முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் நான்கு மாத காலப்பகுதிக்கு அமரிக்கா சென்று தங்கியிருக்க உயர் நீதிமன்றம் இன்று ( 2) அனுமதி வழங்கியது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர், வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று உயர் நீதிமன்றில் பசில் ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நவீன் மாரப்பனவுடன் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன முன் வைத்த வாதங்களை அடுத்து இந்த அனுமதியளிக்கப்பட்டது.

மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளல் மற்றும் தனிப்பட்ட காரணத்திற்காக அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு செல்ல எதிர்பார்ப்பதால், அதற்கான அனுமதியை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன இதன்போது வாதங்களை முன் வைத்து கோரியிருந்தார்.

இந் நிலையிலேயே பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, , விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி. தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் அது குறித்து ஆராய்ந்து, எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வரையில், பசில் ராஜபக்ஷ வெளிநாட்டில் இருப்பதற்கான அனுமதியை அளித்தது.

Share.
Leave A Reply

Exit mobile version