Site icon ilakkiyainfo

கோட்டாவுக்கு நாமலின் வீட்டுக்கு அருகே பாதுகாப்பான வீடு !

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, நாட்டிலிருந்து தப்பிச் சென்ற பின்னர் பதவி துறந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை 3 ஆம் திகதி மீள நாடு திரும்பவுள்ளதாக அவருக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை பிரகாரம் இதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். அதன் பிரகாரமே அவர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளதாக அறிய முடிகின்ரது.

அவ்வாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பினால், அவருக்கு கொழும்பு 7, பெளத்தலோக்க மாவத்தை மற்றும் மலலசேகர மாவத்தை ஆகியவற்றுக்கு அருகே அமைந்துள்ள அரச வீடொன்றினை வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தற்போது முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வசிக்கும் வீட்டுக்கு அருகே இந்த வீடு வழங்கப்ப்டவுள்ளதாக அறிய முடிகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடு திரும்பி தனது மிரிஹானை இல்லத்தில் வாழ விரும்பினாலும், அவரது பாதுகாப்பை கருத்திற்கொண்டு, முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்க வேண்டிய வரப்பிரசாதம் என்ற அடிப்படையில் இந்த வீட்டை வழங்க அரசாங்கம் ஆலோசித்துள்ளதாக அறிய முடிகிறது.

கடந்த ஜூலை 9 ஆம் திகதி மக்கள் போராட்டத்தைஅ டுத்து கோட்டாபய ராஜபக்ஷ முதலில் மாலை தீவுக்கு தப்பிச் சென்ற நிலையில், பின்னர் அங்கிருந்து சிங்கப் பூருக்கு சென்றிருந்தார்.

சிங்கப் பூரிலிருந்து தாய்லாந்து சென்ற அவர், அங்கிருந்தே நாடு திரும்பவுள்ளதாக அறிய முடிகின்றது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பாக நாடு திரும்ப தேவையான நடவடிக்கைகளை அவருக்கு செய்துகொடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க, ஆணையாளர் கலாநிதி நிமல் கருணாசிறி ஆகியோரின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பரிந்துரை கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்ட ரீதியாக கிடைக்கும் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் உறுதியளிக்கும் வரை கோட்டாபய ராஜபக்ஸவினால் நாடுகு திரும்ப முடியாமற்போயுள்ளதாக, முறைப்பாடு ஆணைக் குழுவுக்கு கிடைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அச்சுறுத்தல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்ட ரீதியில் கிடைக்க வேண்டிய பாதுகாப்பை வழங்கி அவர் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். .

முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் மற்றும் வசதிகள் கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் கிடைக்க வேண்டும்.

எந்தவொரு பிரஜையும் மீண்டும் தமது சொந்த நாட்டிற்கு திரும்புவதற்காக அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அது கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பொருந்தும்.’ என மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version