முகமது பாவாவின் நண்பர் எதிர்பார்க்காத, மகிழ்ச்சியான அந்தச் செய்தியை அவருக்குத் தெரிவிக்க அவரை அழைத்தபோது, அவருக்கு நிம்மதி கிடைத்த தருணமாக அது இருந்தது.

ஏறக்குறைய ஓராண்டாக அவர் வெல்ல முயன்ற லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் வென்றதாக முகமது பாவாவின் நண்பர் கூறினார்.

இது ஜூலை 25ஆம் தேதியன்று நடந்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு, பாவா தனது சொந்த ஊரான கேரளாவிலுள்ள காசர்கோட்டில் பிரபலமாகிவிட்டார்.

லாட்டரி இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் சட்டவிரோதமானது. ஆனால், கேரளா உட்பட சில மாநிலங்கள் கடுமையான மேற்பார்வை மற்றும் விதிமுறைகளின் கீழ் அதை அனுமதிக்கின்றன.

பாவாவுக்கு லாட்டரியில் கிடைத்த இந்த வெற்றி, இதைவிடச் சிறந்த நேரத்தில் கிடைத்திருக்க முடியாது. அவர் பல ஆண்டுகளாகப் பெரிய அளவிலான கடன்களில் சிக்கி இருந்தார்.

அவருக்குக் கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தைத் திருப்பிச் செலுத்த மிகவும் சிரமப்பட்டார். இது அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பெரும் நிதி நெருக்கடியையும், மன அழுத்தத்தையும் கொடுத்தது.

கடைசி முயற்சியாக, கடனை அடைக்க, வீட்டை விற்க பாவா குடும்பம் முடிவெடுத்தது. லாட்டரி வென்றது குறித்த அழைப்பு வருவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு, பாவா தனது வீட்டை விற்பதற்கான இறுதி வேலைகளை, அதை வாங்குபவரோடு செய்து கொண்டிருந்தார்.

 

ஜூலை 25ஆம் தேதியன்று மாலை 5:30 மணிக்கு, வீட்டை வாங்க வந்தவரைச் சந்தித்து, தனது வீட்டை விற்பதை உறுதிசெய்து, முன்பணத்தை வாங்க இருந்தார்.

ஆனால், விதி வேறு திட்டங்களைக் கொண்டிருந்தது. அவருடைய நண்பர் கணேஷ் அழைத்த அந்தச் சரியான தருணத்தை அவர் இன்னும் நினைவில் வைத்துள்ளார்.

பிற்பகல் 3:20 மணிக்கு, கணேஷிடமிருந்து அன்றைய லாட்டரி முடிவுகள் குறித்த வாட்ஸ் ஆப் செய்தி அவருக்கு வந்தது. அதைத் தொடர்ந்து உடனே அவரிடமிருந்து அழைப்பும் வந்தது.

“நான் மிகவும் நிம்மதியடைந்தேன். நான் உதவி கேட்க இனி யாருமே இல்லை என்னுமளவுக்கு அனைவரையும் தேடிப் போய்விட்டேன்.

இதன்மூலம் எங்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை,” என்று பாவா  கூறினார்.

வரிகளைக் கழித்த பிறகு, பாவாவுக்கு 63 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் எப்போது பணத்தைப் பெறுவார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், கடன் கொடுத்தவர்கள் அவருடைய கதவுகளைத் தட்டுவதை நிறுத்திவிட்டதால் அவர் இப்போது கவலைப்படவில்லை.

“நான் வெற்றி பெற்ற பிறகு, கடன் கொடுத்தவர்கள் அமைதியாகிவிட்டார்கள். பணம் இல்லாதபோது, அதைக் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

ஆனால், கடைசியாக எனக்குப் பணம் கிடைத்ததை அறிந்தவுடன், அனைவரும் அமைதியாகிவிட்டனர்,” என்று கூறினார்.

பாவா குடும்பத்தினர் ஒரு காலத்தில் கடன் இல்லாத நடுத்தரக் குடும்பமாக இருந்தது. பாவா கட்டுமானத் துறையில் ஒப்பந்ததாரராகப் பணியாற்றினார்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வேலை பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோவிட்-19 தொற்று நோய் பேரிடர் இந்தியாவையும் உலகையும் தாக்கிய பிறகுதான் விஷயங்கள் மோசமாகின.

கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் லாட்டரி விற்கும் கடை

அவர் வேலை தேடுவதில் மிகவும் சிரமப்பட்டார். அவருடைய கடன்கள் அதிகரித்துக் கொண்டேயிருந்தன. கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்தார்.

அவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். அவர்களில் இருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. பாவா திருமணத்திற்குச் செலவு செய்தார். அது மேலும் அவருடைய நிதி நெருக்கடியை மோசமாக்கியது.

கத்தாரில் நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மகனுக்கான பயணச் செலவையும் செய்தார். இதற்காக அதிக பணத்தைக் கடனாக வாங்கியுள்ளார்.

அவருடைய பணி நிலை மேம்படும் என்றும் இந்த ஜூலை வரையிலான கணக்குப்படி அவருக்கு இருந்த சுமார் 50 லட்சம் ரூபாய் கடனையும் தன்னால் அடைத்துவிட முடியும் என்றும் அவர் நம்பிக்கை வைத்திருந்தார்.

“திருமண செலவால் சுமார் 10 முதல் 15 லட்சம் வரை கடன் ஏற்பட்டது,” என்று கூறும் அவர், “நான் அனைவருக்கும் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், வருமான ஆதாரம் இல்லை,” என்கிறார்.

இப்படிப் பெருகிக் கொண்டிருந்த கடன், பாவா குடும்பத்தைக் கவலையடையச் செய்தது. வேறு வருமானம் அல்லது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழியைக் கண்டுபிடிக்கத் தவறியதால், அவர்கள் தங்கள் வீட்டை விற்க வேண்டிய கடினமான முடிவை எடுத்தனர்.

அவர்கள் சமீபத்தில்தான் தங்கள் கனவு இல்லத்திற்குக் குடி பெயர்ந்திருந்தனர். இப்போது அதை விற்றாக வேண்டியிருந்தது.

பாவா குடும்பம் தங்களது வீட்டை சந்தையில் விற்பனைக்கு வைப்பதற்கு முன்பாக ஒரு வாடகை வீட்டிற்குக் குடிபோனது.

 

ஆனால், அவர் ஓராண்டாக லாட்டரி மூலம் தனது அதிர்ஷ்டத்தை முயன்று பார்த்தார். ஆனால், அதில் பெரியளவில் வெற்றி பெறவில்லை.

அவர் இதுவொரு அவநம்பிக்கையான நடவடிக்கை என்றும் லட்சத்தில் ஒன்றாக அவருடைய வாய்ப்புகள் இருந்ததால், வெற்றி பெற ஓர் அதிசயம் தேவை என்று தனக்குத் தெரியும் என்றும் கூறுகிறார். அதில் வெற்றி கிடைக்கும் என்று ஓராண்டாகக் காத்திருந்தவர், இறுதியில் அதைக் கைவிட்டுவிட்டு தனது வீட்டை விற்க முடிவெடுத்தார்.

லாட்டரி சீட்டு விற்கும் சிறிய கடையை நடத்தி வந்த தனது நண்பர் கணேஷிடம்தான் அவர் லாட்டரி டிக்கெட் வாங்குவார்.

தினமும் அவரிடம் டிக்கெட் வாங்கிக்கொண்டு, அதில் தான் வெற்றிபெறவில்லை என்பதை கணேஷிடம் இருந்து தெரிந்து கொள்வார். இந்த வழக்கம் ஓராண்டாகத் தொடர்ந்தது.

தன் நண்பர் வெற்றி பெற்றதை அறிந்த கணேஷ் சிலிர்த்துப் போய், உடனே முகமது பாவாவுக்கு அழைத்தார்.

“நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள்,” என்று பாவாவிடம் தொலைபேசி அழைப்பில் கணேஷ் கூச்சலிட்டார்.

கணேஷின் இந்த வார்த்தைகளை பாவா நினைவில் வைத்துள்ளார். அவர் உண்மையில் காப்பாற்றப்பட்டார்.

அவருடைய கைபேசிக்கு அழைப்பு வந்தபோது, பாவாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

பரிசுத் தொகை ஒரு பெரிய தொகையாகத் தோன்றலாம். ஆனால், பாவா தனது கடனை அடைத்த பிறகு அதில் அதிகமாக அவர் கையில் மீதி இருக்காது. ஆனால், மீதமுள்ள தொகையை நல்ல முறையில் பயன்படுத்த விரும்புகிறார்.

அவர் ஏழைகளுக்குக் கொஞ்சம் பணத்தை தானம் செய்ய விரும்புகிறார். அதோடு, “கணேஷும் சொந்த வீடு இல்லாமல் கஷ்டப்படுகிறார்,” என்ற பாவா, தனது நண்பர் கணேஷுக்கு வீடு வாங்குவதற்கு உதவ விரும்புவதாகக் கூறுகிறார்.

Share.
Leave A Reply

Exit mobile version