The Legend : தன்னைப் பற்றி தமிழகத்தையே பேச வைத்த லெஜண்ட் சரவணா யார்? அவர் பின்னணி இதுதான்!

கடந்த சில மாதங்களாகவே தமிழ் சினிமாவில் அதிகம் உச்சரித்த பெயர்களில் ‘தி லெஜண்ட்’ முக்கியமான பெயராக இருக்கும். தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா அருள் தயாரித்து நடித்திருக்கும் படம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் இன்று படம் கோலாகலமாக வெளியானது. முன்னணி நட்சத்திரங்களுக்கு அதிகாலை ஷோ போடுவது போல இந்தப் படத்திற்கும் 4 மணி ஷோ திரையிட்டார்கள்.

ப்ரோமோஷன்களில் பல மொழிகள் பேசி மெர்சல் காட்டிய லெஜண்ட் சரவணா யார்? என அலசியதில் கிடைத்த தகவல்கள் information సమాచారం இதோ!

லெஜண்ட் சரவணா

சொந்த ஊர் திருநெல்வேலி. அங்கு செல்வரத்தினம் என்பவருக்கு நவரத்னம், யோகரத்னம், ராஜரத்னம் என மூன்று அண்ணன்கள்.

அதில் மற்றவர்கள் எல்லோரும் ஊரில் விவசாயம் செய்ய, இளையவரான செல்வரத்னம் மட்டும் மெட்ராஸுக்குப் போய் மளிகை கடை வைக்கத் திட்டமிடுகிறார்.

அவருடைய ஊர்காரர் ஒருவர் மெட்ராஸில் காஃபி கடை வைத்திருந்திருக்கிறார். அவரை சந்தித்து மளிகை கடை ஆரம்பிக்கும் திட்டத்தைச் சொல்லிருக்கிறார், செல்வரத்னம். அதற்கு, அவர் ‘இங்கே மளிகை கடை வேலைக்காகாது.

ஒரு பாத்திரக்கடை விலைக்கு வருது. அதை விலைக்கு வாங்கி நடத்துறியா ?’ என்று கேட்டிருக்கிறார்.

அவருடைய அறிவுறுத்தலின் பெயரில் ரங்கநாதன் தெருவில் இருக்கும் ஒரு பாத்திர கடையை விலைக்கு வாங்கி ‘சரவணா ஸ்டோர்ஸ்’ என்று மாற்றி வியாபாரத்தை ஆரம்பித்தார். பிறகு, அவரின் அண்ணன்களை வரவழைத்து வியாபாரத்தை பெரிதாக்குகிறார்.

செல்வரத்னம் இறந்தவுடன், அண்ணன்கள் சொத்துக்களைப் பிரித்து ஆளுக்கு கொஞ்சம் கொஞ்சம் கடையை பிரித்துக்கொண்டனர்.

யோகரத்னதிற்கு 4 மகன்கள். அதில் ஒருவர்தான் சரவணா அருள். அதாவது ‘லெஜண்ட்’. சிறுவயதிலிருந்தே கடை, வியாபாரம்மீது அதீத ஆர்வம் இருந்தது.

இவர் வளர்ந்த பிறகு, எடுத்த பெரும் முயற்சிதான் ‘தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ்’. இதில் எல்லாமே பிரமாண்டம்தான்.

தமன்னா, ஸ்ரேயா, ஹன்சிகா என அந்த சமயத்தில் எந்த ஹீரோயின் பீக்கில் இருக்கிறார்களோ அவர்களை வைத்துதான் விளம்பரம் எடுக்கணும். அதற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்பதில் மிக கவனமாக இருந்தார்.

அதேபோல, அந்த விளம்பரத்தை இயக்கும் இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், காஸ்ட்யூம் டிசைனர்கள், இசையமைப்பாளர்கள் என எல்லாமே டாப் ரேங்கில் இருப்பவர்கள்தான்.

லெஜண்ட் சரவணா

30 நொடி வரும் விளம்பரம்தானே என்று அசால்டாக நினைக்காமல், பிரமாண்ட சினிமாவிற்கு இணையாக பெரிய டெக்னீஷியன்களைதான் கமிட் செய்வது வழக்கம்.

அவர் நினைத்தது போல, எல்லா விளம்பரங்களும் சூப்பர் ஹிட்டானது. தானே தன் கடையின் விளம்பரத்தில் நடித்துவிடலாம் என அருள் முடிவு செய்ததுதான் டெர்னிங் பாயின்ட். ஒன்றா, இரண்டா ஏகப்பட்ட ட்ரோல்கள்.

ஆனால், மனம் தளரவில்லை. ‘என்ன பயமா இருக்கா ? இதுக்கு அப்புறம் இன்னும் பயங்கரமா இருக்கும்’ என பீஸ்ட் விஜய் மோடில் தொடர்ந்து பல கெட்டப்களில் விதவிதமான காஸ்ட்யூம்களில் காட்சி தந்தார்.

இவர் ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதில் இருந்து, சோஷியல் மீடியாக்களில் அதுகுறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. விளம்பரத்திலேயே அத்தனை பிரமாண்டம் காட்டும் இவர், சினிமாவில் என்ன பண்ண காத்திருக்காரோ என பேச்சுகள் கிளம்பின.

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களை இயக்கிய இயக்குநர்கள் ஜெ.டி – ஜெர்ரி இயக்கம், வேல்ராஜ் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜ் இசை, ரூபன் எடிட்டிங், எஸ். எஸ் மூர்த்தி கலை இயக்கம், வைரமுத்து, கபிலன், பா.விஜய், சிநேகன், மதன் கார்க்கி ஆகியோரது பாடல் வரிகள் என எல்லோரும் அவரவர் துறையில் கில்லி.

அதேபோல படத்தில் பிரபு, விவேக், விஜய குமார் முன்னணி நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது.

படத்தின் ப்ரோமோஷன் அனைத்தும் வைரலானது. குறிப்பாக, அரே நேரத்தில் 5 மொழியில் பேசியது.

ரஜினி, விஜய்தான் என் ரோல்மாடல், `என்னை ட்ரோல் செய்பவர்களுக்கு வாழ்த்துகள்!’ என சொன்னது ஆகியவை ஹைலைட். ஆடியோ லான்ச்சிற்கு இவர் வந்திறங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கூட பேசுபொருளானது.

அவரது கார், காஸ்ட்யூம் என அனைத்துமே ப்ரோமோசன் மெட்டீரியலானது. 50 வயது கடந்து தற்போது ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். வயது என்ற வார்த்தையை சொல்லி முடிப்பதற்குள், Age is just a Number என்ற பதில் இன்ஸ்டன்டாக வந்து விழுகிறது.

ஆல் ஹீரோஸ் அலெர்ட் ! ஒரு நாயகன் உதயமாகிறான்..! சாரி… உதயமாகிவிட்டான்…!

Share.
Leave A Reply

Exit mobile version