பிரான்ஸில் பிறந்து வளர்ந்த தனது மூன்று மகள்களையும் அந்நாட்டை சேர்ந்தவர்களுக்கு தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளனர் தமிழ்நாட்டை சேர்ந்த பெற்றோர்.

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட மாசிலாமணி – ஆனந்தி தம்பதியினர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகின்றனர்.

பிரான்சில் மாசிலாமணி தனியார் உணவகத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு காயத்ரி, கீர்த்திகா, நாராயிணி என மூன்று மகள்கள் உள்ளனர். தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் மூவரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர்களை காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் காதலுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத மாசிலாமணி – ஆனந்தி தம்பதியினர் அவர்களுக்கு தமிழ் கலாசார முறைப்படி திருமணம் முடித்து வைக்க விரும்பினர்.

அதன்படி மகள்கள் மூவருக்கும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள்.

தமிழகத்தில் திருமணம்

இது குறித்து தமிழகத்தில் உள்ள தனது உறவினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

 

அதனைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (ஆக. 14) பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த மாசிலாமணி – ஆனந்தி தம்பதியினர் தங்களின் மூன்று மகள்களுக்கும் ஒரே நேரத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ், ராம்குமார், மஜ்ஜூ என்ற மூவருடன் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வைத்து திருமணம் செய்து வைத்தனர்.

தமிழ்நாட்டின் முறைப்படி திருமணம் செய்து கொண்ட காயத்ரி – ஜார்ஜ், கீர்த்திகா- ராம்குமார், நாராயிணி – மஜ்ஜூ மணமக்களை உறவினர்கள் வாழ்த்தினர்.

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தை ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

திருமணம்

வெளிநாட்டில் பிறந்து அங்குள்ள கலாசாரத்தில் வளர்ந்து இருந்தாலும் தமிழ் கலாசாரத்தை மதிக்கும் விதமாக தங்கள் 3 பிள்ளைகளுமே வாழையடி வாழையாக வாழ வேண்டும் என விரும்பி தமிழர் கலாசாரத்தில் திருமணம் செய்து வைத்ததாக தாய் ஆனந்தி தெரிவித்தார்.

ஒன்றிணைந்த கலாசாரம்

தமிழர் பாரம்பரியத்தை மதிப்பதால் தமிழகத்தில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்த மணமகள் காயத்ரி இந்த திருமணத்தால் இரு நாட்டு கலாசாரமும் ஒன்றிணைந்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு மணமகன் மஜ்ஜூ இதுகுறித்து பேசுகையில், தங்கள் நாட்டில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வதை விட தமிழ் கலாசார முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டது தனக்கு ஒரு புதிய உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

தாங்கள் சூடியுள்ள மண மாலையின் பூக்களுக்கு உயிர் இருப்பதாக உணர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர், “உறவினர்கள் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டது ஒரு மதிப்புமிக்க நிகழ்வாக உள்ளது. இந்த திருமணத்தால் கலாசாரங்கள் ஒன்றிணைகிறது. அன்பு மட்டும் தான் அனைத்துக்கும் ஆதாரம்” என தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version