Site icon ilakkiyainfo

இலங்கைக்கு திரும்பிவிட்ட கோத்தபாய ராஜபக்சே… தலைக்கு மேலே கத்தி..தூக்கத்தை தொலைத்துவிட்ட ரணில்!

கொழும்பு: மக்கள் கிளர்ச்சியை எதிர்கொள்ள முடியாமல் கோழைத்தனமாக இலங்கையை விட்டு நாடு நாடாக ஓடி ஓடி ஒளிந்த இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய மீண்டும் இலங்கைக்கே திரும்பிவிட்டார்.

இலங்கை திரும்பிய கோத்தபாய ராஜபக்சேவை முன்வைத்து ராஜபக்சேக்கள் சதிராட்டத்தைத் தொடங்குவார்கள் என்பதால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே நெருக்கடி உருவாகவும் தொடங்கிவிட்டது என்கின்றனர் கொழும்பு பத்திரிகையாளர்கள்.

இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து மகிந்தவும், ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாயவும் அவர்களை கொண்டாடி தேர்ந்தெடுத்த சிங்களவரே ஓட ஓட பதவியில் இருந்து விரட்டியடித்தனர்.

இதில் கோத்தபாய ராஜபக்சே, மாலத்தீவு- சிங்கப்பூர்- தாய்லாந்து என சிங்களரின் தாக்குதலுக்கு அஞ்சி நாடு நாடாக ஓடி ஓடி தஞ்சம் அடைந்தார்.

இதனால் ராஜபக்சேக்களின் அரசியல் சகாப்தம் பெரும் கேள்விக்குள்ளாகிப் போனது.

ராஜபக்சேக்களின் கூட்டாளி ரணில்

ஆனால் அப்படி ஒன்றும் ஆட்சி அதிகாரங்களைப் பறிகொடுத்துவிட்டுப் போக சந்திரிகாவோ மைத்திரிபால சிறிசேனவோ நாங்கள் இல்லை என்பதில் ராஜபக்சேக்கள் உறுதியாகவே உள்ளனர்.

இதனால்தான் பொதுவெளியில் பரம எதிரியாக காட்டிக் கொண்ட ரணில் விக்கிரமசிங்கேவை பிரதமராக்கி இப்போது ஜனாதிபதியாக்கி வைத்துள்ளனர் ராஜபக்சேக்கள்.

இலங்கை அரசியலை அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த வெளிப்படையான ஒன்று ராஜபக்சேக்களுக்கும் ரணில் விக்கிரமசிங்கேவுக்குமான திரைமறைவு கூட்டணி.

ரணிலின் கோர முகம் கண்ட இலங்கை

இப்போது இலங்கையின் ஜனாதிபதியாக, மீட்பர் முகத்துடன் நிற்கின்ற ரணில் மிக மோசமான ஒரு சர்வாதிகாரியாக உருமாறி மக்கள் கிளர்ச்சியை மூர்க்கமாக முடக்கி வைத்திருக்கிறார். வீடுகளை எரித்தவர்கள், ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தவர்கள் என ஒருவரையும் விட்டு விட்டு வைக்காமல் பல்லாயிரக்கணக்கில் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்.

இத்தனை ஒடுக்குமுறைகளை அரங்கேற்றிவிட்ட பிறகே கோத்தபாய ராஜபக்சே இலங்கைக்குள் வருவதற்கான சிவப்புக் கம்பளத்தை விரித்து வைத்தார் ரணில். இதோ, கோத்தபாய ராஜபக்சே மீண்டும் இலங்கைக்குள் வந்துவிட்டார்

ராஜபக்சேக்கள் சும்மா இருப்பார்களா? இலங்கையின் மாஜி ஜனாதிபதிகளைப் போல கோத்தபாய ராஜபக்சே, வீட்டுக்குள்ளே முடங்கிப் போய் மன அழுத்தங்களுக்கு உள்ளாகக் கூடியவரா எனில் இல்லை என்பதே பொதுவான அரசியல் பார்வையாளர்கள் கருத்து. இதற்கு அமைய கடந்த சில நாட்களாக, ஒடுங்கிக் கிடந்த மகிந்த ராஜபக்சே தீவிர அரசியல் பிரவேசத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

கோத்தபாயவும் மகிந்தவும் சும்மா இருக்கப் போவது இல்லை என்பதற்கு முன்னோட்டமாக, இனி நியமன எம்.பியாவார்; பிரதமராவார் கோத்தபாய என்கிற செய்திகள் இடைவிடாமல் பரப்பி விடப்படுகின்றன.

பிரதமர் பதவி மீண்டும் ஜனாதிபதி?

இது எல்லாம் இலங்கையில் சாத்தியமா? என்றால் ராஜபக்சேக்கள் நினைத்தால் சாத்தியமாகும் என்பதை இலங்கை மக்கள் மட்டுமல்ல ரணில் விக்கிரமசிங்கேவும் நன்கு அறிவார்.

இலங்கையின் 113 எம்.பிக்கள், கோத்தபாய ராஜபக்சேவை பிரமராக்க கையெழுத்திட்டால் அது சாத்தியமாகிவிடும்.

இன்னொருபக்கம் 134 எம்.பிக்கள் ஜனாதிபதியாக கோத்தபாயவையே மீண்டும் நியமிக்கலாம் என கையெழுத்துப் போட்டுவிட்டால்ல்.. ஏனெனில் இப்போது ரணிலை ஆதரிக்கும் அத்தனை எம்.பி.க்களும் ராஜபக்சேக்களின் முகாமை சேர்ந்தவர்..

இதை ரணில் உணராமல் இல்லை.. கோத்தபாயவை ஊருக்குள் நுழையவிட்டுவிட்ட ரணில் விக்கிரமசிங்கே இப்போது மவுனமாக விழிமூடா இரவுகளைக் கடத்திக் கொண்டுள்ளார்.

Exit mobile version