அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று எஞ்சின் கோளாறு காரணமாக சாலையில் தரையிறக்கப்பட்டிருக்கிறது.

இதனால், பெரும் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

சாலையில் தரையிறங்கிய விமானம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று மதியம் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. சிறிய ரக விமானத்தை ஒட்டிச் சென்ற விமானி எஞ்சின் பழுதடைந்ததை உணர்ந்திருக்கிறார்.

இதனையடுத்து அருகில் உள்ள விமான நிலையத்துக்கு செல்ல முடிவெடுத்த அவர், விமானத்தின் செயல்திறன் குறைந்ததால் வேறு வழியின்றி சாலையில் விமானத்தை தரையிறக்க முடிவெடுத்திருக்கிறார்.

 

கலிபோர்னியாவின் லிங்கன் அவென்யூ அருகே ரிவர்சைடு கவுண்டியில் உள்ள கிழக்கு சாலையில் விமானத்தை தரையிறக்கியுள்ளார் விமானி.

அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த ட்ரக்கில் விமானம் மோதியிருக்கிறது. இதனையடுத்து விமானம் தீப்பிடித்திருக்கிறது.

இருப்பினும் விமானி மற்றும் பயணி ஆகியோர் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேறியதாக கலிபோர்னியா நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கோளாறு

மேலும், விமானம் மோதிய ட்ரக்கிற்குள் 3 பேர் இருந்ததாகவும் அதிர்ஷ்டவசமாக அவர்களும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கலிபோர்னியாவில் அமைந்துள்ள கொரோனா முனிசிபல் விமான நிலையத்தில் தரையிறங்கச் சென்றபோது இயந்திரக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அவசரமாக தரையிறங்கியதாக விமானி கூறியதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இருப்பினும் விமானத்தில் இருந்து எரிபொருள் வெளியேறியதால் விமானம் தீப்பிடித்திருக்கிறது. இதனால் அந்த பகுதியே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.

சாலையில் விமானம் தரையிறங்கியதால் அந்த சாலையை அதிகாரிகள் மூடியிருக்கிறார்கள்.

உடனடியாக விரைந்துவந்த தீயணைப்பு துறையினர் விமானத்தில் ஏற்பட்ட தீயினை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். இருப்பினும் விமானத்தின் பெரும்பான்மையான பாகங்கள் எரிந்து சாம்பலாகின.

இதுகுறித்து பேசிய கலிபோர்னியா நெடுஞ்சாலை துறையை சேர்ந்த கேப்டன் லெவி மில்டர்,”நாங்கள் ஒருவகையில் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் இந்த சாலையில் போக்குவரத்து குறைவாக இருந்தது.

அதேபோல விமானியும் சரியான வழிமுறையில் விமானத்தை தரையிறக்கியதாக தெரிகிறது.

இல்லையென்றால் சேதம் அதிகரித்திருக்கக்கூடும்” என்றார். இதனிடையே விமானம் சாலையில் தரையிறங்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Share.
Leave A Reply

Exit mobile version