திருவள்ளூரில் உயிரிழந்த பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், முறையான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்று கூறி ‘உடலை வாங்க மாட்டோம் என்று மாணவியின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
என்ன நடந்தது?
திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு காவல் எல்லைக்கு உட்பட்ட கீழச்சேரி பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஜூலை 26) காலை மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.
மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் திருவள்ளூர் மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மப்பேடு காவல் துறையினர் இதனை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.
இதனிடையே காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா, திருவள்ளூர் எஸ்பி கல்யாண் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் பள்ளி மற்றும் விடுதியில் ஆய்வு செய்தனர். அவர்களுடன், தடயவியல் வல்லுநர் குழுவும் ஆய்வு செய்தது. பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
திருவள்ளூர் சிபிசிஐடி ஆய்வாளர் திரிபுரசுந்தரி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து சிபிசிஐடி அதிகாரிகள் நேரில் வந்து பள்ளி மற்றும் விடுதியில் மாணவி உயிரிழந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.
மேலும், பள்ளி விடுதி காப்பாளர்களிடம் மாணவியின் ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களிடமும் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அதிவிரைவு படை போலீசார் மருத்துவமனை வளாகம் முழுவதும் குவிக்கப்பட்டனர்.
உறவினர்கள் போராட்டம்
இந்நிலையில் இன்று காலை மாணவியின் உடல் உடற்கூறு ஆய்வு நடைபெற்றது. நீதிமன்ற அறிவுறுத்தல் படி உடற்கூறாய்வு முழுமையான வீடியோ பதிவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து உறவினர்களிடம் மாணவியின் உடல் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மாணவி எப்படி, எதனால், எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் தெளிவுபடுத்த வேண்டும் எனக்கூறி மாணவியின் உறவினர்கள் உடலை பெற்றுக்கொள்ள சமாதிக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மேலும் போலீசாரின் விசாரணை முன்னேற்றத்தை முறையாக தெரிவிக்காவிட்டால் மாணவியின் உடலை வாங்கிக் கொள்ள மாட்டோம் என்றார்கள்.
இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு இருந்தார்கள்.
அதேபோல் அதிவிரைவு படை போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.
உறவினர்கள் குற்றச்சாட்டு
முன்னதாக மாணவியின் உடலை வாங்க மறுத்து செய்தியாளர்களிடம் பேசிய உறவினர் ஒருவர், “மாணவி உயிரிழப்பதற்கு முன்பு இரவு 9 மணிக்கு அவர் பெற்றோருடன் தொலைபேசியில் நல்லபடியாக பேசினார்.
ஆனால் காலை மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள். எப்படி? எதனால்?
‘எதற்காக தற்கொலை செய்து கொண்டார்?’ என்பது குறித்து தற்போது வரை முறையாக யாரும் தெரிவிக்கவில்லை.
விசாரணை முன்னேற்றத்தை முறையாக தெரிவிக்காவிட்டால் மாணவியின் உடலை நாங்கள் வாங்கிக் கொள்ள மாட்டோம்” என்றார்.
இதற்கிடையில் காவல்துறை உயர் அதிகாரிகள், வருவாய் துறையினர் உள்ளிட்டோர் மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரரிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள். மாணவி தற்கொலைக்கு உரிய விளக்கம் வேண்டும், தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என பெற்றோர்களின் கோரிக்கை முழுவதையும் நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததை அடுத்து மாணவியின் உடலை பெற்றோர்கள் பெற்றுக்கொள்ள சம்பந்தம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மாணவியின் உடலை அவரது சொந்த ஊரான தெக்களூர் கிராமத்திற்கு நல்லடக்கம் செய்ய போலீஸ் பாதுகாப்போடு எடுத்துச் சென்றனர்.
முன்னதாக பள்ளி மற்றும் விடுதியில் ஆய்வு செய்த திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், “இந்த வழக்கு விசாரணை வெளிப்படை தன்மையாக நடந்து வருவதாகவும், தம்முடைய கவனத்திற்கு வந்தவுடன் இந்த வழக்கில் துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது” என்றும் தெரிவித்திருந்தார்.