இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரில் கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக சிங்கப்பூர் அரசு தலைமை சட்ட அதிகாரியிடம் (அட்டர்னி ஜெனரல்) குற்றவியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு இந்தப் புகாரை அளித்துள்ளது.
அனைத்துலக சட்ட வரம்புக்கு உட்பட்டு கோத்தபாய மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சிங்கப்பூர் அரசாங்கமும்கூட தனது நாட்டுச் சட்டங்களின் கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இயலும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பு வகித்தார் கோட்டாபய ராஜபக்ஷ, அப்போது இலங்கை ராணும் தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டதாக அவர் மீது புகார்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் பலியானதாக் கூறப்பட்ட நிலையில், அவர் இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், போர் குற்றங்கள் உட்பட கோட்டாபயவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள பல்வேறு புகார்கள் குறித்து சிங்கப்பூரிலேயே அவர் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்கிறது அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு. அதற்கான காரணங்களையும் அது பட்டியலிட்டுள்ளது.
இலங்கையில் நிகழ்ந்த இறுதிகட்ட போரின்போது கோட்டாபய பல்வேறு போர்க்குற்றங்களைப் புரிந்ததாக அந்த அமைப்பு சாடியுள்ளது.
இது தொடர்பாக பல்வேறு தகவல்களைத் திரட்டி இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே முன்னாள் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அமைப்பின் வழக்கறிஞர் அலெக்சாண்டிரா லில்லி கேதர்.
புகார் என்ன?
அலெக்சாண்டிரா தற்போதுபெர்லின் நகரில் உள்ளார் என்றும், ராய்ட்டர்ஸ் செய்தி முகமை அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தததாகவும் கூறப்பட்டுள்ளது.
“கோட்டாபயவுக்கு எதிராக புகார் செய்துள்ளோம். சிங்கப்பூர் அரசாங்கம் அவரை கைது செய்வதன் மூலம் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உண்மை நிலையைப் பறைசாற்ற முடியும். அதற்கான அரிய வாய்ப்பு இப்போது சிங்கப்பூருக்கு அமைந்துள்ளது,” என்கிறார் அலெக்சாண்டிரா லில்லி கேதர்.
இற்கிடையே, சிங்கப்பூரில் உள்ள கோத்தபாயவை தொடர்புகொள்ள ராய்ட்டர்ஸ் முயற்சி மேற்கொண்ட போதிலும், பலன் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இறுதிக்கட்ட போரின்போது கோத்தபாய ராஜபக்சே ஜெனிவா ஒப்பந்தங்களை மீறிவிட்டதாகவும், அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு அளித்துள்ள 63 பக்கங்களுக்கு நீளும் குற்றவியல் புகார் மனுவில் குறிப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் முகமை கூறியுள்ளது.
கோத்தபாயவைக் கைது செய்வது தொடர்பாக அந்த அமைப்பிடம் இருந்து ஒரு கடிதம் கிடைக்கப் பெறற்றுள்ளதாக சிங்கப்பூர் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
கடந்த 23ஆம் தேதி இந்தக் கடிதம் பெற்றபட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து மேலதிக கருத்துகள் எதையும் தெரிவிக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட காரணங்களுக்காக சிங்கப்பூர் வந்திருப்பதாகவும், அவர் புகலிடம் கோரவில்லை என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
“போர்க்குற்றம், இனப்படுகொலை, சித்ரவதை தொடர்பான குற்றச்சாட்டுகளை சிங்கப்பூர் நீதிமன்றத்தால் விசாரிக்க இயலும் என்றாலும், சிங்கப்பூர் அந்த நடவடிக்கையை கடைசி வாய்ப்பாக மட்டுமே பயன்படுத்தும்,” என்று அரசு பலமுறை தெரிவித்துள்ளது என்றுறார் பிரிட்டனில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் பேராசிரியர் ஷுபாங்கர் டாம். இவர் சிங்கப்பூரிலும் சில காலம் பணியில் இருந்துள்ளார்.
சிங்கப்பூர் தனது வெளியுறவுக் கொள்கையில் நடுநிலையைக் கடைப்பிடிப்பதாக அதிகாரபூர்வமா அறிவிக்கவில்லை என்றாலும் அந்நாடு நீண்டகாலமாக அவ்வாறு செயல்பட்டு வருவதாகவும் ஷுபாங்கர் தெரிவித்துள்ளார்.
எனவே, ஒரு வெளிநாட்டுத் தலைவரை மீது வழக்கு தொடுக்கப்பட வேண்டும் எனில், சிங்கப்பூரின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு ஏற்ப அதை சமநிலைப்படுத்த வேண்டிய அவசியம் எழும் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இதற்கிடையே, கடந்த 2008ஆம் ஆண்டு போர்ப் பகுதியில் இருந்து ஐ.நா, நிவாரண முகமைகளை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டதாகவும், அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு கூறியுள்ளது.
“இதன் மூலம் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் கட்டவிழ்த்துவிடும் வன்முறைக்கும் படுகொலைகளுக்கும் சாட்சிகள் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டார் கோத்தபாய.
கோட்டாபயவை கைது செய்து விசாரணை செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை சட்ட அதிகாரியிடம் மனு அளிதி்துள்ளோம். இதுவே எங்கள் வழக்கின் அடிப்படையாக இருக்கும்,” என்கிறார் அந்த அமைப்பின் செயல் இயக்குநர் யாஸ்மின் சூக்கா (Yasmin Sooka).
சிங்கப்பூரில் இருந்து கோட்டாபய வெளியேற வேண்டுமா?
இதற்கிடையே கோட்டாபய எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் அவர் மீண்டும் இலங்கைக்கு வர உள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தணா தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக SOCIAL PASS அடிப்படையில்தான் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், இவ்வாறான ஏற்பாட்டில் ஒருவர் சிங்கப்பூர் வந்தால், சம்பந்தப்பட்டவர் அங்கு 14 நாள்கள் மட்டுமே தங்கி இருக்க முடியும்.
கோத்தாபய கடந்த 13ஆம் தேதியே சிங்கப்பூர் சென்றடைந்தார். எனவே அவர் வெளியேற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவக்கு, குறுகிய கால விசா வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு 30 நாள்களுக்கான ‘சோஷியல் விசிட்’ எனும் சுற்றுப்பயண விசா வழங்கப்படும். அந்த விசா 30 நாள்களுக்குச் செல்லுபடியாகும்.
ஆனால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 நாள் விசா வழங்கப்பட்டதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ ஊடகம் தெரிவித்துள்ளது.
எனவே, அவர் மேலும் சில காலம் தங்க சிங்கப்பூரின் குடிநுழைவு சட்டங்கள் அனுமதிக்குமா என்பது குறித்து அரசுத்தரப்பில் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.