ஆதரவாக இருக்கக் கூடிய 25 உறுப்பினர்கள் வரை  அதை தவிர்த்திருந்தாலும் கூட மேற்படி அனைத்து கட்சிகளினதும் உறுப்பினர்களின் அடிப்படையில் டலஸுக்கு சரியாக 100 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும்.

இங்கு என்ன நடந்தது? மேற்படி டலஸுக்கு ஆதரவளிக்க தயார் என்று கட்சித்தலைவர்கள் அறிவித்தாலும் அதன் உறுப்பினர்கள் அதை மீறி செயற்பட்டுள்ளனர். டலஸுக்குக் கிடைத்த  82 வாக்குகளில் மிகுதியான 18 வாக்குகள் ரணிலுக்கே சேர்ந்திருக்கின்றன. இதில் உறுப்பினர்களை மாத்திரம் குறை கூற முடியாது.

மேற்படி கட்சிகளின் தலைவர்களில் எத்தனைப் பேர் மனசாட்சியின் படி டலஸுக்கு வாக்களித்தார்கள் என்பதை அவர்களும் அந்த இறைவனும் மாத்திரமே அறிவர். ஆனால் வாக்கெடுப்பு முடிந்த பிறகு சஜித் அணியிலிருந்து ரணில் பக்கம் தாவிய ஹரீன் பெர்ணான்டோ கூறிய விடயம் முக்கியமானது.

சஜித் அணியில் 12 பேர் வரை ரணிலுக்கே ஆதரவளித்தனர் என அறிவித்து அவர் சர்ச்சையொன்றை கிளப்பியிருந்தாலும் அதுவே உண்மை என்று தெரிகின்றது.  அவர்களின் பெயர்களை தான் வெளிப்படுத்த விரும்பவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே மிகுதியான ஆறு பேர் யார் என்ற விபரம் இப்போதைக்கு சஜித்துக்கு தேவையாக இருக்காது.

இந்த ஏமாற்று, கழுத்தறுப்பு, துரோகத்தனங்களை தாண்டியே  இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் வெளிப்படையாக தமது உறுப்பினர்கள் மூவரின் வாக்குகளை மாத்திரம்  பெற்ற அநுர குமார திசாநாயக்க  தனித்து நிற்கிறார். இது அவர் எதிர்ப்பார்த்தது தான்.

ரணிலின் வெற்றி எப்போதோ உறுதியானது. அவர் ஜனாதிபதியாகி விட்டார். ஆனால் மிகுதியான நாட்களை சஜித் மற்றும் டலஸ் ஆகியோர் எவ்வாறு நகர்த்தப்போகின்றனர் என்பது அவர்களுக்கு சவாலான விடயம்.

இனி பொதுஜன பெரமுனவின் மஹிந்த மற்றும் அவர் சார்ந்த உறுப்பினர்களின் ஆதரவை டலஸ் பெற முடியாது போகும். ரணில் ஜனாதிபதியாகி விட்டதால் சஜித் அணியிலிருந்து பலரும் அதிகாரம் இருக்கும் பக்கம் போவதற்கே விரும்புவர்.

தப்பித்த இ.தொ.கா

டலஸுக்கு ஆதரவு என சஜித்  அறிவிக்க முன்பு வரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது ரணிலுக்கே தனது ஆதரவை வழங்குவதற்கு தீர்மானித்திருந்தது எனலாம். எனினும் சஜித்தின் அறிவிப்பையடுத்து இ.தொ.கா தரப்பு சற்று குழம்பிப்போயிருந்ததாக கூறப்படுகின்றது.

ஏனென்றால் டலஸ் தரப்புக்கு ஆதரவு தரும்  கட்சிகளில்  இறுதியாக தமது ஆதரவை அறிவித்த தரப்பினர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஆவர். அதற்கு முன்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அறிவிப்பை எவரும் அதிசயமாக பார்க்கவில்லை. ஏனென்றால் அக்கூட்டணி சஜித்துக்கு ஆதரவு தரும் அணியாகவே பாராளுமன்றில் இருந்து வருகின்றது.

சஜித்தோடு இணைந்தே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. டலஸுக்கு ஆதரவு தரும் அணிகளிலேயே அதிக சிறுபான்மை கட்சிகளின் கூட்டு இருப்பதாலும் அதில் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு கட்சிகள்  இருப்பதாலும் இ.தொ.காவின் உயர்பீடம் இது குறித்து யோசித்திருக்கலாம்.

சரியான தீர்மானமெடுப்பதில் இதுவே  அவர்களுக்கு சவாலான விடயமாக இருந்தது. எனினும் முன்வைத்த காலை பின்வைக்காது ரணிலுக்கே ஆதரவளிப்பதாக வாக்கெடுப்பு இடம்பெறும் நாளன்று காலையே இ.தொ.கா தனது  ஆதரவை அறிவித்தது.

வடக்கில் பிரதான கூட்டணியான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ரணிலுக்கு எதிரான முடிவை எடுக்க அங்குள்ள ஈ.பி.டி.பி ரணிலுக்கு ஆதரவை வழங்கியது. அதேவேளை மூன்று கட்சிகளின் கூட்டிணைவாகவும் அதில் மலையகப்பிரதேசங்களில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எடுத்த முடிவாக சஜித் தரப்பினருக்கே ஆதரவை வழங்க, இ.தொ.கா  மொட்டு கட்சி ஆதரவோடு போட்டியிட்ட ரணிலுக்கு தனது ஆதரவை வழங்கியது.  ஆகவே இதில் பெரிதாக எந்த வித்தியாசங்களையும் காணமுடியவில்லை.

எது எப்படியானாலும் இலங்கை அரசியலின் போக்கை மாற்றியமைத்து வெற்றி பெற்ற    அரசியல்வாதிகளில் ரணிலுக்கு பெரும்பங்குண்டு. பாராளுமன்றில் அன்று நடந்த வாக்கெடுப்பு முடிவுகளை வைத்து அரசியல் ஏமாற்று வித்தைகளையும் துரோகத்தனங்களையும்  பற்றி எதிரணியினரும் மக்களும் பேசிக்கொண்டிருந்தாலும் அதையும் தாண்டி ஒரு அரசியல் பயணத்துக்கு ரணில் தயாராகி விட்டார் என்றே கூற வேண்டியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version