ஜூலை 31 அன்று சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, காபூல் நகரத்தில் தனது வீட்டின் பால்கனியில் நின்று காற்று வாங்கிக் கொண்டிருந்தார் அமெரிக்காவை நெடுங்காலமாக அச்சுறுத்திக் கொண்டிருந்த அய்மன் அல்-ஜவாஹிரி.
தொழுகைக்குப் பிறகு இப்படிக் பால்கனியில் நின்று வெளியே பார்ப்பது அவருக்கு பிடித்தமான ஒன்று.
ஆனால் அதுவே அவர் செய்த கடைசிக் காரியம்.
உள்ளூர் நேரப்படி 06:18 மணிக்கு இரண்டு ஏவுகணைகள் பால்கனியைக் குறிவைத்துத் தாக்கியதில் 71 வயதான ஜவாஹிரி கொல்லப்பட்டார். ஆனால் அவரது மனைவியும் மகளும் காயமடையாமல் தப்பினர்.
தாக்குதலின்போது வீட்டின் பால்கனி மட்டுமே சேதமடைந்திருந்தது.
எப்படி இவ்வளவு துல்லியமாக தாக்க முடிந்தது? இதற்கு முன்பு பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும்போது பொதுமக்கள் பலியான சம்பவங்களில் கடுமையான விமர்சனங்களை அமெரிக்கா எதிர்கொண்டிருக்கிறது.
ஏவுகணையின் திறனும், ஜவாஹிரியின் பழக்கவழக்கங்கள் பற்றிய ஒரு துல்லியமான ஆய்வும் இப்போது தேவைப்பட்டது.
லேசர் துல்லியம்
பயன்படுத்தப்பட்ட ஏவுகணையின் வகை முக்கியமானது. மேலும் இவை அமெரிக்க அதிகாரிகளால் ட்ரோன் மூலம் செலுத்தப்படும் ஹெல்ஃபயர் என்று கூறப்பட்டது.
இது வானில் இருந்து ஏவப்படும் ஏவுகணையாகும். இது செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு, இரு தசாப்தங்களில் அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக மாறியுள்ளது.
ஹெலிகாப்டர்கள், தரை வாகனங்கள், கப்பல்கள், விமானங்கள் உட்பட பல்வேறு தளங்களில் இருந்து இந்த ஏவுகணையை ஏவ முடியும். ஜவாஹிரியைப் பொறுத்தவரை ஆளில்லா விமானத்தில் இருந்து ஏவப்பட்டிருக்கிறது.
ஹெல்பயர்
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாக்தாத்தில் ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானியையும், 2015 இல் சிரியாவில் “ஜிஹாதி ஜான்” என்று அழைக்கப்படும் பிரிட்டனில் பிறந்த ஐ.எஸ். ஜிஹாதியையும் கொல்ல அமெரிக்கா ஹெல்ஃபயர் ஏவுகணையைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.
ஹெல்ஃபயர் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதற்கான முக்கிய காரணம் அதன் துல்லியத்தன்மை.
ஆளில்லா விமானத்தில் இருந்து ஏவுகணை ஏவப்படும் போது, வெகு தொலைவில் உள்ள குளிரூட்டப்பட்ட கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து ஒரு கமாண்டர் அதை நேரடியாக இயக்குவார்.
ஆளில்லா விமானத்தின் கேமரா சென்சார்கள் செயற்கைக்கோள் வழியாக காட்சிகளையும் தகவல்களை அளித்துக் கொண்டிருக்கும்.
ஒரு வீடியோ கேமைப் போல திரையில் தோன்றும் இலக்கை லாக் செய்து அதன் மீது தாக்குதல் நடத்த முடியும்.
இலக்கு தாக்கப்படும்வரை லேசர் ஒளியானது இலக்கைக் குறிவைக்க உதவுகிறது. ஏவப்படும் ஏவுகணை அந்த லேசரின் பாதையைப் பின்பற்றிச் செல்லும்.
பொதுமக்களின் உயிரிழப்பைத் தவிர்ப்பதற்காக, தாக்குதலுக்கு முன் எடுக்க வேண்டிய தெளிவான நடைமுறைகளை அமெரிக்கா வகுத்திருக்கிறது.
அமெரிக்க ராணுவமும், சிஐஏ போன்ற அமைப்புகளும் இவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பொதுமக்கள் இறக்கும் அபாயம், இலக்கு வைக்கப்பட்ட நபரின் மதிப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமநிலையை ராணுவம் பேண வேண்டியிருக்கும் என்று சைராகஸ் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு நிபுணர் வில்லியம் பேங்க்ஸ் கூறுகிறார்.
ஜவாஹிரி மீதான தாக்குதல் “இந்தச் செயல் முறையின் ஒரு முன்மாதிரி போலத் தெரிகிறது” என்று அவர் கூறினார்.
ஜவாஹிரி மீது தாக்குதல் நடத்தும்போது வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் அமெரிக்கா கவனமாக இருந்திருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.
இதற்காக பெரிய அளவில் அறியப்படாத ஹெல்பயர் ஏவுகணையின் R9X என்ற வகையை அமெரிக்கா பயன்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் இது உறுதி செய்யப்படவில்லை.
இது தனது ஆறு பிளேடுகளைப் பயன்படுத்தி இலக்ககை நோக்கிப் பாய்ந்து செல்லும்.
2017 ஆம் ஆண்டில், மற்றொரு அல்-காய்தா தலைவரும் ஜவாஹிரியின் பிரதிநிதிகளில் ஒருவருமான அபு கைர் அல்-மஸ்ரி சிரியாவில் R9X ஹெல்பயர் மூலம் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வாகனத்தின் கூரையில் ஒரு துளையை வெட்டி அதில் இருந்தவர்களைத் துண்டாக்கியதைக் காட்டின.
ஆனால் வெடிப்பு ஏற்பட்டதற்கோ வாகனத்திற்கு வேறு சேதம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இதுதான் இந்த ஏவுகணையின் சிறப்பு.
பால்கனி பழக்கத்தை கண்காணித்த அமெரிக்கா
காபூல் நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன்பு அமெரிக்கா என்ன உளவுத் தகவல்களைச் சேகரித்தது என்பது பற்றிய விவரங்கள் இன்னும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
காபூல்
இருப்பினும், தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க அதிகாரிகள் ஜவாஹிரியின் வீட்டில் “வாழ்க்கை முறை” – அவரது பால்கனி பழக்கம் போன்றவற்றைப் புரிந்துகொள்ள போதுமான தகவல்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறினர்.
இதற்காக அமெரிக்க உளவாளிகள் ஜவாஹிரியின் வீட்டை பல மாதங்களாகக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
சிஐஏவின் முன்னாள் மூத்த அதிகாரி மார்க் பாலிமெரோபௌலோஸ் பிபிசியிடம் கூறுகையில், தாக்குதலுக்கு முன்பு தரையில் உள்ள உளவாளிகள் மற்றும் உளவுத்துறையை சமிக்ஞை செய்வது உட்பட பல்வேறு உளவுத்துறை உத்திகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
அமெரிக்க ஆளில்லா விமானங்கள் அல்லது விமானங்கள் கீழே தரையில் இருந்து கேட்கப்படாத மற்றும் காணப்படாத வகையில் பல வாரங்கள் அல்லது மாதங்களுக்கு அன்த இடத்தைக் கண்காணித்து வருகின்றன என்றும் சிலர் ஊகித்துள்ளனர்.
இது போன்ற தாக்குதல்கள் சர்வதேச கண்டனத்தில் இருந்து தப்பிப்பதற்கு அமெரிக்காவுக்கு உதவும்.
ஆயினும் எல்லா நேரங்களிலும் இது சரியாக நடப்பதில்லை. 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டில் காபூல் விமான நிலையத்திற்கு அருகே ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு காரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 10 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.